Friday, April 12, 2013

ஈழம் தொடர்பில் வானொலி

வானொலி சேவை ஆரம்பத்துடன் ஈழம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளனர் தமிழக மாணவர்கள்!


ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம்.
  
அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும். ஐ.நா.மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐ.நா.வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம்.
 
அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம். தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.
 
பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்.
 
கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள் (We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம். இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 
இதற்கிடையே, தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து மாவட்ட மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
மாணவர்களின் வானொலி
 
இந்த நிலையில் தமிழீழ மாணவர் அமைப்பு வானொலி ஒன்றை தொடக்கியுள்ளது. மக்கள் மத்தியில் மாணவர் போராட்டம் குறித்தும் இலங்கை இனப்படுகொலை குறித்தும் தகவல்களை கொண்டு சேர்க்கும் விதமாக இணையதள வானொலி ஒன்றை தொடஙகியுள்ளனர். இந்த வானொலி தற்போது ஒலிபரப்பை தொடங்கி நடத்தி வருகிறது.
 
இதற்கிடையே தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் போற்குற்றமல்ல இனப்படுகொலையே. இலங்கை அல்ல தனி தமிழீழமே என்ற புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
 
மேலும் இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக முதற்கட்ட பணியாக தொடங்க உள்ளனர்.

No comments: