Friday, April 12, 2013

தமிழ் பேசும் சீன வானொலி

"தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற மகாகவியின் கனவினை மெய்பிக்கும் விதமாக வேற்று நாட்டினர் மொழியினைக் கற்று, திறம்படக் கையாண்டு, தமிழோசையைப் பரப்புவது சிறப்பான விஷயமல்லவா? இப்பணியை தான் தொடர்ந்து 50 வருடங்களாக செம்மையாக செய்து வருகின்றனர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவினர். 61 உலக மொழிகளில், ஹிந்தி, வங்காளம், தமிழ் என்ற மூன்று இந்திய மொழிகளில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளை தருகிறது சீன வானொலி. தமிழ் பேசும் சீன வானொலி தமிழ் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவரும் தனி ரகம். அவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சியில் தத்தம் விருப்பங்களைச் சுவையான முறையில் தரும் போது, தமிழை மேன்மேலும் கற்றுச் சிறக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட போது, தமிழொலியும் தமிழோசையும் பரப்பும் இந்தத் தமிழ்க் காவலர்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தத் தோன்றியது.
எத்தனை தான் கணிப்பொறியும் தொலைக்காட்சியும் இருந்த போதும், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் அதைப் பலரும் கேட்டுப் பயன்பெறுவதை மின்னஞ்சல் மூலமும் நேருக்கு நேர், நேயர் நேரத்தில் குரல்களின் மூலம் கேட்கும் போது, அவர்களது தமிழ்ப் பணி மேலும் சிறப்பாகத் தொடர நல்வாழ்த்துக்களை தமிழ் விரும்பும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாகக் கூற விரும்புகின்றேன். வானொலியின் பணி தொடர்ந்து, தமிழ் நேயர்களுக்கு சீனா பற்றிய செய்திகள் பலவற்றையும் அறியும் வாய்ப்பினை ஏற்படுத்தி, மேன்மேலும் வளர யாவரும் வாழ்த்துக் கூறுவோம்.தற்போது இவ்வானொலியின் பொன்விழாவினையொட்டி ஒரு கட்டுரை போட்டியையும் அறிவித்துள்ளனர். சீன வானொலியுடனான நட்பினை வெளிப்படுத்தும் படியான கட்டுரையாக இது இருக்க வேண்டும். மே மாதம் 31 ம் தேதி வரை கட்டுரைகளை அனுப்பலாம்.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
நன்றி: http://www.dinamalar.com

இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரை போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் வழங்குவோம். மொத்தம், 3 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 10 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இணையத்தளத்தில் மிகவும் விரும்பும் கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இணையதள முகவரி: ://tamil.cri.cn வான் அஞ்சல் முகவரி: TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL P.O.Box 4216, BEIJING P.R.CHINA 100040 மின்னஞ்சல் முகவரி: tamil@cri.com.cn
- Nilaani Beijing,china

No comments: