Showing posts with label Call Sign. Show all posts
Showing posts with label Call Sign. Show all posts

Saturday, April 21, 2018

ஹாம் வானொலிப் போட்டிகள்


ஹாம் வானொலி என்பது ஒரு அறிவுப்பூர்வமான ஊடகம். இதன் துணைகொண்டு நாம் நம் பொது அறிவினை மட்டுமல்லாது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. உலக அளவில் ஹாம் வானொலித் தொடர்பாக பல போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் கலந்து கொள்வதன் மூலம், உலக அளவில் புகழ்பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஹாம் வானொலிப் போட்டிகள்

ஹாம் வானொலிப் போட்டிகளில் ஹாம்கள் கலந்து கொள்வது என்பது ஒரு வகையில் அவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கானது என்று வைத்துக்கொள்ளலாம். காரணம், வெறுமனே, ஹாமாக இருப்பதில் ஒன்றும் சுவாரஷ்யம் இல்லை. ஹாம் போட்டிகளில் உடனுக்குடன், அவரவர்களின் அடையாளக் குறியீடுகள் பகிர்ந்துகொள்ளப்படுவதுடன், குறுகிய வாக்கியங்களாக தகவல்களையும் பகிர்ந்து கொண்டு அடுத்த தொடர்புக்கு சென்று விடுவர். காரணம் போட்டிகளில் யார் அதிக ஹாம்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்பு கொள்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம்.

ஒரு சில போட்டிகளில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக தொலைதூர நாடுகளில் இருந்து வரும் ஹாம் வானொலிகளைப் பிடிப்பது அனைவருக்குமே சவாலான ஒன்று தான். அதுவும் குறைந்த சக்தியில் ஒலிபரப்பும் ஹாம் வானொலிகளைப் பிடிப்பது என்பது  யாருக்குமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு தான். பொதுவாகவே இது போன்ற ஹாம் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொழுது ஒரு சில சட்ட திட்டங்களை கொண்டு செயல்படுவது இன்றியமையாததாகும். அவை,

ஹாம் வானொலிகளோடு உரையாடும் பொழுது சுருக்கமாக முடித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஹாம்களின் அழைப்பு குறியீடுகளை (Call Sign) தெளிவாகக் கேட்டுக்கொண்டு, உங்களின் சிக்னல் எப்படி அவருக்கு கிடைக்கிறது என்பதனையும் தெரிந்து கொண்டு தொடர்பினை துண்டிப்பது நல்லது. காரணம், இது போன்ற அரிதான ஹாம் நிலையத்தினை தொடர்பு கொள்ள நம்மைப் போன்றே பலரும் ஆவலுடன் இருப்பர். மேலும், நமக்கும் கூடுதலாக நேரம் கிடைப்பதால், இன்னும் இரண்டு ஹாம்களை அந்த நேரத்தில் பிடித்துவிடலாம். எனவே போட்டிகளின் போது சுருக்கம் மிக அவசியம். காலமும் காலநிலையும் பின்பொரு சமயத்தில் கைக்கொடுக்கும் பட்சத்தில் அந்த தொடர்பினை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

போட்டியில் கலந்துகொள்ளும் பொழுது, உங்களிடம் தொடர்பு கொள்ளும் நிலையம் முதலில் என்ன சொல்லவருகிறது என்பதைத் தெளிவாகக் கேளுங்கள், அதன் பின், அந்த நிலையம் எங்கே இருந்து ஒலிபரப்புகிறது. பொதுவாக இது போன்ற போட்டிகளில், ZONE-களின் எண்கள் பறிமாற்றம் செய்துகொள்ளப்படும். மேலும் போட்டி நடத்துபவர்கள், ஒரு சில எண்களைக் கொடுத்திருப்பர். அப்படியான சமயத்தில், அந்த எண்களை மனதில் பதிய வைத்துக்கொள்வது நலம் தரும்.

போட்டிகளுக்கு நுழைவதற்கு முன் போட்டியின் நிபந்தனைகளைத் தெளிவாக படித்துக்கொள்வது நலம். காரணம், தேவையற்ற குழப்பத்தினை போட்டியின் போது தவிர்க்கலாம். என்ன விதமான தகவல்களை போட்டியாளர்கள் கேட்கிறார்கள் என்பதனைப் பொருத்து, உங்களின் உரையாடலில் அவை இருக்க வேண்டும். பொதுவாக சிக்னல் ரிப்போர்ட்களும், இடங்களும் மட்டுமே பறிமாற்றம் செய்துகொள்ளப்படும். ஒரு சில சமயங்களில் வரிசை எண்கள் பறிமாற்றம் செய்து கொள்ளப்படும். நீங்கள், எத்தனையாது தொடர்பாளர் என்பதனை எதிர்புறம் இருந்து உங்களுக்கும், உங்களின் தொடர்பில் அவரின் வரிசை எண்ணையும் தெளிவாக பறிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பொதுவான ஒரு சில சட்ட திட்டங்களை சர்வதேச அமெச்சூர் சொசைட்டிகள் வடிவமைத்துள்ளன. அவற்றை பல மன்றங்கள் தங்களின் இணைய தளங்களில் தெளிவாக வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஏ.ஆர்.ஆர்.எல் மன்றம் www.arrl.org/contest-calendar எனும் முகவரியில் இதனை விரிவாக பதிவேற்றம் செய்துள்ளது. மற்றொரு குழுவான ஹார்னுகோஃபியா www.hornucopia.com/contestcal எனும் முகவரியில் சற்றே விரிவாக விளக்கியுள்ளது. அது மட்டுமல்லாது, QST மாத இதழும்,Contest Corral எனும் தலைப்பில், ஹாம் போட்டிகளை மையப்படுத்திய தொடரை வெளியிட்டு வருகிறது.

மிக முக்கியமாக ஹாம் வானொலி போட்டியில் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவர் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். பல நாடுகளில் உள்ள ஹாம்களுக்கு தங்களின் இருப்பிடம், அழைப்புக் குறியீடு, சிக்னல் ரிப்போர்ட் மட்டுமே ஆங்கிலத்தில் கொடுக்கத் தெரியும், மற்றவற்றை அவர்களிடம் கேட்டாலும் பதில் கிடைக்காது. அதனால் தான் பொதுவான மொழியாக ‘க்யூ’ குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த க்யூ குறியீடுகள் துணை கொண்டு மொழி தெரியாத நாட்டினருடனும் எளிதாக தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

Wednesday, June 28, 2017

ஹாம் வானொலி ஒரு அறிமுகம் – 1



ஹாம் வானொலி எனப்படும் அமெச்சூர் வானொலிப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை. சொல்வதற்கும் சொற்பமானவர்களே உள்ளனர். ஏன் இது பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்? இன்றைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்கின்றன. ஹாம் வானொலியும ஒரு விதத்தில் பொழுபோக்கு அம்சமாக இருந்தாலும், இதன் பயன் வேறுபட்டது.

மிக முக்கியமாக ஹாம் வானொலியின் பயன் இயற்கை சீற்றங்களின் போது தான். அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துவிட்ட சூழ்நிலைகளில் இந்த ஹாம் வானொலிகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. ஆபத்துகால மேலாண்மையின் அனைத்து நாடுகளிலும் இதன் பங்கு பெரியது.

இன்றைய மின் அஞ்சல் மற்றும் முகநூல் காலகட்டத்திற்கு முன் நாம் அனைவரும் வானொலியையே ஹாம் வானொலியையே சார்ந்து இருந்தோம். அதற்கு காரணம் ஒரு பைசா செலவு இல்லாமல் உலகம் முழுவதும் ஹாம் வானொலி ஊடாக பேசிக்கொள்ளலாம். அதுவும் ஆபத்து காலகட்டத்திலும், இயற்கை சீற்றங்களின் போதும் இதன் பயன் அளவிடமுடியாதது.
இன்றும் ஹாம் வானொலியின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் இன்றைய ஹாம் வானொலிகள் படங்களையும் இணையத்தினையும் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. இது பெரும்பான்மையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தினை ஹாம் வானொலியோடு தொடர்புபடுத்தினால் செலவு எதுவும் இல்லாமல் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை தொடர்ந்து இந்தத் தொடரில் காணலாம்.

இந்தத் தொடரில் ஹாம் வானொலி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? உங்களுக்கான குழுவை எப்படி இதன் ஊடாக கண்டுபிடிப்பது. ஹாம் வானொலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஹாம் வானொலி உரிமத்தினை இந்தியாவில் பெற என்ன செய்ய வேண்டும். எப்படி எளிதாக ஹாம் தேர்வில் தேர்ச்சி பெறலாம்? உங்களுக்கான அடையாள குறியீட்டினை (Call Sign) எப்படி எளிதாகத் தேர்வு செய்வது போன்றவற்றை பார்க்கலாம்.

ஹாம் வானொலிகளை பயன்படுத்துவதற்கு முன் அது எந்த வகையான வானொலி அலைவரிசைகளில் கேட்கலாம். அதற்கான வானொலிப் பெட்டிகள் எவை? SSB, FM, HF, VHF மற்றும் UHF அலைரிசைகள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள இந்தத் தொடர் பயன்படும். பெரும்பான்மையோர் இது என்ன புதுக் கதை எனக் குழம்ப அவசியம் இல்லை. இவை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கவுள்ளோம்.

மேலும் உங்களுக்கான வானொலி நிலையத்தினை உங்கள் இல்லத்திலேயே குறைந்த செலவில் எப்படி அமைத்துக்கொள்வது? அந்த வானொலியில் எவற்றையெல்லாம் பேசலாம்? உலகம் முழுவதும் உங்கள் வானொலியை ஒலிக்கச் செய்ய எந்த வகையான ஆண்டனாக்களைப் பயன்படுத்தி ஒலிபரப்பலாம்? போன்றவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

ஹாம் வானொலியைப் பயன்படுத்துவது ஒரு கலை. எப்படி சர்வதேச ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்வது? உள்நாட்டில் உள்ள நிலையங்களை எப்படி அனுகுவது? சர்தேவ போட்டிகளில் எப்படி கலந்துகொள்வது போன்ற விபரங்களையும் காணலாம்.

ஹாம் வானொலி நிலையம் உங்களுடையது எனில் நீ்ங்கள் தான் அதன் இயக்குனரும் ஆவீர்கள். அப்படியான பணியில் உள்ள நீங்கள், உங்களுக்கான ஹாம் வானொலிப் பெட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுக்கான நிலையத்தினை எப்படி வடிவமைப்பீர்கள்? அந்த வானொலி நிலையத்தின் துணை கொண்டு எப்படியெல்லாம் இந்த சமுதாயத்திற்கு உதவலாம்? என்பனப் போன்றவற்றையும் இந்தத் தொடர் உங்களுக்கு தெளிவாக்கும்.


மிக முக்கியமாக இந்தத் தொடரை ஐந்து பாகங்களாக பிரித்து வழங்கியுள்ளோம். முதல் பாகத்தில் ஹாம் வானொலியின் அறிமுகம், இரண்டாவதாக ஹாம் வானொலி உரிமத்தினை பெருவதற்கு செய்ய வேண்டியவை, மூன்றாவதாக எப்படி ஹாம் வானொலி துணைகொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்வது, நான்காவதாக உங்களுடைய நிலையத்தினை எளிதாக அமைக்கும் முறை, ஐந்தாவதாக தொடக்க நிலையினர்க்கான அடிப்படைத் தகவல்களை காணலாம்.
- முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் (VU3UOM)

Thursday, September 04, 2008

சாருஹாசன் பேட்டி - பாகம் 2

தங்களுடைய Call Sign பற்றி?

1962இல் நான் தேர்வு எழுதி ஹாம் உரிமம் வாங்கினேன். எனது Call sign VU2 SCU. அந்த நேரத்தில் எனது வக்கீல் பணியில் தீவிரமாக இருந்ததால் Call Sign-ஐப் புதுப்பிக்கத் தவறிவிட்டேன். இதனால் மீண்டும் ஒருமுறை புதிதாக விண்ணப்பித்து Call Sign-ஐ வாங்க வேண்டியதாயிற்று. 1982இல் அதே Call Sign-ஐப் பெற்றேன்.

தாங்கள் பயன்படுத்திய ஹாம் வானொலிப் பெட்டிகள் குறித்து?
அந்த காலகட்டங்களில் ஹாம் வானொலிப் பெட்டிகளின் விலை அதிகமாக இருந்தது. மேலும் இந்தியாவில் அவை விற்பனைக்குக் கிடைக்காது. எனக்குத் தேவையானவற்றை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்தேன். அப்பொழுது என்னிடம் VHF மற்றும் UHF-இல் செயல்படக்கூடிய சாதனங்கள் இருந்தன. இதற்காக 20 மீட்டர் மற்றும் 40 மீட்டரில் ஒலிபரப்புவதற்காக Long Wire ஆண்டனாவைப்பயன்படுத்தி வந்தேன்.

ஹாம் வானொலியில் ரிபீட்டர் என்றால் என்ன?
VHF அலைவரிசைகளில் ஹாம் வானொலியைப் பயன்படுத்தும்போது அது நீண்டதொலைவுக்குச் செல்லாது. எனவே இது போன்ற ரிபீட்டர்கள் VHF ஒலி அலையைப்பெற்று மீண்டும் சக்தி கூட்டி மேலும் ஒலிபரப்பும். இதனால் VHF ஒலி அலைகள் நீண்ட தொலைவுக்குச் செல்லும். அன்றைய காலகட்டத்தில் ஒரு ரிப்பீட்டரின் விலை குறைந்தது ஒரு லட்சம் ரூபாய். காரணம் அதில் 'டியூப்ளெக்சர்' என்ற ஒன்றின் மீது தங்கமுலாம் பூசியிருப்பார்கள். ரிப்பீட்டரைப் பயன்படுத்தவும் தனியான உரிமம் வேண்டும். ஆனால் உரிமம் இல்லாமலேயே அதில் பல பரிசோதனைகளைச் செய்து பார்த்தேன்.

தங்களைப் போன்று நடிகர்கள் வேறு யாராவது ஹாம் உரிமம் பெற்றுள்ளனரா?
நடிகர்களில் என்னைப்போன்றே எனது சகோதரர் கமல்ஹாசன் ஹாம் உரிமம் வைத்துள்ளார். அவரது Call sign VU2 HAS. அதேபோன்று எனது சகோதரர் சந்திரஹாசனின் Call sign VU2 SCH. ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஹாம் வானொலியில் அடிக்கடி பேசுபவராக மம்மூட்டி உள்ளார். தனதுநடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது ஹாம் அலைவரிசையில் வருவார். அதேபோன்று ஆந்திர நடிகர் பிரசாந்தும் ஹாம் வானொலி உரிமம் வைத்துள்ளார். (தொடரும்)