Wednesday, June 24, 2015

சன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி நிராகரிப்பு

சன் குழும நிறுவனங்களின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி அளிக்க முடியாது என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டுக்கு பிரதமர் அலுவலகம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
 இது தொடர்பாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
 சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சிகளுக்கு பாதுகாப்பு அனுமதி அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை ஏற்கெனவே மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையிடம் கூறியது. இருப்பினும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சருக்கு அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் இரு துறைகளுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். 
 இதன்படி, கடந்த சனிக்கிழமை நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா, மத்திய சட்டத் துறைச் செயலர் பி.கே. மல்ஹோத்ரா, மத்திய உள்துறைச் செயலர் எல்.சி. கோயல், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் முகுல் ரோத்தகி தெரிவித்ததாவது: "சன் குழும நிறுவனங்களின் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் ஊழல் முறைகேடு வழக்குகளை மட்டுமே எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் குழும நிறுவன சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கக் கூடாது என்று "பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கை' அடிப்படையில் மத்திய உள்துறை எடுத்த முடிவு சட்டப்படி ஏற்கக் கூடியதாகத் தோன்றவில்லை' என்றார்.
 இருப்பினும், உள்துறைச் செயலர் எல்.சி.கோயல், "ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நாடு. அதன் அடிப்படையில் மற்ற நாட்டு நிறுவனங்களுடன் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் "ஒப்பந்தம்' என்ற பெயரில் நடத்திய பணப் பரிவர்த்தனையில் முறைகேடு இருப்பதாகத் தோன்றினால், அதுவும் ஊழலாகவே கருதப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் சன் குழும நிறுவனச் சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டது' என்று கூறினார்.
 இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நிருபேந்திர மிஸ்ரா, "மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியதும் உள்துறையின் நியாயமான நிலைப்பாட்டை அவரிடம் விளக்கி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என அறிவுறுத்தி தாற்காலிகமாக இப்பிரச்னையை ஒத்திவைத்துள்ளார்' என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 பின்னணி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனப் பங்குகளை வலுக்கட்டாயமாக விற்க அதன் நிறுவனருக்கு நெருக்குதல் கொடுத்ததாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. 
 அந்தப் பங்குகள் கைமாறியதும், மேக்சிஸ் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், இந்தப் பரிவர்த்தனையின் பின்னணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சிபிஐ அவ்வழக்கில் குற்றம்சாட்டியுள்ளது. இதே விவகாரத்துடன் தொடர்புடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கை மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்துள்ளது. 
 இதேபோல, தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அவரது சென்னை இல்லத்துக்கும் சன் டிவி அலுவலகத்துக்கும் இடையே சுரங்கம் வழியாக அதிசக்தி வாய்ந்த தொலைபேசி இணைப்புகளை அமைத்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. 
 இந்தப் பின்னணியில் சன் குழும நிறுவனங்கள் நடத்தி வரும் 40 பண்பலை வானொலி சேவைகளுக்கும், 33 தொலைக்காட்சி சேனல்களுக்கும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை நெருக்குதலுக்குப் பிறகும், பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை மறுத்து வருகிறது.
Source: http://www.dinamani.com/

No comments: