Thursday, December 15, 2016

'ஹாம் ரேடியோ' வாங்குவது எப்படி?


ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு 'ஹாம் ரேடியோ' உரிமம் வைத்திருக்க வேண்டும் என்கிறார், சென்னை பல்கலை இதழியல் துறை பேராசிரியர் தங்க.ஜெய்சக்திவேல், 37. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'ஹெல்ப் ஆல் மேன்கைண்டு' என்பதன் சுருக்கம் தான், 'ஹாம்'. போலீசார் பயன்படுத்தும் 'வாக்கி டாக்கி' போன்றவையும் 'ஹாம் ரேடியோ'க்கள் தான். இதில், ஒரு நேரத்தில், ஒருவர் பேச, உபயோகத்தில் உள்ள அனைவரும் கேட்க முடியும். இதன் ஒலிபரப்பு, துார, எல்லைகளைக் கடந்தது. இதற்காக, பேசும் கருவி, ஆன்டனா உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து 'ஹாம் ரேடியோ' உபயோகிப்பாளர்களையும் இணைத்து, தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால், இக்கருவியை வாங்கவும், பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை, அரசு விதித்திருக்கிறது. அதற்கான தேர்வெழுதி வெல்வோர், கருவியை வாங்கவும், அவர்களுக்கான, அடையாள எண், உரிமத்தை பெறவும் முடியும். தேர்வு குறித்த விளக்கங்களை, மூத்த அமெச்சூர் வானொலி பயனாளர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.

பயன்கள் :வானொலியைப் போலவே, அனைத்து இடங்களுக்கும், இதை எளிதாக எடுத்து செல்ல முடியும். இதனை இயக்க, குறைந்த அளவு மின்சாரம் போதும். அதிக நாட்கள் பயனளிக்கும். எத்தனை மணி நேரம் பேசினாலும், கட்டணம் கிடையாது. ஒருமுறை கருவிகளை வாங்கும் செலவு மட்டும் தான். பூகம்பம், மண்சரிவு, புயல், வெள்ளம், தீ, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், அனைவரையும் தொடர்பு கொள்ள சிறந்த சாதனம் இது தான். சர்வதேச அளவில், உடனடியான உதவிகளை பெறவும், அளிக்கவும் இது உதவும். கடந்த காலங்களில், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்கள், தகவல் தொடர்பிலும், மீட்பு பணியிலும் பெரும்பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


உரிமம் பெறும் நடைமுறை :இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் இயங்கும், 'ஒயர்லெஸ் மானிட்டரிங் ஸ்டேஷன்', 'ஹாம் ரேடியோ' பயன்பாட்டாளருக்கான உரிமம் வழங்கும் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை எழுத, ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்க வேண்டும். இணையத்தில், ஆங்கிலத்தில் நடக்கும் இந்த தேர்வை எழுத, 'மோர்ஸ் கோடு' எனப்படும், ஒலிபரப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகள், தொடர்பு வழிமுறைகள், அடிப்படை மின்னணுவியல் துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 8 மோர்ஸ் வார்த்தைகளை பதியும் திறமை உள்ளவர்கள், பொது உரிமம் பெற முடியும். இத்தேர்வு, கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகிய நிலைகளில் உள்ளது. தனது நிலைக்கேற்ப, ஒலிபரப்பு துாரமும், தரமும் இருக்கும். ஒவ்வொரு கிரேடு தேர்வுக்கும், ௧௦௦ ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 
தேர்வில் வெற்றி பெற்ற பின், 'கால் சைன்ஸ்' எனப்படும், உரிம எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டே, உரிமம் பெற்றவரின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும். டபிள்யூ.பி.சி., எனப்படும், 'தி ஒயர்லெஸ் பிளானிங் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' என்ற இணையத்தின் வழியாக, 'ஹாம் ரேடியோ' பயன்பாட்டுக்கான தகவல்கள் விண்ணப்பங்கள், புத்தகங்களை பெறலாம்.
தற்காலத்தில், இணையத்தோடு ஹாமை இணைக்கும் மென்பொருட்களும் உள்ளன. அலைபேசிகளோடு இணைக்கும் செயலிகளும் உள்ளன.
நன்றி-தினமலர்

No comments: