Showing posts with label நேஷனல் RX-M50. Show all posts
Showing posts with label நேஷனல் RX-M50. Show all posts

Tuesday, August 19, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 3)


சிற்றலை வானொலிகளைக் கேட்க டெலஸ்கோப்பிக் ஆன்டெனா மிகவும் உதவுகிறது. சிலவீடுகளில் ஜன்னல் மூலைகளில் வானொலிப் பெட்டியை வைத்துக் கேட்கும் போது, ஒலியின் தரம்உயர்ந்து காணப்படும். இதனை அட்டெனுவேஷன் (Attenuation) என்கிறோம். எனவே சிற்றலை கேட்பவர்கள் “பேட்டரி” மூலம் வானொலி பெட்டியை இயக்கி, வீட்டின் பல பகுதிகளில் வைத்து சோதனை செய்தால் ஒலியின் தரம் சில மூலைகளில் அதிகமாகவும், தெளிவாகவும் இருக்கும்.

பொதுவாக, நமது நாட்டுக்கு நல்ல திறனுடன் ஒலிபரப்பப்படும் வானொலிகளைக் கேட்க டெலஸ்பிக் ஆன்டெனா போதுமானது. ஆனால் சில வெளிநாட்டு வானொலிகள் சக்தி உள்ளவைகளாக இருந்தபோதும், வெகு தொலைவிலிருந்து எந்த வித அஞ்சல் வசதியில்லாமல் நேரடியாகஒலிபரப்பு செய்யும் போது வெளி ஏரியல் தேவைப் படுகிறது. உதாரணமாக ரேடியோ அர்ஜென்டீனா,பிரான்ஸ், நியூஜிலாந்து, ஈக்வடார், ஸ்வீடன் போன்ற நாடுகளின் வானொலிகளை வெளி ஏரியில் மூலம்தெளிவாகக் கேட்கலாம்.

சிலசமயம் வானொலிகள் மற்ற நாடுகளுக்கான சேவைகளை ஒலிபரப்பு செய்யும்போது அவை நமக்காக இல்லாவிட்டாலும் நாம் வெளி ஏரியல் மூலம் தெளிவாகக் கேட்கலாம். சிற்றலை நேயர்களுக்கு QSL எனப்படும் அத்தாட்சி அட்டை சேகரிக்கும் ஆர்வம்உள்ள அவர்கள் அவசியம் வெளி ஏரியலைத் தேர்ந்தெடுத்து வெகுதொலைவில் உள்ள வானொலிகளைத் தேடலாம். வெளி ஏரியல் டெலஸ்கோப்பிக் ஆன்டெனாவுடன் இணைத்ததும் பல மடங்கு தெளிவாகக் கேட்கும். சிற்றலை நேயர்கள் வானொலி கேட்கும் போது கணினி, தொலைக் காட்சி, ட்யூப் லைட், மிக்ஸி போன்ற சாதனங்களை நிறுத்திவிட்டால் அவை எழுப்பும் மின்காந்த அலைகளின் இடையூறு குறையும்.

வெளி ஏரியல் உபயோகிக்கும்போது ‘எலக்ட்ரானிக் சோக்’ பொருத்தப்பட்ட ட்யூப்லைட்டு களைத் தவிர்ப்பது நல்லது. “எலக்ட்ரானிக் சோக்” வானொலியின் சமிக்ஞைகளை (Signal) அழுத்துவதால், சிற்றலை வானொலிகள் சரிவரக் கேட்பதில்லை,அடிக்கடி மின்னிக்கொண்டு இருக்கும் ட்யூப்லைட்டுகள் ரேடியோ ஒலிகளைப் பெரிதும் பாதிக்கும்.“சோக்” பழுதடைந்தால் “பர்ர்ர்” என்ற “வண்டு பறக்கும்” சத்தம் கேட்கும், பொதுவாக இவைகளை“மனித இடையூறுகள்” என அழைக்கலாம். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Wednesday, August 13, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50

நண்பர்களை நாடுகிறோம். ஆனால் நண்பர்கள் எப்போதுமே நம் அருகில் இருப்பதில்லை. எனவேநாம் வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, கணினி போன்ற சாதனங்களை நாடுகிறோம். நான்சிறுவனாக இருந்தபோது வானொலிப் பெட்டியைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி மகிழ்ந்தனர். நான் உங்களுக்கு ஒரு நண்பனை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த நண்பன் வேறு யாருமில்லை.

நான் பயன்படுத்தி வரும் “நேஷனல்/பானாஸோனிக் ரேடியோ-கேசட் ரெக்கார்டர்” ஆகும். அதன் மாடல் எண் “RX-M50 ” இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சர்வதேச வானொலி” இதழில் முத்திரை நேயர்கள்வரிசையில் என்னைப்பற்றியும், இளமைக்காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களைப் பற்றியும் ஒருகட்டுரை வெளியானது. இதன் மூலம் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். சிலர் என்னைநேரிலும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கேட்ட கேள்வி என்னவெனில் “நான்ஏதேனும் விலை உயர்ந்த, பல வசதிகள் கொண்ட டிஜிட்டல் வானொலிப்பெட்டி வைத்துள்ளேனா?”என்பதுதான்.

நான் வெகுதொலைவில் உள்ள வானொலிகளான ரேடியோ நார்வே, °ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, ஈக்வடார், ஆஸ்திரியா, ஜெர்மனி,நெதர்லாந்து போன்றவைகளை கேட்டுள்ளதால் அவ்வாறு எண்ணினார்கள். சிலர் நான் பதிவு செய்துவைத்திருந்த ஒலிநாடாக்களை (கேசட்டுகளை) கேட்டுவிட்டு மிகவும் வியந்தனர். இன்னும் சிலர் நான்பயன்படுத்திவரும் ஆன்டெனாவைப் பற்றி அறிய விரும்பினார்கள். எனவே பலரது ஐயங்களை நீக்கிடஇந்த நண்பனின் தகவல்களை வழங்குகிறேன்.

நேஷனல் RX-M50 (NATIONAL RX-M50) ரேடியோ கேசட் ரெக்கார்டரில் அனலாக் (ANALOG)எனும் டயல்முறை ட்யூனிங் (அலை எண் திருத்தும் முறை) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு அலைவரிசைகள் (Wave Band) உள்ளன. பண்பலை, ஆறு மத்திய அலை சிற்றலை 1 & 2ஆகியவை உள்ளன. இன்றும் ஒருசில நாடுகள் நெட்டலையை உள்நாட்டுச் சேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு வானொலிகளைக் கேட்க சிற்றலை வரிசை மிக முக்கியமானது.

நேஷனல் RX-M50 மாடல் ஜப்பானில் உள்ள ஒஸாகா நகரில் மாட்ஸீ ஷீட்டா எலக்ட்ரிக் இன்ட°டிரியல் கம்பெனியால் தயார் செய்யப்பட்டதாகும். முதலில் “நேஷனல்” என்ற பெயரிலும், பிற்காலத்தில் “பானாசோனிக்” என்ற பெயரிலும் பல மாடல்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றது. (தொடரும்..)
- சென்னை வி. பாலு