Wednesday, June 24, 2015

மூத்த வானொலி படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் மறைவு

ஒலி வானொலி ரசிகர்களின் இதயங்களை நீண்ட காலமாய்க் கொள்ளைகொண்ட இனிய குரலுக்குச் சொந்தக்காரரான நிகழ்ச்சி தயாரிப்பாளர் திருவாட்டி பாமா பாலகிருஷ்ணன் நேற்றுக் காலை மாரடைப்பு காரணமாக கூ தெக் புவாட் மருத்துவமனையில் காலமானார்.
இந்திய வானொலி நிலையமான மீடியா கார்ப்பின் ஒலி 96.8எஃப்எம்மில் இவர் கடந்த 39 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார். இந்திய சமூகத்தினரால் நன்கு அறியப்பட்ட திருவாட்டி பாமா, பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி, வானொலிக்கான மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியும் நடித்தும் இருக்கிறார். பொதுக் கருத்தரங்குகளில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டுள்ளார். “திருவாட்டி பாமா தொழில் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். வானொலிக்கே உரித்தான இவரது இனிய குரலை வானொலியில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
“அப்படிப்பட்ட இனிய குரலுக்குச் சொந்தக்­காரரை நாம் இழந்து தவித்தாலும் அவரது இனிய குரல் எப்போதும் நினைவில் நிற்கும்,” என்றார் மீடியா கார்ப் நிறுவனத்தின் தமிழ் & மலாய்ப் பிரிவுத் தலைவர் சித்ரா ராஜாராம்.
மீடியா கார்ப் நிறுவனத்தில் பாமாவுடன் பணிபுரிந்த அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் மறக்க முடியாது என்கின்றனர் அவருடன் இணைந்து பணிபுரிந்தவர்கள். திருவாட்டி பாமாவின் நல்லுடல் 21.6.2015 ஞாயிற்றுக்கிழமை 3.45 மணிக்கு மண்டாய் தகனச் சாலை ஹால்=3ல் தகனம் செய்யப் படவுள்ளது.
Source: http://www.tamilmurasu.com.sg/

No comments: