Wednesday, July 15, 2009

புவிகாந்தப் புயல்

சூரியனில் ஏற்படும் பளிச்சிடும் வெடித்துச் சிதறலால் சூரியப் புயல் உண்டாகிறது. பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் அது பூமியை நோக்கி வந்து நம் பூமியின் காந்த மண்டலத்தினுள் நுழைந்து காந்த மண்டலத்தைக் கலக்கி புவிகாந்தப்புயலை ஏற்படுத்துகிறது. இந்தப் புவிகாந்தப் புயலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) முதலில் குறுகியகால நேர்மறை பகுதி:
காந்த மண்டலத்தின் சமதள காந்தக் கோடுகளின் பயனாய் (துருவப் பிரதேசங்களில்) - ""அரோரா போரியாலிஸ்'' என்ற ஒளிமிக்க வானத்தை ஏற்படுத்துகிறது. இது ஏறத்தாழ நம் விளையாட்டு போட்டிகளில் காணும் வண்ணமிகு வான வேடிக்கை போன்று தென்படும்.

2) எதிர்மறை பகுதி காந்த மண்டலத்தைத் தீவிரமாக்கி பல நாட்களுக்கு நிலை நிறுத்தி இருக்கச் செய்கிறது. அயன மண்டலத்தில் எலக்ட்ரான் செறிவூட்டுவதை கணக்கெடுப்பதன் மூலம், அயன மண்டலப் புயலுக்கும் புவிகாந்த மண்டலப்புயலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அது ஏற்படும் நேரத்தை வைத்து அறியலாம்.

அயனமண்டலப் புயல் விண்ணில் தொலைதூர வானொலி தொடர்புக்கு நாம் பயன்படுத்தும் அதிக உயர அலை எண் அலைகளைப் பெரிதும் பாதிக்கிறது. மேலும் நாம் பயன்படுத்தும் உயர்ந்தபட்ச அலை எண்களை அயன மண்டலப் புயல் பாதிக்கிறது. அயன மண்டலப் புயல் புவியின் காந்தமண்டலப் புயலின் விளைவாக ஏற்படுகிறது. புவியின் காந்த மண்டலம் சூரிய வெடிப்புகளால் ஏற்படும் சூரியப் புயலின் விளைவாகக் கலக்கமடைந்து புயலாக மாறுகிறது. எனவே இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. அயன மண்டலப்புயலின் மிக முக்கியமான விளைவு F அடுக்கில் எலக்கட்ரான் செறிவு வெகுவாகக் குறைந்து விடுவது ஆகும். எனவே நம்மால் உயர் அலை எண்களில் அதிகமாக வானொலி ஒலிபரப்பு செய்ய இயலாமல் போகிறது.

பகல் நேரங்களில் நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகள் காலை சுமார் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 11, 13, 16, 19 மீட்டர்களில் ஒலிபரப்பு செய்கின்றன. இதேபோல் நம் நாட்டுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் காலை சுமார் 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை உயர் அலை எண்களைப் பயன்படுத்துகின்றன. அயன மண்டலப்புயல் தாக்கும்போது, பகல்நேர ஒலிபரப்புகள் 11 மீட்டர் முதல் 19மீ வரை பாதிக்கப்படுகின்றன. எனவே வானொலி நிலையங்களைச் சரிவரத் தெளிவாகக் கேட்க முடியாது. திடீரென நன்கு தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்து வானொலி, ஒலித்தரம் குறைந்து மறையத் தொடங்கும்.
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்பிரமணி

No comments: