Thursday, May 15, 2014

வத்திக்கான் வானொலி - ஓர் அறிமுகம்:1


வத்திக்கான் வானொலி திருப்பீடத்தின் ஒலிபரப்பு நிலையம். இது வத்திக்கான் நகர நாட்டுக்குள் முறைப்படி அமைந்திருக்கின்றது. சர்வதேச சமுதாயத்தால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் திருப்பணிக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வானொலியை வடிவமைத்த குல்யெல்மோ மார்க்கோனி என்பவரால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினோராம் பத்திநாதரால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.
கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுதந்திரமாகவும், பிரமாணிக்கத்துடனும் திறமையுடனும் அறிவிப்பதே வத்திக்கான் வானொலியின் முக்கியப் பணியாகும்.
- திருத்தந்தையின் உரைகளையும், எண்ணங்களையும் பரப்புதல்,
- திருப்பீடத்தின் நடவடிக்கைகளை அறிவித்தல்,
- உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்,
- விசுவாசிகள், திருச்சபை படிப்பினைகளின் ஒளியில், இக்காலத்தின் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவுதல் போன்ற பணிகள் மூலம், கத்தோலிக்க மையத்திற்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வளப்படுத்துகிறது இவ்வானொலி.

வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

திருத்தந்தையின் அனைத்து அதிகாரப்பூர்வ வத்திக்கான் செயல்பாடுகளை ஒலிப்பதிவு செய்தல், அவற்றை ஒலிபரப்புதல், அந்த ஒலிப்பதிவுகளை விநியோகித்தல் ஆகிய நிர்வாக ரீதியானப் பணிகளை ஆற்றி வருகிறது. அத்துடன், உரோமைய கத்தோலிக்கத் திருத்தந்தையரின் குரல்களுக்கான ஒலிப்பதிவு உரிமங்களையும் அறிவுச் சொத்துக்களையும் தனிப்பட்ட விதத்தில் கொண்டு அவற்றைப் பாதுகாத்து செயல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது.

வத்திக்கான் வானொலி, திருச்சபை மற்றும் மதம் சார்ந்த செய்திகளை வழங்குகின்றது. இத்தகையச் செய்திகளை பிற தொடர்பு ஊடகங்களில் கேட்க முடியாது. முதலில் இவ்வானொலி, திருத்தந்தையும் திருப்பீடமும் நடத்தும் நிகழ்ச்சிகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் அறிவிக்கின்றது. சமயச் சூழலில் அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்களைத் தருவதோடு, மக்கள் அவற்றில், காலத்தின் அறிகுறிகளைப் பார்த்து, விசுவாச ஒளியில் அவர்கள் செயல்படுவதற்கு ஊக்குவிக்கிறது.

சமயச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதிக மக்கள் தொடர்பு வசதிகள் இல்லாத இடங்களில் வாழ்கின்றவர்கள் தங்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் வழியாக உதவுகின்றது வத்திக்கான் வானொலி. இன்னும் சொல்லப்போனால், புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையுடன் திருச்சபையின் ஒன்றிப்பை ஆழப்படுத்துவதற்கென திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது.

வத்திக்கான் வானொலியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தாலும், மனித சமுதாயம் மத நல்லிணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் வாழ உதவியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும், இந்நிகழ்ச்சிகளில் திருச்சபையின் நீண்டகாலப் பாரம்பரியத்திற்கு ஒத்திணங்கும் வகையில், கலாச்சாரம், கலை, சிறப்பாக இசை போன்றவைகளுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படுகின்றது.

இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார்.
நன்றி: http://ta.radiovaticana.va

வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு 

நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி

பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி: 
அலை பேசி: 9488 600 600

No comments: