Tuesday, February 10, 2009

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது.

பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.
(Source: http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml)

3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Unknown said...

இலங்கைக்கு வழங்கிக்கொண்டிருந்த வானொலி சேவையை பிபிசி துண்டித்துக்கொண்டுவிட்டது. இலங்கை மீது பிபிசி வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை. சில செய்திகளை இலங்கை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது, இடையிடையே இசையை ஓடவிட்டு கெடுக்கிறார்கள். சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதே கிடையாது. ஆங்கிலம், சிங்களம், தமிழ் மூன்று மொழி நிகழ்ச்சிகளுக்கும் இதே நிலைமைதான். இலங்கை அரசுடன் இதுவரை பலமுறை பேசிப்பார்த்துவிட்டோம். பதிலில்லை. ஆகவே, சேவையைத் துண்டித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

பிபிசிக்கே இந்த நிலைமை என்றால் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் கதி என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். போர் காலங்களில் அரசாங்கங்கள் செய்திகளைத் தணிக்கை செய்வது வாடிக்கைதான் என்றாலும் இலங்கை அரசின் ஊடக அடக்குமுறை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மிகக் கடுமையான தணிக்கை. கொலை மிரட்டல். தாக்குதல். தாதாக்களே தேவலை.

ஊடகங்களுக்கு எதிராக மூன்று வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது இலங்கை அரசாங்கம். எதிரான செய்திகள் அனைத்தையும் அமுக்குவது முதல் வகை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான செய்திகள் எதிலும் வந்துவிடாதபடி கவனமாக இருப்பார்கள். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளை மட்டுமல்ல இந்தியப் பத்திரிகைகளையும் தன் வயப்படுத்த இலங்கை அரசு முனைப்புடன் முயன்றுவருகிறது.

செய்திகளைத் திரித்து வெளியிடுவது இரண்டாவது வகை. புலிகள் தரப்பு இழப்புகளைப் பூதாகரப்படுத்தியும் இலங்கை ராணுவ இழப்பை சிறிதாக்கியும் வெளியிடப்படும் செய்திகள் இந்த வகைக்குள் அடங்கும். மூன்றாவது, லசந்த விக்கிரமதுங்கவுக்கு நேர்ந்த கதி. மிரட்டியும் கேட்கவில்லையா? நீக்கிவிடு.

கடந்த சில வாரங்களாக, கொழும்பிவிலும் பிற பகுதிகளில் உள்ள சிங்களர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். தமிழர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. இலங்கை அரசாங்கத்தின் போக்கு அதிருப்தி அளிப்பதால். புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட சிங்களர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை இலங்கை அரசு அளிக்க மறுத்துவருகிறது. என் கணவர் எங்கே, என் சகோதரர் எங்கே, என் மகன் எங்கே என்று கேட்டு ராணுவத் தலைமையகத்தை சிங்கள மக்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொல்கிறோம், சொல்கிறோம் என்று தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது அரசு. இன்று வரை சரியான தகல்கள் வெளிவரவில்லை.

http://marudhang.blogspot.com/2009/02/blog-post_10.html

Unknown said...

பிபிசி செய்தி சேவை நிறுத்தப்பட்டதனால் மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம்: சிறிலங்கா அமைச்சர்
[புதன்கிழமை, 11 பெப்ரவரி 2009, 07:17 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற போது, தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன அங்கு விளக்கமளித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிபிசி சிங்கள சேவையின் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கூறியபோதே லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார்.

பிபிசி செய்தி சேவையின் வருமானத்தின் மூலமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரியும் பணியாளர்கள் பலருக்கு சம்பளம் வழங்கியதாகவும் தற்போது பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன மேலும் தெரிவித்தார்.