Showing posts with label பிபிசி தமிழோசை. Show all posts
Showing posts with label பிபிசி தமிழோசை. Show all posts

Thursday, April 13, 2017

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.



கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது.
சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன;
அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.
பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.
இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழை தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.
Source: bbctamil.com

Tuesday, May 03, 2016

பவளவிழா காணும் பிபிசி தமிழோசை

பிபிசி உலக சேவையின் மூத்த மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தொடங்கி இன்றோடு (03-05-2015) 74 ஆண்டுகள் முடிந்து, 75வது ஆண்டு தொடங்குகிறது.
பிரிட்டனின் காலனிய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தனது நீண்ட பயணத்தில் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் ஒலி சாட்சியாக இருந்திருக்கிறது.
காலவெள்ளத்தில் 75 ஆண்டுகள் என்பது ஒரு துளியாக இருக்கலாம். ஆனால் ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தின் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதி.
கடிதமாக கருவாகி செய்தியாக கிளைபரப்பி.....
பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டது 1941 மே மாதம் 3 ஆம் தேதி என்றாலும் அதற்கு பிபிசி தமிழோசை என்கிற பெயர், அது தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே சூட்டப்பட்டது. இதன் பின்னணியை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழோசையின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரான சிவபாதசுந்தரம் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
"பிபிசி தமிழோசை யுத்தகாலத்தில் ஆரம்பித்தபோது இலங்கை கடிதம் என்று ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை எழுதிப் படித்தவர் தம்பு என்பவராவர். அவர் இலங்கைக்காரர். ஆனால் இந்திய சிவில் சர்விஸ் சேவையில் சென்னையில் கலெக்டராக பணியாற்றியவர். அவர் தான் அந்த இலங்கை கடிதத்தை எழுதிப் படித்தவர். இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த பின்னர் 1947ஆம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி என்னை (சிவபாதசுந்தரத்தை) அழைத்தது. 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிபிசிக்கு வந்தேன். 1948ஆம் ஆண்டு ஒரு முறையான சஞ்சிகை நிகழ்ச்சியாக இதை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு முறையான முகப்பிசையை உருவாக்கி, இலங்கைக் கடிதம் என்று இருந்ததை உலகக் கடிதமாக, உலக நிகழ்ச்சியாக நடத்துவதற்கு ஏற்பாடாகி, 1948 ஆம் ஆண்டு தான் தமிழ் நிகழ்ச்சிக்கு தமிழோசை என்கிற பெயர் ஏற்பாடாயிற்று” என்று தெரிவித்தார் சோ.சிவபாதசுந்தரம்.
பிபிசி தமிழோசையின் துவக்ககால முகப்பிசை மறைந்த இசைக்கலைஞர் டி.பி.ஜெயராமையர் அவர்களால் தயாரிக்கப்பட்டு தமிழோசையில் கே.பி.ரங்காச்சாரி காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு வரையிலுமே கூட அந்த இசைதான் பிபிசி தமிழோசையின் முகப்பிசையாக இருந்தது.
ஆரம்ப காலகட்டங்களில் வாரமொருமுறையாகவும் பின்னர் வாரமிரு முறையாகவும் ஒலிபரப்பான பிபிசி தமிழோசை, பின்னர் செய்தி மற்றும் நடப்புச் செய்திகள் என்று பரிணமித்தது.
1980களில் தமிழோசை செய்தி மற்றும் சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என மலர்ந்த காலம். அதுவே பிபிசி தமிழோசையின் பல மூத்த நேயர்கள் இன்றும் நினைவுகூறும் காலமாகவும் இருந்துவருகிறது.
சங்கரண்ணா என்று பிபிசி தமிழோசை நேயர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசையின் பொறுப்பாளராக இருந்த அந்தக்காலத்தில்தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல பிபிசி தமிழோசையில் மொழிப்பெயர்ப்பாகி அரங்கேறின.
தேம்சு நதிக்கரையில் இருந்து சங்கரமூர்த்தியின் கணீர்க்குரலில் ஒலித்த அந்த தமிழோசை சிற்றலை மூலமாகவே ஒலிபரப்பாகி வந்தாலும், பல லட்சக்கணக்கான நேயர்களின் பாசத்துக்குரிய ஓசையாக இருந்து வந்தது.
இலங்கை, இந்தியா, உலகம் என்று விரிந்து......
சஞ்சிகை வடிவ நிகழ்ச்சி என்றாலும், இந்திய இலங்கை அரசியல் பிரமுகர்கள், கலைஉலகப்பிரமுகர்கள் என பலரின் குரல்களும் தமிழோசையில் ஒலித்தன.
இலங்கைப்போர் 1980களின் தொடக்கத்தில் பெரிய அளவில் வெடித்தபோது, பிபிசி தமிழோசையின் கவனம் பெருமளவு இலங்கைப் பிரச்சனையின்மீது திரும்பியது.
இலங்கை இனப்பிரச்சனையின் பல்வேறு அரசியல் பரிமாணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்த பிபிசி தமிழோசை பல முறை இலங்கை அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பலரையும் பேட்டி எடுத்தது.
தமிழக முன்னாள் முதல்வர்கள் மு கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் தலைவர்களின் பிரத்யேக பேட்டிகள் பிபிசி தமிழோசையில் இடம்பெற்றிருந்தன.
இலங்கை மோதலின் பக்கசார்பற்ற சாட்சியமாய் நீடித்து....
இலங்கைப்போர் 1990களில் உச்சமடைந்து யாழ்ப்பாணத்திலும், பின்னர் வன்னியிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு துல்லியமான, பக்கசார்பற்ற செய்திகளை வழங்கி முக்கிய பங்காற்றியது பிபிசி தமிழோசை.
பின்னர் 2002ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோது, நாட்டில் ஏற்பட்ட தற்காலிக அமைதியையும், பின்னர் அந்த ஒப்பந்தம் ஏட்டளவில் நின்று மோதல்கள் மீண்டும் வெடித்தபோது, மக்கள் பட்ட துயரங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்தது தமிழோசை.
இலங்கைப்போரின் இறுதிக்கட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப்பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், போர் முனையில் இருந்த மக்கள் மற்றும் அரச மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் குறித்த செய்திகளை உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் அறியத் தந்தது பிபிசி தமிழோசை.
போர்க்காலத்தில் இலங்கையில் கடும் ஒலிபரப்பு நெருக்கடிக்கு ஆளான தமிழோசை, தனது பண்பலை ஒலிபரப்பை சிறிது காலம் நிறுத்தி வைக்க நேரிட்டது. தற்போது அது இலங்கை நேயர்களுக்கு ஐந்து நிமிட உலகச் செய்தியறிக்கையை ஷக்தி எப்.எம் வானொலி மூலம் வழங்கி வருகிறது.
தொழில்நுட்பத் துணையோடு இணையத்தில் நுழைந்து, தொலைக்காட்சியாய் தொடரும் தமிழோசை......
இலங்கைப் போர் முடிந்த கால கட்டம்தொழில்நுட்பத்திலும் பெரும் மாற்றங்கள் உருவாகி வந்த காலம். இணையத்தில் ஏற்கனவே புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் தடம்பதித்த பிபிசி தமிழோசை, மெல்ல மெல்ல வளர்ந்து, பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களிலும் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கி அந்த ஊடகங்களிலும் புதிய, இளைய நேயர்களைப் பெற்றிருக்கிறது.
இதன் இணையதளச் செய்திகள் இப்போது சென்னையிலிருந்து வெளிவரும் ஹிந்து நாளேட்டின் தமிழ்ப் பதிப்பிலும் இடம்பெறுகின்றன.
பிபிசி தமிழோசையின் வரலாற்றில் 2015ஆம் ஆண்டு மற்றும் ஒரு மைல்கல். இதுவரை வானொலி மற்றும் இணையதளம் என்ற இரு ஊடகங்களில் மட்டுமே செயல்பட்டுவந்த பிபிசி தமிழோசை, இப்போது தொலைக்காட்சி மூலமும் புதிய நேயர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று தொடங்கப்பட்ட பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி, இந்தியாவின் தந்தி தொலைக்காட்சி மூலம் உலகச் செய்திகளை 10 நிமிட நேரம் தமிழக மற்றும் இணையதளம் மூலம் உலக நேயர்களுக்கும் வழங்கி வருகிறது.
பிபிசி தமிழோசை தனது வரலாற்றில் பெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. காலத்தின் போக்குக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும், நேயர்களின் தேவைகளுக்கும் ஏற்ப பிபிசி தமிழோசை தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு மாறி, இந்த அளவு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நேயர்களின் ஆதரவோடு பிபிசி தமிழோசை மென்மேலும் வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது செய்திச்சேவையைத் தொடரும்.
நன்றி: பிபிசி தமிழோசை இணையதளம்

Friday, April 24, 2015

தமிழோசை வானொலி- புதிய சிற்றலை வரிசைகள்

பிபிசி தமிழோசை வானொலியை சிற்றலை வரிசைகள் மூலம் கேட்கும் நேயர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை, எமது வானொலி நிகழ்ச்சியை கீழ்க்கண்ட சிற்றலை வரிசைகள் மூலம் கேட்கலாம்.
பிபிசி தமிழோசை வானொலி நிகழ்ச்சிகளை சிற்றலை மூலம் கேட்கும் நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை, நமது அலைவரிசைகளை புதிய அலைவரிசைகளான 31 மீட்டரில் , 9,900 கிலோ ஹெர்ட்ஸிலும், 22 மீட்டரில், 13,830 கிலோ ஹெர்ட்ஸிலும், 19 மீட்டரில் 15,330 கிலோ ஹெர்ட்ஸிலும் கேட்கலாம்.

Saturday, July 09, 2011

தமிழோசைக்கு வயது 70

சர்வதேச ஒலிபரப்பு வரலாற்றில் தனி இடம் பிடித்திருக்கும் பிபிசி உலக சேவையின் பல்வேறு மொழிப்பிரிவுகளில், தெற்காசிய மொழிப்பிரிவுகளில் ஒன்றான, பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.


தமிழோசை தொடங்கப்பட்ட காலம் என்பது இரண்டாம் உலகப்போர் முற்றிய காலகட்டம், பின்னர் காலனித்துவத்தின் சரிவின் ஆரம்ப காலம் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் அமைந்திருந்தது.
1941 மே மாதம் மூன்றாம் நாள் தனது ஒலிபரப்பைத் தொடங்கிய பிபிசி தமிழ்ப் பிரிவு, வாரம் ஒருமுறை இலங்கை மடல் என்ற பெயரில் தான் தனது ஒலிபரப்பை முதலில் நடத்தியது.

முதலில் வாரம் ஒரு முறை, பின்னர் வாரமிருமுறை இலங்கை மடலாக ஒலித்து வந்த தமிழோசை, அப்போதைய காலகட்டங்களில் சஞ்சிகை வடிவிலேயே வந்தது. தமிழ் இலக்கியம், நாடகம், கலை என செய்திகளைவிட பிற அம்சங்களை அதிகம் தாங்கி ஒலித்தது தமிழோசை.

அப்போதெல்லாம், தமிழோசையின் தயாரிப்பாளர்கள் சொந்தமாக வடித்த நாடகங்கள் தவிர ஆங்கில மற்றும் பிற மொழி நாடகங்களின் மொழியாக்கங்களும் தமிழோசையில் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்கள் தமிழோசையின் ஆசிரியர் சங்கர் என்ற சங்கரமூர்த்தியால் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழோசையில் அரங்கேறின.

இனப்பிரச்சினை

எண்பதுகளின் முற்பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதாக வெடித்த போது , தமிழோசை அந்தப்பிரச்சினையினை செய்திகள் மற்றும் பேட்டிகள் மூலம் நேயர்களுக்கு விளக்க உதவியது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அப்போதைய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் வந்தபோது தமிழோசைக்கு பேட்டி அளித்தார்.

தமிழர் அரசியலில் மிதவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயுத அரசியலின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோது 1986ல் பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டின் போது பெங்களூர் வந்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தமிழோசைக்கு பேட்டியளித்தார்.

இலங்கைப் பிரச்சினை மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் இந்திய அரசியலையும் பிரதிபலிக்கும் செய்திகளையும் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பியுள்ளது.



Sunday, May 10, 2009

பிபிசி தமிழோசை சிறப்பு காலை ஒலிபரப்பு

பிபிசி தமிழோசை இலங்கைப் போர் மற்றும் இந்திய தேர்தலுக்காக சிறப்பு காலை ஒலிபரப்பினைத் தொடங்கியுள்ளது. 11 மே முதல் 20 மே 2009 வரை இந்த ஒலிபரப்பினை தினமும் காலை இந்திய நேரம் 0700 முதல் 0715 வரை 19 மீட்டர் 15285 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 16 மீட்டர் 17515 கிலோ ஹெர்ட்ஸ்களில் கேட்கலாம். தேவையின் அடிப்படையில் இந்த ஒலிப்ரப்பானது நீட்டிக்கப்படவும் உள்ளது. (பிபிசி தமிழோசை அறிவிப்பு)

Tuesday, February 10, 2009

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது.

பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.
(Source: http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml)