Friday, September 20, 2013

தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் - இலங்கை

1982இல் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் என ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் சார்பில் தமிழ் ஒலி என்ற காலாண்டு சஞ்சிகையை வெளியிட்டேன். மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு மத்தியிலும் 1986ஆம் ஆண்டு வரை இந்த சஞ்சிகை வெளிவந்தது. மன்றத்தில் இலங்கை, இந்தியா, மலேசியா, ஜெர்மனி உட்பட வேறும் சில நாடுகளிலிருந்து 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்திருந்தார்கள். உறுப்பினர்களில் பலர் எனக்கு மிக்க உறுதுணையாக இருந்ததோடு சஞ்சிகை வெளியீட்டிலும் பல உதவிகள் செய்தார்கள். வெரிதாஸ் வானொலி தமிழ் பணி நல்லாதரவு தந்து சஞ்சிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தினார்கள். பின்னர் பி.பி.சி. தமிழோசை, இலங்கை வானொலி, சென்னை வானொலி நிலையங்களும் ஆதரவு தந்தன. தமிழ் ஒலி சஞ்சிகையின் முதல் இதழை யாழ் ஆயர் 1982 ஜனவரி 14 பொங்கல் நாளில் வெளியிட்டு வைத்தார். அப்போது எடுத்த படம் இது. 

இப்போது சஞ்சிகையின் பிரதிகள் ஒன்று கூட என்னிடம் இல்லை. சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் பேராசிரியர் இளம்பூரணன் அவர்களை சந்தித்தபோது தன்னிடம் ஒரு பிரதி இருப்பதாக கூறி 30 வருடங்களாக அவர் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பிரதியைக் கொடுத்தார். 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் நண்பர் ஜெய்சக்திவேல் அங்கே பல்கலைக்கழகத்தில் ஒரு வானொலி ஆவணக் காப்பகம் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக கூறி இந்த பிரதியை அந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். அங்கே உயர் தொழிநுட்பத்துடன் பாதுகாத்து வைக்கப்படும்.. 

1984ஆம் ஆண்டு மன்ற உறுப்பினர்கள் இளஞ்சுடர் என்ற நிகழ்ச்சியை தயாரித்தார்கள். இந்நிகழ்ச்சி இலங்கை வானொலியில் நான்கு வாரங்கள் ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாக இருந்த திரு விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் நேரில் வந்து ஒலிப்பதிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் இங்கே பார்க்கலாம்.

முகநூலில் திரு. உமாகாந்தன், இலங்கை

No comments: