Showing posts with label கூத்தபிரான். Show all posts
Showing posts with label கூத்தபிரான். Show all posts

Thursday, January 22, 2015

அவரும் ஒரு குழந்தையே

கூத்தபிரானுடன் வானொலியில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். எளிமையானவர், சூதுவாது தெரியாதவர். 1945-இல் கூத்தபிரான் பெற்றோருடன் சென்னை வந்தார். நாடு சுதந்திரம் பெற்ற அன்று நள்ளிரவில் ஒரு பூங்காவில் மூவர்ணக்கொடி ஏற்றியபோது அவரும் இருந்தார்.
இந்த உணர்வு பிற்காலத்தில், "மூவர்ணக்கொடி ஏற்றுவோம்' எனும் சிறுவர் தொடர் நாடகம் சென்னை வானொலியில் ஒலிபரப்ப கருவாக அமைந்தது. அந்த நாடகத்தை காஞ்சிப் பெரியவர் முழுமையாகப் படித்துப்பார்த்து, "சன்மார்க்கப் பிரகாசமணி' விருது வழங்கினார்.
வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகத்தான் சேர்ந்தார் என்றாலும், அப்போதே அன்றைய வானொலி அண்ணா, ரா. அய்யாசாமிக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். அவர் ஓய்வு பெற்ற பின், மழலை அமுதம், பாப்பா மலர், சிறுவர் சோலை ஆகியவற்றை கூத்தபிரானே தயாரித்து நடத்தினார்.
பெரியசாமி தூரனின் சிறுவர் கலைக் களஞ்சியத்தை முழுமையாகப் படித்து ஜீரணித்து, தொடராக ஒலிபரப்பினார்.
ராஜாஜி, அழ. வள்ளியப்பா, தூரன், பூவண்ணன், ராமகிருஷ்ண மடத்தின் அண்ணா ஆகியோரது குரலிலேயே, பாப்பாவுக்கு ஒரு கதை எனும் தொடரை ஒலிபரப்பச் செய்தார்.
"பாதி சொல்வோம் மீதி என்ன' போன்ற நிகழ்ச்ச்சிகளையும், "சொப்பனக் குழந்தை' போன்ற தொடர் நாடகங்களையும் தயாரித்தளித்தார். இவற்றில் எல்லாம் குழந்தைகளே கதாபாத்திரங்கள்.
வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி என்றாலே விழாக்கோலம் பூணும். குழந்தைகளை வாயிலுக்கே சென்று அவர் வரவேற்பார். பிழையறப் பேசுங்கள் எனும் தொடர் மூலம் தமிழைச்சரியாக உச்சரிக்கக் கற்றுத்தந்தார்.
1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி, அழ. வள்ளியப்பா ஏற்பாடு செய்து, ராஜாஜி கலந்துகொண்ட சிறுவர் நாடக விழாவில் கூத்தபிரான் முதல் பரிசு பெற்றார். ராஜாஜியின் ஆசி கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக அவர் கருதினார்.
1952-இல் டி.கே.எஸ்ஸின் கள்வனின் காதலி நாடகம் பார்த்தபோது, மேடையேறி, டி.கே. ஷண்முகத்தைப் பாராட்டினார். அன்று துவங்கியது அவரது நாடக வாழ்க்கை. 1953-இல் ரசிக ரஞ்சனி சபாவில் அவர் எழுதித் தயாரித்த "அவள் நினைவு' அரங்கேறியது.
1954-இல் துக்ளக் ஆசிரியர் சோ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் துவக்கியபோது, முதல் நாடகம், தேன் மொழியாள், கூத்தபிரான் எழுதியது. பகீரதன் கல்கியில் எழுதிய நாவலை நாடகமாக்கியது தான் இது. பின்னர், சோ எழுதிய ஒருசில நாடகங்களிலும் நடித்தார்.
கல்கி ஃபைன் ஆர்ட்ஸ் துவக்கினார். பின்னர் நவ பாரத் எனும் குழுவைத் துவக்கி 26 ஆண்டுகள் நடத்தினார். கூத்தபிரானின் கதாபாத்திரப் படைப்பு, இயற்கையாக இருக்கும் என்று சோ சொல்வார். அவர்களுக்கிடையே இருந்தது, வாடா நட்பு. ஆம், வாடா போடா என்றுதான் பேசிக்கொள்வார்கள்.
அவரது இயற்பெயர் நடராஜன். அவரது மனைவி லலிதாவின் யோசனையை ஏற்று, கூத்தபிரான் என்று மாற்றிக்கொண்டார். பெயர் மாற்றம் நடந்தது, வைத்தீஸ்வரன் கோயிலில்.
கூத்தபிரான், 26 நாடகங்களையும், குழந்தைகளுக்காக 20 நூல்கள் எழுதியுள்ளார். ஆறாயிரம் நாடகங்களில் நடித்துள்ளார். 80 வயதிலும், "காசிக்குப் போன கணபதி' நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
குழந்தைகளைப் பார்க்கும்போதும், அவர்களுடன் சரிசமமாகப் பேசும்போதும், கதைகளுக்குக் கரு கிடைப்பதாக அவர் சொல்வார்.
ஒவ்வொரு குழந்தைக்கு உள்ளேயும் நூற்றுக்கணக்கான கதைகள் புதைந்திருக்கும், என்பார். இவற்றைக் கூர்ந்து கவனித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி ஒலிபரப்பினார்.
குழந்தைகளே உலகம் என்று உறுதியாக எண்ணினார். அதை எடுத்துச்சொல்வதற்காகவே தாம் பிறந்ததாக நினைத்தார். குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களே தெரியும். அவர்களிடம் தீய எண்ணங்களை அண்டவிடக்கூடாது, என்பார்.
குழந்தைகளுக்காக ஒரு சிறுவர் சங்கத்தை, இறுதி மூச்சு வரை நடத்திவந்தார். குழந்தைகள் நாடகக்குழு வைத்திருந்தார். குழந்தை உள்ளம் படைத்த அவரும் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டிருந்தார்.
First Published : 25 December 2014 02:30 AM IST
நன்றி / தினமணி

Thursday, January 15, 2015

வானொலி அண்ணாவுக்கு தினமணியின் அஞ்சலி

நன்றி / திரு.எச்.ராமகிருஷ்ணன், தினமணி 25/12/2014

Thursday, January 01, 2015

கூத்தபிரான் அவர்களுக்கு அஞ்சலி

பழம்பெரும் நாடக நடிகர் கூத்தபிரான் காலமானார். தனது வாழ்க்கையை, ஆல் இந்தியா ரேடியோவில், அறிவிப்பாளராக துவக்கிய கூத்தபிரான், குழந்தைகளுக்காக அவர், நாடகங்களை எழுதி இயக்கி நடிக்கச் செய்தார். 1970ம் ஆண்டுவாக்கில், இளைய தலைமுறையினரிடையே, 'வானொலி அண்ணா' என்று அன்போடு அழைக்கப்பட்டார். கூத்தபிரான், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்பிக்கும் பொருட்டு, 800க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சினிமா மற்றும் டிவிக்களின் வருகையால், ஒருபோதும் நாடகக்கலை பாதிக்கப்படாது என்றும், மற்ற ஊடகங்களை விட, நாடகங்களில் தான், பார்வையாளர்களின் பங்கு பெருமளவு இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஐந்து தலைமுறை மக்களை மகிழ்வித்த கூத்தபிரான், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டில், மாநில அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மியூசிக் அகாடமி, நாடக கலா சிரோன்மணி விருது வழங்கி கவுரவித்தது.
நன்றி / தினமலர் 23டிச 20142

வானொலி அண்ணா காலமானார்

பிரபல நாடகக் கலைஞரும் வானொலியில் நாடகங்கள் நடத்தி வானொலி அண்ணா என புகழ்பெற்றவருமான கூத்திபரான் நேற்று மரணமடைந்தார்.   நாடகங்களின் மீத தணியாத காதல் கொண்ட அவர் தம் இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அக்காலத்து வானொலியில் குழந்தைகளுக்கான நாடகங்களை தம் குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசி குழந்தைகள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தார்.  நாடக உலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர்.  கூத்தபிரான் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. அவரது இழப்பு நாடக உலகிற்கும் நகைச்சுவை விரும்பிகளுக்கும் ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையில்லை.  சென்னையில் நேற்று முன்தினம் நாடகம் நடித்து விட்டு ஒரு நிகழ்சிக்காக நேற்று ஹைதரபாத் சென்றவர் இரவு தூங்கும் போது மரணமடைந்தார்.அவருக்கு வயது 84 .அவரது உடல் ஐதராபாத்திலிருந்த்து இன்று சென்னை அடையாரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப் படுகிறது. அவரது உடலுக்கு பிரபலங்கள் மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. -
See more at: http://www.thinakkural.lk/


வானொலி அண்ணா காலமானார்

3
டிச
2014

Tuesday, December 30, 2014

வானொலி அண்ணா' கூத்தபிரான் காலமானார்


"வானொலி அண்ணா' என்று அழைக்கப்படும் நாடகக் கலைஞர் கூத்தபிரான் (84) ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய அவர், "வானொலி அண்ணா' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
எண்ணற்ற வானொலி நாடகங்களை எழுதி இயக்கியுள்ள கூத்தபிரான், 7,000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) சென்னை தியாகராய நகர் ராமாராவ் கலா மண்டபத்தில் "ஒரு ரோபோவின் டைரி' என்ற நாடகத்தில் அவர் கடைசியாக நடித்தார். இந்த நாடகத்தை இயக்கியவர் அவரது மகன் என். ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றவர் அங்கேயே மாரடைப்பால் காலமானார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
புதன்கிழமை (டிச. 24) பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மறைந்த கூத்தபிரானுக்கு கணேஷ், ரத்தினம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் நாடகக் கலைஞர்கள்.
தொடர்புக்கு: 94447 43084.
நன்றி தினமணி 24 December 2014