Tuesday, February 04, 2014

நெல்லையில் கரிசல் திரை விழா: 350 மாணவர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கரிசல் திரை விழாவில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 350 மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையின் கீழ் செயல்படும் மனோ மீடியா கிளப் சார்பில் ஆண்டு தோறும் கரிசல் திரை விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான விழா திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்பியல் துறையின் தலைவர் பி.கோவிந்தராஜு வரவேற்றறார்.
கரிசல் திரை விழாவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆ.கு.குமரகுரு தொடங்கி வைத்து பேசியதாவது:
கரிசல் மண் நிலத்தில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் கரிசல் திரை விழா, திருவிழாவாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. காலத்திற்கு ஏற்ப சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது திரைத்துறை. அதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.திரைத் துறை உருவாகிய ஆரம்ப கட்டத்தில் குடும்பம், நல்லொழுக்கம் போன்ற கருத்துகளைப் பரப்பும் வகையில் திரைப்படங்கள் உருவாகின. சிறிது காலத்தில் அந்த நிலை மாறி புரட்சிகர கருத்துகள் மையப்படுத்தப்பட்டன.
ஆனால், இப்போது திரைத்துறை சரியான பாதையில் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியம். சமூகம் பயன்படத்தக்க உயர்ந்த கருத்துகளை திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். திரைத் துறையையும் ஆராய்ச்சி மனப்பான்மையோடு மாணவர்கள் பார்த்து, இன்றைய தேவைக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்தி நல்ல கருத்துகளை எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
கலைப்புல முதல்வர் பி.மரியஜான், மொழிப் புல முதல்வர் ஏ.ராமசாமி, எழுத்தாளர் மனுஷயபுத்ரன் ஆகியோரும் பேசினர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகத்தில் உள்ள 20 கல்லூரிகளைச் சேர்ந்த 350 மாணவர்-மாணவிகள் இந்தத் திரைவிழாவில் பங்கேற்றுள்ளனர். மாலையில் குறும்படம் திரையிடல், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல் போட்டிகள் நடைபெற்றன.
நன்றி: http://www.dinamani.com/

No comments: