நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 28
ஒலி அலையில் ஒரு பொற்காலப் பயணமாக விசாலாட்சி ஹமீதுவின் நினைவலைகள் இருந்தது. இலங்கை வானொலியின் வரலாறென்பது வெறும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; அது பல ஆளுமைகளின் குரல்களால் நெய்யப்பட்ட ஒரு கலைப் பனுவல். அந்தப் பனுவலின் மிக முக்கியமானதொரு அத்தியாயம், திருமதி விசாலாட்சி ஹமீது அவர்கள். அவரது ஐம்பதாண்டு கால வானொலிப் பயணத்தையும், வாழ்வியல் அனுபவங்களையும் தாங்கி வெளிவந்த "ஒலி அலையில் என் நினைவலைகள்" நூல், ஓர் அறிவிப்பாளரின் சுயசரிதை என்பதைத் தாண்டி, ஒரு காலத்தின் ஆவணமாகத் திகழ்கிறது.
குரலால் கோர்த்த தமிழ் மாலையாக இந்தப் புத்தகத்தைக் கூறலாம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிட்டது போல, விசாலாட்சி ஹமீது அவர்கள் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், தமிழால் வளர்ந்தவர்; தமிழை வளர்த்தவர். ஒரு மொழியின் மீது கொண்ட தீராத காதலும், முறையான பயிற்சியும் ஒருவரை எப்படி உச்சாணிக் கொம்பில் ஏற்றும் என்பதற்கு விசாலாட்சி அவர்களின் வாழ்வே சாட்சி.
அவரது குரல் வளம் வெறும் ஒலி சார்ந்ததல்ல; அது அறிவும், தெளிவும் கலந்ததொரு கலவை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வானொலியின் காற்றலையில் அவர் பதிவு செய்த முத்திரை, இன்றைய தலைமுறை அறிவிப்பாளர்களுக்கு ஒரு பாடப்புத்தகம். வைரமுத்து அவர்கள் சொல்வது போல், "தமிழுக்குக் குரல் கொடுத்த தங்க மகள்" என்று இவரை அழைப்பது மிகப்பொருத்தம்.
துணிச்சலும் கடமையுணர்வும் கொண்டவர் விசாலாட்சி ஹமீது. இந்த நூலில் பதிவாகியுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் இலங்கை வானொலி நேயர்களை வியப்பிலும் மலைப்பிலும் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, இலங்கையின் இனக்கலவரக் காலத்தில், நிரந்தர அறிவிப்பாளர்கள் விடுப்பில் சென்றபோது, துணிச்சலோடு 45 நாட்கள் தமிழ் ஒலிபரப்பைத் தொய்வின்றி நடத்திய அவரது அசாத்தியத் திறன் பாராட்டுக்குரியது.
"வானொலி நிலைய வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வந்தபோதும், உயிரைப் பணையம் வைத்துத் தன் கடமையை ஆற்றிய விசாலாட்சி அவர்களின் மன உறுதி, இன்றைய ஊடகவியலாளர்களுக்கு ஒரு பெரும் பாடம்.
"மதங்களைக் கடந்த மனிதம் கொண்டவர் விசாலாட்சி. அவர்களின் வாழ்க்கை ஒரு அழகான கவிதை போன்றது. இந்து மதத்தைச் சேர்ந்த கேரளாப் பெண்ணான இவருக்கும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தமிழகத்துப் பின்னணி கொண்ட வணிகப் பிரமுகரான திரு. ஹமீது அவர்களுக்கும் இடையே பாலமாக இருந்தது 'முத்தமிழ்'.
கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிடுவது போல, இவர்களது இல்லறம் என்பது மதங்களைக் கடந்து கலையாலும், பண்பாலும் பிணைக்கப்பட்டது. 1974-களில் ஒரு பல்கலைக்கழக மாணவியாக அருந்ததி அவர்கள் விசாலாட்சியைப் பார்த்தபோது எழுந்த வியப்பு, இன்று ஒரு வரலாற்றுப் பதிவாக மாறியிருக்கிறது. பெயரில் இருந்த குழப்பம், அவர் பேசும் தூய தமிழைக் கேட்டுத் தெளிவடைந்ததாக அருந்ததி குறிப்பிடுவது, விசாலாட்சி அவர்களின் மொழிப் புலமைக்குச் சான்று.
பண்முகத்தன்மை கொண்ட ஆளுமை விசாலாட்சி ஹமீது. இவர்களை வெறும் அறிவிப்பாளராக மட்டும் நாம் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இவர் ஒரு சிறந்த பாடகர், ஆற்றல்மிக்க நடிகை, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தேர்ந்த ஓவியர்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள அவரது கணவரின் உருவப்படம் விசாலாட்சி அவர்களாலேயே வரையப்பட்டது என்பது பலருக்குப் புதிய தகவல். அவரது குடும்பம் இன்று நான்கு மதங்களையும், நான்கு மொழிகளையும் தழுவி ஒரு 'மினியேச்சர் உலகமாக' விரிந்து கிடப்பது, அவரது பரந்த மனப்பான்மைக்கும், அன்பிற்கும் சான்றாகும்.
தொழில்முறை நுட்பங்கள் கொண்டது இந்த நூல். இந்நூல் ஏன் ஒரு கையேடாகக் கருதப்படுகிறது என்பதற்குக் கலாசூரி அருந்ததி அவர்களின் அவதானிப்பு முக்கியமானது. இசைச்சித்திரங்கள் மற்றும் உரைநடை வாசிப்பில் விசாலாட்சி அவர்கள் காட்டும்: சொற்தெளிவு குரல், ஏற்ற இறக்கம், பொருத்தமான இடங்களில் நிறுத்தம் இவை அனைத்தும் வானொலிக் கலையில் ஈடுபட விரும்பும் எவருக்கும் அரிய தகவல்கள்.
எதனையும் அரைகுறையாகச் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் செய்யும் அவரது பாங்கு, அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஒரு கலைப்படைப்பாக மாற்றியது எனலா,.
"ஒலி அலையில் என் நினைவலைகள்" ஒரு சாதாரண நினைவுக்குறிப்பு அல்ல. இது ஒரு பெண்ணின் விடாமுயற்சி, மொழியின் மீதான பற்று, இக்கட்டான சூழலில் காட்டிய துணிச்சல் மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளம்.வைரமுத்து அவர்கள் சொல்வது போல, "இலங்கை வானொலியின் வரலாற்றுப் பொன்னேடு" விசாலாட்சி அவர்களின் சேவையைத் தப்பாமல் குறித்துக்கொள்ளும்.
தமிழை நேசிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும், வானொலிக் கலையை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இந்நூல் இடம்பிடிக்க வேண்டியது அவசியம்.விசாலாட்சி ஹமீது எனும் அந்த மெல்லிடைப் பெண்ணின் குரல், காலவெளியைத் தாண்டி இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: விசாலாட்சி ஹமீது, 567/2ஏ, ஹெவ்லாக் சாலை, கொழும்பு - 6, இலங்கை. பக்கங்கள் 140, விலை ரூ.50.

No comments:
Post a Comment