Wednesday, November 05, 2014

உள்ளூர் வானொலி மூலம் இந்தியை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும்

 
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3 மண்டல வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வானொலி நிலையங்களில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கோப்பு எண் 13/20/2014&றி-மிமிமி/125 என்ற அந்த சுற்றறிக்கையில் அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் கடந்த 20.10.2014 அன்று தமிழகத்தில் உள்ள தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் மண்டல வானொலி நிலையங்கள் மூலம்  நாளை மறுநாள் முதல் தினமும் 7 மணி நேரத்திற்கு வர்த்தக ஒலிபரப்பை விரிவுபடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருப்பதைப்  பார்க்கும் போது அவை தமிழ் நிகழ்ச்சிகளாகத் தானே இருக்க வேண்டும்; இதை மறு ஒலிபரப்பு செய்வதில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படலாம்.
ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உள்ளூர் வானொலிகளிலும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்க இதைவிட மோசமான கொல்லைப்புற வழி எதுவும் இருக்க முடியாது.
காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில்  மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளின்  நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் நேரத்தைக் குறைத்துவிட்டு, இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை ஏற்க முடியாது. அதேபோல், தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளில் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்படவுள்ளதால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் கொதிப்படைந்திருக்கின்றனர். இந்த மூன்று உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும் தலா 50 லட்சம் நேயர்கள் உள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வது சரியல்ல. எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து உள்ளூர் வானொலிகளில் வர்த்தக ஒலிபரப்பு மூலம் இந்தியை திணிக்கும் முடிவை  அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Source: Dinamani First Published : 25 October 2014 01:25 PM IST

No comments: