Monday, June 17, 2013

திருச்சி வானொலி நிலைய பவள விழா நாளை தொடக்கம்

திருச்சி வானொலி நிலையத்தில் பவளவிழா கொண்டாட்டம் வியாழக்கிழமை (மே16) தொடங்குகிறது.
இதுகுறித்து  வானொலி நிலையத் துணைத் தலைமை இயக்குநர் (பொறியியல்) டி.பெரியசாமி, தலைமை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜோதிமணி இளங்கோவன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
1939-ம் ஆண்டு மே 16-ம் தேதி அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சி. ராஜாஜியால் திருச்சி வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. வேளாண்மை, இசை, இளையோர், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தொடங்கப்பட் இந்த வானொலி நிலையம் தற்போது 100 கி.வாட்ஸ் டிரான்ஸ்மீட்டர் வசதி கொண்டுள்ளது.
தற்போது திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் வரைதனது சேவையை திருச்சி வானொலி நிலையம் வழங்கி வருகிறது.
மாணவர் நிகழ்ச்சி, சூரியகாந்தி,பிள்ளைக்கனியமுது, பண்ணை இல்ல ஒலிபரப்பு, இளையபாரதம், உழைப்பவர் அரங்கம், பூவையர் பூங்கா, விளையாட்டு அரங்கம் என பல்வேறு பிரிவுகளில் வானொலிநிலையத்தின் முதல் அலைவரிசையில்நிகழ்ச்சிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டில் ரெயின்போ பண்பலை வானொலி சேவையும்,  2007-ம் ஆண்டில் கர்நாடக இசைப்பிரியர்களுக்காக ராகம் டிடிஎச் சேவையும் தொடங்கப்பட்டன.
வானொலி நிலையம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி ஓராண்டு காலத்துக்கு பவள விழா கொண்டாட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
திருச்சி வானொலி நிலையத்தில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய பெரியார், அண்ணா, ராஜாஜி, நாமக்கல் கவிஞர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் உரைகள், காஞ்சி பெரியவர், கிருபானந்தவாரியார் உள்ளிட்டவர்களின் ஆன்மிக உரைகள் வானொலி களஞ்சியத்தில் உள்ளன.
பவளவிழாயொட்டி இந்த உரைகள் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை தினந்தோறும் ஒலிபரப்பாகும். மேலும், இசை நிகழ்ச்சிகள்,மேடை நாடகப் பாடல்கள், கர்நாடக இசை நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
திருச்சி வானொலி நிலையஒலிபரப்பு சேவை கிடைக்கும் 10 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, நிகழ்ச்சிகளை நடத்தவும், வானொலி நிலையத்தில் உள்ள அரிய புகைப்படங்களின் கண்காட்சியை ஓராண்டு காலத்துக்கு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
பவளவிழா தொடக்க நிகழ்ச்சி வானொலி நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.
இந்தவிழாவில் அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் சென்னை, பெங்களூர் தொலைக்காட்சி நிலைய தென் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர்கள் ஜி. ஜெயலால்,  எஸ்.கே. அகர்வால் (பொறியியல்), திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றனர் அவர்கள்.

No comments: