Saturday, September 06, 2008

தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு; சாருஹாசன் பேட்டி - பாகம் 4

ஆந்திர அரசு தங்களுக்குக் கொடுத்த விருது பற்றி?
ஒரு சமயம் இரவு 12 மணிக்கு ஆந்திர கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஹாமில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் மட்டுமே அந்த அலைவரிசையில் இருந்தேன். ஆந்திராவில் புயலின் காரணமாக உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரில் இருந்து வரும் ஹெலிகாப்டருக்கு சென்னையில் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறினார்.நானும் உடனே அவர்களை அலைவரிசையிலேயே இருக்கச் சொல்லி, எங்களது வீட்டின் கீழ்த் தளத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இந்தியன் ஆயில் உதவி பொது மேலாளர் தங்கியிருந்தார். அவரை அழைத்து அலைவரிசையில் பேசச் சொல்லி, நானே ஆந்திர கலெக்டரின் சார்பில் கடிதம் எழுதி, ஹெலிகாப்டருக்கான எரி பொருளை வாங்கிக் கொடுத்தோம். இந்த சேவைக்காக எனக்கு ஆந்திர அரசு விருதினைக் கொடுத்தது. இதுவும் ஹாம் வானொலியில்மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது.

மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியபோது ஏதேனும் மறக்க முடியாத அனுபவம்?
1960களில் பெரும்பாலான ஹாம் உபயோகிப்பாளர்கள் மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியே வெளிநாட்டில் உள்ள ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வந்தனர். ஒருசமயம் நான் கீயில் ஒலிபரப்பி வரும்போது ஸ்காட் என்ற பெயரில் ஒருவர் மறுமுனையில் இருந்து எனக்கு பதில் அனுப்பினார். உடனே அவரிடம், நீங்கள் விண்வெளிவீரர் ஸ்காட்தானே?Óஎன்று கேட்டேன். உடனே, அவர் Òநீங்கள்தான் முதல் தடவையாக என்னைக் கண்டு பிடித்துள்ளீர்கள். நான் எத்தனையோ முறை இந்த மோர்ஸ் ஒலிபரப்பில் வந்துள்ளேன். ஆனால் முதன்முறையாக நீங்கள்கண்டு பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிÓ என்றார். அந்த கால கட்டங்களில் ஸ்காட் மிகப் பிரபலம்.

ஹாம் வானொலியின் வருங்காலம் எப்படி இருக்கும்?
பலர் நினைக்கிறார்கள், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் ஹாம் வானொலியும் மறைந்துவிடும் என்று. ஆனால் அது மறைந்து விடாது. காரணம் புதிய தொழில்நுட்பங்களோடு இணைந்துசெல்லவல்லது இந்த ஹாம் ரேடியோ. உதாரணமாக இணையத்தோடு இணைந்து இன்று ஹாம் வானொலியைக் கேட்கலாம், என்ற அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

தொலைதூர நேயர்களோடு பேசிய அனுபவம் ஏதேனும் உண்டா?
நிறைய உண்டு. சுவாரஸ்யமான சம்பவம் கூட ஒன்று உண்டு. நான் எனது ஹாம் ரேடியோவில் எப்.எம் அலைவரிசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, சீனாவில் இருந்து ஒருவர் அதே அலைவரிசை யில் வந்தார். எனக்கு ஆச்சரியம் என்னவெனில் எப்.எம் அலைவரிசை 80 கிலோமீட்டருக்கு மேல் போகாது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்? அதன்பிறகு எனது நண்பர் மூலம் இதற்குத்தீர்வு கிடைத்தது. அயனி மண்டலத்தில் இரண்டு லேயர் நெருங்கும்போது அதனுள் இந்த எப்.எம் அலைவரிசை புகுந்து, எங்கு ஓட்டை உள்ளதோ, அங்கு அது இறங்கிவிடும். அது போன்றே இன்று ஏராளமானோர் ஒரு சில சமயங்களில் தொலைதூரப் பண்பலையைக் கேட்க முடிகிறது.
சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல், வண்ணை கே. ராஜா (முற்றும்)

No comments: