Friday, May 10, 2013

டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்


 வானொலித் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் வானொலிப் பெட்டிகளின் உற்பத்தி இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்த சமயத்தில்தான் நமது அகில இந்திய வானொலி ஒரு புதிய தொழில்நுட்பத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. டி.ஆர்.எம். (டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் 3058) எனும் அந்தத் தொழில்நுட்பம்தான் இனி இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ஊர்களிலும் வரப்போகிறது.
இதற்கு  அச்சாரமாக இருந்தவை செயற்கைக்கோள் வானொலிகள். இந்த ஒலிபரப்புகளில் ஒலியின் தரம் மிகத்துல்லியமாக இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான "வோல்ட் ஸ்பேஸ்' போன்ற வானொலிகள் புதுமையாக பார்க்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் வந்த வேகத்திலேயேக் காணாமல் போயின. அதற்குக் காரணம், அந்த வானொலிகளை மாதாந்திர சந்தா கட்டியே கேட்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது "வோல்ட் ஸ்பேஸ்' மீண்டும் தனது சேவையைத் ஒரு தனியார் டி.டி.ஹெச். நிறுவனத்தோடு இணைந்து தொடங்கியுள்ளது.
அகில இந்திய வானொலியின் வரலாற்றில் 2009ஆம் வருடம் வரலாற்றில் பொறிக்க வேண்டிய ஒரு ஆண்டு. அந்த ஆண்டு தான் முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புதுதில்லி காம்பூரில் அமைந்துள்ள உயர் சக்தி கொண்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து 16 ஜனவரி 2009இல் தனது முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கியது.
வானொலி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், இது வரை வானொலி ஒலிபரப்பானது "அனலாக்' முறையிலேயேச் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒலிபரப்பின் தரம் சுமாராகவே இருக்கும். ஆனால் "டிஜிட்டல்' தரத்தினைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
சாதாரண வானொலி ஒலிபரப்புகளில் நாம் குறிப்பிட்ட ஒலிபரப்பினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் டி.ஆர்.எம். ஒலிபரப்பில், வானொலி ஒலிபரப்போடு அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் டிஜிட்டல் திரையில் தெரியும். அத்துடன் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், "எலக்ட்ரானிக் புரோகிராம் கைடு' இதில் இருப்பதால் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும்  கண்டுகொள்ளலாம்.
இன்னும் எளிதாகப் புரியும்வண்ணம் கூற வேண்டும் எனில், ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகிவரும் அதே சமயத்தினில், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளிவந்த ஆண்டு, பாடியவர்கள், பாடலை இயற்றியவர், இசையமைத்தவர் என அனைத்து விவரங்களும் அந்த டிஜிட்டல் திரையில் ஒரு சேர நமக்கு கிடைக்கும். இது டிஜிட்டல் ஒலிபரப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
இவை அனைத்தினையும் விட முக்கியமானது, அதன் தரம். பண்பலை ஒலிபரப்பின் தரத்தினைவிட பன்மடங்கு துல்லியமானதாக இருக்கும். மேலும் இது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளையும் அதே தரத்தினில் கொடுக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான ஒலிபரப்பு கோபுரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கோபுரங்களே போதும். டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் என்பதில் உள்ள மோண்டியல் என்பது பிரென்ச் வார்த்தை. இதற்கு "உலகளாவிய' என்று அர்த்தமாகும். வார்த்தைக்குத் தகுந்தார்போன்றே அதன் ஒலிபரப்புத் தரமும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய செலவு கூடுதலாக 10 முதல் 20 சதவீதம் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் நமக்கு இதன் மூலம் 20 முதல் 40 வரை மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் இது பாதிப்பதில்லை.
ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரித்தான ஒன்று. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் இதில் அடியெடுத்து வைக்காத சமயத்தில் நாம் இதில் முன்னோடியாகத் திகழ்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு நாம் மாறுவதன் மூலம், இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு குறைந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நேயர்களையும் சென்றடையலாம். இந்தியாவானது பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கு என ரூ.9.20 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 70 சதவீத மக்களை டி.ஆர்.எம். ஒலிபரப்பானது சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை இன்னும் ஐந்தாண்டுகளில் அனைத்து நாடுகளும் கையாள உள்ளன. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுது உள்ளது. டி.ஆர்.எம்.  ஒலிபரப்பினைக் கேட்க தனியான வானொலிப் பெட்டியினை நாம் வாங்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே உள்ள வானொலிப் பெட்டிகளில் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பினைக் கேட்க முடியாது.
ஏற்கெனவே இருந்த வோல்ட் ஸ்பேஸிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. டி.ஆர்.எம்.  வானொலிப் பெட்டியின் குறைந்தபட்ச விலையே ரூ.10,000 எனும்போது நிச்சயம் நம்மில் பலர் அதனை வாங்கவே யோசிப்போம். ஆனால் அரசின் கருத்தின்படி, முழுமையாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கிவிட்டால் வானொலிப் பெட்டியின் தேவை அதிகரிக்கும். அப்பொழுது விலை நிச்சயம் குறையும் என்கிறது அரசு. 
இன்று ஆண்ட்ராய்டு வசதி கொண்ட கைப்பேசிகளில் இலவசமாக டி.ஆர்.எம். மென்பொருட்களைப் பதிவேற்றி தனியான டி.ஆர்.எம். வானொலிப் பெட்டிகளை வாங்காமலேயே ஒலிபரப்புகளைக் கேட்க முடியும்.
First Published : 26 November 2012 04:01 AM IST
நன்றி: தினமணி

No comments: