Showing posts with label ராஜாராம். Show all posts
Showing posts with label ராஜாராம். Show all posts

Friday, May 24, 2013

பொன்விழாக் காணும் சீனத் தமிழ் வானொலி



 சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்.
 தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர்.
 "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது.
 சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.
 அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் வல்லுநர்களாகச் சீன வானொலியில் சேவையாற்றினர்.
 முதலில் தமிழ் கற்ற அந்த மாணவர்களைக் கொண்டே அந்த முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் அதன் பெயர் "பீகிங் வானொலி' என்று இருந்தது. அதன் பின் "பெய்ஜிங் வானொலி' எனப் பெயர் மாற்றம்பெற்று இன்று "சீன வானொலி' என்று தமிழிலும் "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
 சீன வானொலி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமானவை. தொடக்க காலத்தில் அரை மணி நேரமே ஒலிபரப்பி வந்த தமிழ் சேவை 2004 முதல் ஒரு மணி நேரச் சேவையாக உலா வந்தது.
 தினமும் இந்திய நேரம் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
 மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் காலையும் 7.30 முதல் 8.30 வரையும், 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
 சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்க முடியும்.
 இவர்கள் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
 "தமிழ் மூலம் சீனம்' என்ற பெயரில் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. மிகவும் எளிதாக, மெதுவாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர்.
 அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடத்திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் எளிதாக இந்த நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
 நேயர்களையும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நேருக்கு நேர், நேயர் நேரம், நட்புப் பாலம், உங்கள் குரல், கேள்வியும் பதிலும், நேயர் கடிதம் மற்றும் நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி வருகிறது.
 இதுதவிர சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஒவ்வோராண்டும் பொது அறிவுப் போட்டியை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்குவதோடு பம்பர் பரிசாக ஒரு நேயரை சீனாவுக்கு இலவசப் பயணமாக அழைத்துச் செல்கின்றனர்.
 இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தமிழக நேயர்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 சீன வானொலி தமிழ்ப் பிரிவினில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர். சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணி போன்ற அறிவிப்பாளர்கள் சீன வானொலியின் நேயர்கள் மனதினில் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் பெயர்கள்.
 சீன வானொலிக்கு நேயர்கள் கடிதம் எழுதச் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, நேயர்களுக்கு இலவச வான் அஞ்சல் கடித உரைகளை அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் நேயர்கள் விமர்சனக் கருத்துகளை பைசா செலவில்லாமல் அனுப்பி வருகின்றனர்.
 தமிழகத்தில் இந்த வானொலிக்காக "அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றம்' செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வோராண்டும் நேயர்கள் கூடும் நிகழ்வாக கருத்தரங்கங்களை நடத்துகின்றனர்.
First Published : 31 July 2012 01:05 AM IST
நன்றி: தினமணி

Sunday, December 13, 2009

அகில இந்திய வானொலியின் ராஜாராம் - சிறப்பு செவ்வி


வானொலித் துறையானது பல்வேறு வடிவங்களில் மாற்றம் அடைந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் உங்களின் கருத்து?
வானொலி மற்றும் ஒலிபரப்பு நுட்பங்கள் முன்னேறி வருகிறது. அன்மையில் எங்களுக்கு அகில இந்திய வானொலியில் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வானொலியில் இருந்து அந்த பயிற்சியை வழங்கினர். வானொலித் தொடர்பான பல வேலைகளை ஒருவரே எப்படி செய்வது என்பது தான் அந்தப் பயிற்சியின் நோக்கம்.

உதாரனமாக ஒரு விவசாய நிகழ்ச்சியை அந்த விவசாயி இருக்கும் பகுதிக்கே சென்று நிகழ்ச்சியை பதிவு செய்து அங்கேயே அதனை எடிட் செய்து செயற்கைக்கோள் மூலம் நிலையத்திற்கு அனுப்பி அப்படியே ஒலிபரப்பும் வகையில் அந்தப் பயிற்சி இருந்தது.

அந்தப் பயிற்சியின் நிறைவில் கூறினேன், பயிற்சி நன்றாக இருக்கிறது ஆனால் இதனை செயல்படுத்தினால் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். ஆனால் பயிற்சி அளித்தவர் கூறினார், இதன் மூலம் பல புதிய செய்திகனை உடனுக்குடன் வழங்கலாம். ஆனாலும் அதற்கான நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தற்பொழுது சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆள்பற்றாக்குறை, புதிய ஆட்களையும் சமீபகாலமாக நியமிப்பதில்லை.

தமிழ் செய்தி அறிக்கையில் தங்களின் அனுபவம் குறித்து கூறுங்கள்?
டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளில் ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய செய்தி அறிக்கைகள் மட்டுமல்லாமல் தமிழ் செய்திகளும் இணையத்திலும் கேட்கலாம். நியூஸ் ஆன் டிமான்ட் இணையதளத்தில் தமிழ் செய்திகளை கேட்பதோடு படிக்கவும் செய்யலாம்.

தமிழ் செய்திப் பிரிவில் நானும் சபீதா குமாரும் முழு நேர ஊழியர்கள். மற்றவர்கள் அனைவரும் பகுதி நேர பணியாளர்கள். தமிழில் டைப் செய்வதற்கு உதவியாக ஒரு மென் பொருளை ஹிந்திப் பிரிவில் கொடுத்தார்கள். அதன் துணை கொண்டு தமிழிலேயே தட்டச்சு செய்து படிக்க ஆரம்பித்தோம். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

இணையம் தங்களுக்கு எந்த அளவிற்கு செய்தி தயாரிப்பில் பயன்படுகிறது?
சென்னை வானொலி நிலையம் காலை தயாரிக்கும் மாநிலச் செய்திகள் மற்றும் திருச்சி வானொலி நிலையம் மதியம் தயாரிக்கும் முக்கியமான மத்திய செய்திகளை தற்பொழுது இணையத்தில் பார்த்துக்கொள்வதால் அவற்றையெல்லாம் மத்திய செய்திப்பிரிவுக்கு எடுத்துக்கொள்வோம். இது எங்களது செய்திப் பிரிவு டைரக்டருக்கு பிடித்துவிட்டது.

பொங்கல் விழாவின் போது எங்களால் தொடங்கப்பட்ட இந்த சேவை மற்ற மொழி பிரிவினர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் எங்களது இயக்குனர் தமிழ் பிரிவினர் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக உள்ளனர் என்றது தான். அங்கு வந்த குஜராத்தி மொழி பிரிவின் தலைவர் “நாங்கள் இந்த பணியினை ஏற்கனவே செய்து வருகிறோம்” என்றார். அதற்கு இயக்குனர் “தமிழ் பிரிவினர் அதனை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துள்ளனர்” என்றது மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது எனலாம்.

புது தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு எப்படி செயல்படுகிறது?
முதலில் செய்திகள் “பொது செய்திப்பிரிவு அறைக்கு” வரும். அதனை அங்குள்ள எடிட்டர் பெற்று மொழிப்பிரிவுக்கு அனுப்புவார். அவர் நல்ல எடிட்டராக இருந்தால் முக்கிய செய்திகள் அனைத்தினையும் எங்களுக்கு அனுப்புவார். ஒரு சிலர் தமிழ் நாடு என்று வந்தால் மட்டுமே அந்த செய்தியை எங்களுக்கு அனுப்புவர். இப்படி ஒவ்வொரு பிரிவாக கடந்து வரும்பொழுது, ஒரு சில முக்கியச்செய்திகள் விடுபட்டுவிடும். ஆனால் இந்த இணையதள வசதி வந்த பிறகு அது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுவிட்டது எனலாம்.

வானொலி பணிக்கு தாங்கள் எந்த ஆண்டில் நுழைந்தீர்கள்?
1973 மே மாதம் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு பிரிவில் செய்தி எழுத்தராக பணியில் சேர்ந்தேன். அதற்கு முன் திருநெல்வேலி தினமலரில் பணியில் இருந்தேன். அதன் பின் மதுரை மற்றும் சென்னை தினமலரில் பணியாற்றினேன்.

தங்களின் படிப்பு எங்கே தொடங்கியது?
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னடப்பள்ளி. எனது உயர் நிலைப்படிப்பு எங்கள் ஊரின் அருகேயேத் தொடங்கியது. அதன் பின் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய பேராசிரியர் தா. வளனரசு, அவர் என்னை வழிநடத்திடா விடில் நான் ஏதேனும் ஒரு அரசு அலுவலகத்தில் கிளர்க்காக பணியை முடித்திருப்பேன். தமிழ் மேல் ஒரு பற்றுதலை உருவாக்கியவர் எனலாம். காரணம் அவர் ஒரு நல்ல பேச்சாளர். நான் இளங்கலை பொருளாதாரம் படித்துவிட்டு வேலைத் தேடிக்கொண்டு இருந்த சமைத்தில் இவர் தான் என்னை தினமலரில் சேர்த்துவிட்டார். (தொடரும்)

Monday, December 29, 2008

சீன வானொலி: 20-வது கருத்தரங்கம்


சீன வானொலி நேயர்மன்றத்தின் 20-வது கருத்தரங்கம் வெகு சிறப்பாக நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் (28-12-2008) நடைபெற்றது. இதில் சீன வானொலியின் நிபுனர்கள் சிவகுமார், கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் பங்கேற்றனர். சீன வானொலி கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிபுனர்கள் ஒரே மேடையில் சந்திப்பது இதுவே முதல் முறை. விழாவில் 'சீன வானொலி மன்றம்' எனும் காலாண்டு இதழ் வெளியிடப்பட்டது. மேலும் 20 நேயர்களுக்கு சிறந்த நேயர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களுக்கும் நினைவுப் பரிசாக 3டி ஒலிம்பிக் வண்ண அட்டை வழங்கப்பட்டது.


'சீன வானொலி மன்றம்' காலாண்டு இதழ்


கருத்தரங்க புகைப்படங்களை காண, கீழகண்ட தொடுப்பினை சொடுக்கவும்
http://picasaweb.google.co.in/bbcsakthi/CRI20thMeet?feat=directlink