Thursday, September 05, 2013

"இன்று ஒரு தகவல்' பற்றி அந்துமணி

வானொலியில், "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டு இருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
நேயர்களுக்கு வானொலி தரும் இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், "இன்று ஒரு தகவல்' தந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி... அவர் யார், எவர் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என்னுடைய, "லேண்ட் லைன்' தொலை பேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் அழைப்பவர்கள் தாங்கள் சொல்ல வந்த சேதியை பதிவு செய்து விடலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, அப்பெண்மணி தினம் ஒரு ஜோக் - தகவல் - கிசுகிசு - அறிவிப்பு - செய்தி என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து விடுகிறார்.
என் தொலைபேசி எண்ணை எப்படி கண்டு பிடித்தார் அல்லது யார் கொடுத்தது என, கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், கொடுத்தவருக்கு நன்றி; பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே...
அன்று அலுவலகம் வந்ததும், "ஆன்சரிங் மிஷினை' இயக்கினேன். அதே பெண்மணியின் குரல்...
"இன்று ஒரு ஜோக்...' என்றவர், சிறிது இடை வெளி கொடுத்து, ஜோக்கைக் சொல்ல ஆரம்பித்தார்...
"அடல்ட்ஸ் ஒன்லி சர்ட்டிபிகேட் பெற்ற படத்தில் ஒரு காட்சி... நீச்சல் குளத்தில் இறங்கப் போகுமுன், கதாநாயகி, தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்று கிறாள்... கடைசியாக, உள்ளாடைகளை களைய எத்தனிக்கும் சமயம், "விர்'ரென்று ஒரு கார் போகிறது. கார் சென்றதும் பார்த்தால், கதாநாயகி, தண்ணீரில் முகம் மட்டும் தெரிய, நீந்திக் கொண்டிருக்கிறாள்.
"ஒரு சர்தார்ஜி, தினந்தோறும் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தார். ஒரு நாள், "சர்தார்ஜியிடம், "இந்த சினிமா அவ்ளோ நல்லாவா இருக்கிறது! விடாமல் பார்க்கிறீர்களே...' எனக் கேட்டார் தியேட்டர் மானேஜர்.
"அதற்கு, "இல்லை... ஒரு நாளாவது அந்தக் கார், ஒரு நிமிடமாவது தாமதமாக வராதா என்ற நம்பிக்கையில் தான் வருகிறேன்... சொல்லி வைத்தாற்போல, அது எப்போதும் போலத்தான் வந்து தொலைக்கிறது...' என்றாராம் சர்தார்ஜி...'
— இந்த ஜோக்கைச் சொல்லிவிட்டு, "ஜோக் எப்படி?' எனக் கேட்டு கலகலவெனச் சிரித்து, தொடர்பைத் துண்டித்திருந்தார்!
சர்தார்ஜிகளை கிண்டலடித்து இங்கு நாம் ஜோக் அடித்துக் கொண்டிருக்க, பஞ்சாபில், இதே ஜோக்கை, மதராசி - அதாவது, தமிழனை மையப்படுத்தி கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியனுக்கு - அது எந்த மாநிலத்தவனாக இருக்கட்டும்... உண்ண உணவிருக்கிறதோ, இல்லையோ... தமாஷ் உணர்ச்சிக்குப் பஞ்சமில்லை!

No comments: