நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 30
இலங்கை வானொலிக் காற்றின் தூதுவன் என்றே இவரைக் கூறலாம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் "காற்று வெளியினிலே..." - ஓர் இலங்கை வானொலி இலக்கியப் பேருரையாக வெளிவந்தது.
ஒலியின் ஓவியம் என்றால் அது அப்துல் ஜப்பார் அன்றி வேறு யார்? வானொலி என்பது ஒரு மாயக்கண்ணாடி. அதன் வழியே கேட்கும் குரல்கள் நமக்குள் உருவங்களைச் சமைக்கின்றன, உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. காலங்காலமாக வானொலித் துறையில் எத்தனையோ குரல்கள் வந்து மறைந்திருந்தாலும், ஒரு சில குரல்கள் மட்டுமே காலத்தின் சுவடிகளில் அழியாத தடங்களை விட்டுச் செல்கின்றன. அத்தகையதொரு ஆளுமைதான் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
அவரது ஊடகப் பயணத்தின் அனுபவப் பெட்டகமாகத் திகழும் "காற்று வெளியினிலே..." (மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடு) நூல், வெறும் நினைவலைகள் மட்டுமல்ல; அது ஒரு இலங்கை வானொலி காலத்தின் வரலாற்று ஆவணம்.
பன்முக ஆளுமையின் பரிமாணங்களை இந்த நூலின் ஊடாக அறி முடிகிறது. அன்புக் கவிஞர் அறிவுமதி குறிப்பிடுவது போல, ஜப்பார் அவர்கள் "தரையில் குத்தி மணிலாக்களைப் போடும் விளைந்த சிந்தனைகள் கொண்டவர்". அவரது ஆளுமை பல தளங்களில் விரிந்து கிடக்கிறது.
இலங்கை வானொலியில் டகக் கலைஞராக அவர் இருந்த காலத்தை மறக்கத்தான் முடியுமா? இலங்கை வானொலியில் 'எஸ்.எம்.ஏ. ஜப்பார்' என்ற பெயரில் நாடகத் துறையில் தடம் பதித்தவர். பி.ஹெச். அப்துல் ஹமீது போன்ற இளைய தலைமுறை கலைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், முன்மாதிரியாகவும் விளங்கியவர்.
விளையாட்டு வர்ணனையாளராக முத்திரைப் பதித்தவர். கிரிக்கெட் மைதானத்தின் விறுவிறுப்பைத் தனது சொற்களால் நேயர்களின் வரவேற்பறைக்கே கொண்டு வந்தவர். "விளையாட்டு வர்ணனைகளில் விளையாடிப் பார்த்தவர்" என்ற அறிவுமதியின் கூற்று மிகையானதல்ல.
லண்டன் ஐ.பி.சி (IBC) வானொலி மற்றும் தீபம் தொலைக்காட்சி வாயிலாக உலகத் தமிழர்களிடையே அரசியல் விமர்சகராக மட்டுமல்லாது ஓர் அரசியல் ஆய்வாளராகப் பரிணமித்தவர். தற்கால அரசியலைத் தனது 'சாட்டை' போன்ற சொற்களால் வெளுத்து வாங்கும் துணிச்சல் மிக்கவர்.
இவர் ஒரு வானொலி அனுபவப் பல்கலைக்கழகம். 184 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், அப்துல் ஜப்பார் அவர்கள் 'தினகரன்' வாரமஞ்சரியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். கலைமாமணி வி.கே.டி. பாலன் கூறுவது போல், இது அவரது "அனுபவப் பல்கலைக் கழகத்தின் சுவைமிகு வகுப்பு".
புலம்பெயர் உறவுகளுடனான பிணைப்பாக இருந்தவர். பிரிட்டன், ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா எனப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஜப்பார் ஒரு உறவினராகவே மாறிவிட்டார். "இரண்டையும் (நினைவாற்றல் மற்றும் தமிழாற்றல்) குழைத்து இவர் புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவுகளிடம் உரையாடுகிற வெற்றி வரலாற்று வெற்றி" என அறிவுமதி இதனைச் சிலாகிக்கிறார்.
அரங்கம் அந்தரங்கம் நிகழ்ச்சியைத் தான் மறக்க முடியுமா? லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இவர் நடத்திய நேர்காணல்கள், ஒரு மனிதரின் ஆளுமையை மட்டும் வெளிப்படுத்தாமல், அவரது ஆழ்மனது உணர்வுகளையும் பதிவு செய்தன. இந்த நூலில் அத்தகைய சந்திப்புகளின் சுவாரசியமான பின்னணிகள் விவரிக்கப்பட்டுள்ளன.
தொன்மமும் நவீனமும் கொண்டத் தமிழாளுமை. ஜப்பாரின் மிகப்பெரிய பலம் அவரது மொழி. அவர் "அதிபுதிய வானூர்தியின் வேகத்தில் தொன்மத் தமிழைத் தூவி விடுபவர்". பழமையான இலக்கணச் செழுமையும், நவீன ஊடக வேகமும் அவரிடம் ஒருங்கே சங்கமிக்கின்றன.
அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது தனது முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார்: "தமிழைச் சரியாக உச்சரிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கடித்துக் குதறாமல், தெளிவான குரலில் இனிமையுடன் தமிழை ரசித்து அழகுற உச்சரிக்கும் பாங்கு" ஜப்பாரிடம் இருந்தது. இதுவே அவரை ஈழத் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழர்களிடமும் கொண்டு சேர்த்தது.
இந்த நூல் இலங்கை வானொலி வரலாற்றுப் பதிவின் அவசியமாகக் கருதப்படுகிறது. காற்றலையில் கலை படைப்பவர்கள், அந்தக் காற்று கலைந்து போவது போல் காலத்தால் மறக்கப்பட்டு விடுவார்கள் என்ற ஆதங்கம் அப்துல் ஹமீதுக்கு உண்டு. அந்தத் துர்ப்பாக்கியத்தைப் போக்கும் முயற்சியே இந்த நூல்.
இலங்கையின் இலக்கியப் பிதாமகன் எஸ்.பொ அவர்களின் பெருமுயற்சியால், மித்ர வெளியீடாக இது அச்சு வாகனத்தில் ஏறி வெளிவந்தது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பி.ஹெச். அப்துல் ஹமீது ஆகியோரின் நீண்ட கால விருப்பம் இந்த நூலின் மூலம் நனவாகியது.
ஒரு சுவைமிகு பயணம் தான் இந்த "காற்று வெளியினிலே..." நூல், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எனும் ஒரு மனிதரின் வாழ்வை மட்டும் பேசவில்லை; அது தமிழ் வானொலித் துறையின் பொற்காலத்தை, அரசியல் மாற்றங்களை, மற்றும் ஒரு கலைஞனின் நேர்மையை நுட்பமாகப் பதிவு செய்கிறது. "அன்பூறிய நெஞ்சத்தின் ஒளிவு மறைவற்ற எளிய வியப்பு" இந்த நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது.
ஊடகத் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கும், இலங்கை மற்றும் உலக அரசியல் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தமிழ் மொழியின் சுவையை நுகர விரும்புபவர்களுக்கும் இது ஒரு பொக்கிஷம்.
தலைப்பு: காற்று வெளியினிலே...
ஆசிரியர்: சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
பக்கங்கள்: 184
தொடர்புக்கு: 044 24721336

No comments:
Post a Comment