Thursday, December 15, 2016

அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம்!


உலகை எச்சரிக்க இதோ புது ரேடியோ சேவை


இந்த உலகில் மாற்ற முடியாத ஒன்றே ஒன்று இயற்கை சீற்றங்கள் தான், இதை எந்த சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் இயற்கைச் சீற்றம் நமக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுக்கிறது. அவ்வப்போது கடலோர மாவட்டங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல் சீற்றங்களின்போது மட்டுமே நாம் ஆபத்துகால மேலாண்மை குறித்துச் சிந்திக்கிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இணைந்திருப்பது "இமாலய சுனாமி'.

பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள சேதத்தைப் பார்க்கும்போது நமக்கே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. மிகப்பெரிய காட்டாற்றின் அருகிலேயே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வைத்துள்ளனர். கங்கையின் முழு வேகத்தினை ஹரித்வார் சென்றால் பார்க்கலாம். அப்படியான அசுர வேகத்தில் பெருவெள்ளம் வரும்பொழுது தடுப்பது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதன்பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலற்றுப் போகும்.

இப்படியான சமயங்களில் மீட்புப் பணிகளே ஸ்தம்பித்துவிடும். இதனால் அந்தப் பகுதிகள் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். நாம் என்னதான் தொழில்நுட்பங்களில் முன்னேறி இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. உதாரணமாக கம்ப்யூட்டர் இணைய வசதி இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. கைப்பேசிக்கு "சிக்னல்' தேவை. வெள்ள பாதிப்பு ஏற்படும்போது "டவர்களும்' அடித்துசெல்லப்படுவது இயற்கையே. ஆக, கைப்பேசிகளும் இயங்காது. தொலைபேசி நிலையங்களுக்கும் இதே கதிதான். தொலைக்காட்சிகளையும் மின்சாரம் இன்றி பார்க்க முடியாது. வானொலியை "பேட்டரி' கொண்டு கேட்கலாம். ஆனால் அதுவும் நீண்ட நேரத்துக்கு உழைக்காது. ஆக அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் செயலற்றுப் போகும் போதெல்லாம் ஆபத்துக்கு கைகொடுப்பவனாக வந்து சேர்வது "அமெச்சூர் வானொலி' எனப்படுகின்ற "ஹாம்' வானொலிதான்.

அமெச்சூர் வானொலி மட்டும் எப்படி இந்தச் சமயத்தில் செயல்படும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவதுதான். இதற்கும் மின்சாரம் தேவைதானே? அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம் இருந்தால் போதுமானது. இதனைக் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக மின்சாரமே கிடைக்காவிட்டாலும் இந்த "ஹாம்' வானொலியை சூரிய சக்தி கொண்டும் இயக்க முடியும்.

அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது "ஹாம்' வானொலி உபயோகிப்பாளர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மின்சாரமே இல்லாதபோது அங்கு அவர்கள் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி பல்வேறு உயிர்களைக் காப்பாற்றினார்கள். "ஹாம்' வானொலியானது சிற்றலைவரிசை மற்றும் மிக உயர் அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அதிக தொலைவிற்குச் செல்கிறது. இதனால் எளிதாக உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ரிபீட்டர்களின் துணைகொண்டு மிக உயர் அதிர்வெண்ணில் இந்தியா முழுவதும் ஒலிபரப்ப முடியும். "ஹாம்' வானொலியாளர்கள் உத்தரகண்டிலும் அரிய சேவைகளைப் புரிந்துள்ளனர். "ஹாம்' வானொலியை அனைவரும் பயன்படுத்த முடியாது.

இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. மாறாக இதற்கென மத்திய அரசு வைக்கும் தேர்வினை எழுதுபவர்களுக்கு முறையான உரிமத்தினை வழங்குகிறார்கள். இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்களுக்கு முக்கிய ஊர்களில் "ஹாம் கிளப்'புகள் உள்ளன. இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்பானது ஹைதராபாதில் உள்ளது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அமெச்சூர் ரேடியோ' என்ற அந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் "ஹாம்' தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு பாடதிட்டத்தினை வழங்கி தேர்விற்கு தயார்செய்கிறது. இப்பொழுது உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பே தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 20,000 பேர் மட்டுமே "ஹாம்' வானொலி உரிமம் பெற்றுள்ளனர். முதல் "ஹாம்' வானொலி உரிமம் 1921-இல் வழங்கப்பட்டது. 1930 வரை இந்தியாவில் 30 "ஹாம்' உரிமங்களே வழங்கப்பட்டன. 1984 வரை "ஹாம்' வானொலிப் பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், அந்த வானொலிப் பெட்டியின் விலையை விட சுங்க வரி அதிகமாக கட்டவேண்டி இருந்தது. . மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். "ஹாம்' வானொலி உரிமம் பெற, 12 வயது நிரம்பிய அனைவரும் தேர்வினை எழுதலாம். "ஹாம்' தேர்வினை எழுதி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனித்துவமான அடையாளக் குறியீடு வழங்கப்படுகிறது.

இதனை ஆங்கிலத்தில் "கால்-சைன்' என்று கூறுகிறார்கள். ஹாம் வானொலிக்கான தகுதித் தேர்வில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் கோட்பாடுகள் மட்டுமல்லாமல் "மோர்ஸ்' குறியீடுகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்தலாம். இரண்டாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட சக்தியில், குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர். இந்தியாவின் சார்பாக சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களுக்கும், இந்தியாவில் "ஹாம்' வானொலியின் பங்கினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டி உள்ளது. "ஹாம்' வானொலியில் இணைந்து நாமும் நாட்டிற்குச் சேவையாற்றலாமே!

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். எது எப்படியோ நாட்டிற்க்கு நன்மை நடந்தால் சரிதான் என்கிறீர்களா.

Written By: Keerthi for http://tamil.gizbot.com/

No comments: