Friday, September 05, 2008

ராஜிவ் காந்தியும் ஒரு ஹாம்: சாருஹாசன் பேட்டி - பாகம் 3

ஹாமில் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?
ஏராளம் உண்டு. அதில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி யதை மறக்க முடியாது. ஒரு சமயம் இரவு 11 மணிக்கு HAM-ல் ஒரு பெண்ணின் குரல், தனது கணவர் ஹாம் என்றும், அவர் அந்த சமயம் ஊரில் இல்லை. இந்த சமயத்தில் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது என்று கூறினார். நான் உடனே அவர்களை அதே அலைவரிசையில் தொடர்ந்து இருக்கச் சொல்லிவிட்டு மற்றொரு டாக்டரை தொலைபேசியில் அழைத்து, அவரும் ஹாமாக இருந்ததால் ஹாம் அலைவரிசையில் வரச்சொல்லி, குழந்தையின் நிலையை விசாரித்து உடனே மருத்துவமனைக்குஅழைத்து வந்து, இரவோடு இரவாக அறுவைச் சிகிச்சைசெய்து குழந்தையைக் காப்பற்றினார். அவரின் பெயர் டாக்டர் கஜா. அவரது வீட்டில் அனைவருமே ஹாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியாது.

ஹாம் வானொலியின் சிறப்பு என்ன?
ஏராளமான சிறப்புகள் உள்ளன. உதாரணமாக ஒன்று. ஒருசமயம் ஒரு ஹாம் உபயோகிப்பாளரின் கார்திருடப் பட்டுவிட்டது. உடனே அவர் ஹாம் வானொலியில் தன் கார் திருடப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த சமயத்தில் ஹாம் வானொலியில் இருந்த ஒருவர், அந்த எண்கொண்ட கார் விமான நிலையம் தாண்டி சென்று கொண்டிருப்பதாகத் தகவல் கொடுத்தார். உடனே அந்தத் தகவல் போலிஸ்க்குத் தெரியப் படுத்தப்பட்டு, அந்தப்பகுதி போலிஸாரால் பிடிக்கப்பட்டது. இது போன்று இன்னும் ஏராளமான நன்மைகள் அந்தக் காலகட்டத்தில் ஹாம் வானொலியைப் பயன் படுத்துவதால்இருந்தன.

ராஜிவ் காந்தியும் ஒரு ஹாம் வானொலி பயன் பாட்டாளர் எனக் கேள்விப்பட்டோம்...?
ஆம், ராஜீவ் காந்தியும் ஒரு ஹாம் உபயோகிப்பாளர். பிரதமர் ஆவதற்கு முன்பு தினமும் ஹாம் அலைவரிசையில் வருவார். அந்த சமயங்களில் அவருடன் பேசிய மிகச் சிலரில் நானும் ஒருவன். இதுஅவருக்குத் தெரியாது. அதன்பின் அவர் ஹைதராபாத் வந்தபோது தேசிய அமெச்சூர் வானொலி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பேசினார். அந்த சமயத்தில் அவருடன் பேச முடியவில்லை என்பதில் இன்றும் வருத்தமே.

வெளிநாட்டு ஹாம்-களுடன் பேசிய அனுபவம்?
நான் பெரும்பாலும் இங்கிலாந்து ஹாம்களுடன் பேச விருப்பப்படுவேன். அதற்காக இரவு 12 மணிவரை விழித்துக்கொண்டு இருப்பேன். காரணம், இங்கிலாந்தில் அப்பொழுது மாலைநேரம். அந்த சமயத்தில்தான் ஏராளமான ஹாம்கள் அலைவரிசையில் வருவர். ஒரு சிலநாட்கள் அவர்களுடன் விடிய விடிய பேசிய அனுபவங்களும் உண்டு. (தொடரும்)

No comments: