Sunday, February 19, 2012

ஒலி அலைகலைத் தேடி


வாய்ப்பு ஒரு முறைதான் கிடைக்கும். அந்த வாய்ப்பினை சரியான
வகையினில் பயன்படுத்திக் கொண்டால், அந்த அனுபவமானது நமது
நினைவுகளோடு தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவின் மெட்ரோபொலிட்டன் நகரங்களாக நான்கு நகரங்களைக் கூறுகிறோம். ஆனால் எனது அதிர்ஷ்டமோ முப்பது வயதிற்கு பிறகு தான் இந்தியத் தலைநகர் உட்பட நான்கு மெட்ரோபொலிட்டன் நகரங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பும் நிறைய நண்பர்களுக்கு கிடைப்பதில்லை.

இன்னும் நமது தமிழகத்தின் தலைநகரான சென்னையைக் கூட நேரில் சென்று பார்க்க இயலாதவர்கள் பலர் உள்ளனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொருவருக்கும் சூழ்நிலை பல்வேறு வகைகளில் விளையாட்டு காட்டுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு விதத்தில் அந்த இடங்களுக்கு செல்லாமலேயே, அங்கு சென்று வந்த அனுபவத்தினை ஏற்படுத்தும். அந்த நோக்கத்திலேயே இந்த மாத ஒலி
அலைகளைத் தேடி உங்களை நாடிவருகிறது.

வானில் செல்லும் விமானங்களைப் பார்க்கும் பொழுது, பொதுவாக நம் எல்லோறுக்கும் என்னத் தோன்றுமோ, அதுவே தான் எனக்கும் தோன்றியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று, இன்று விமானத்தில் செல்வது ஒன்றும் குதிரைக் கொம்பான காரியம் இல்லை. நமது சொந்த பணத்திலேயே விமான டிக்கெட் எடுத்து இன்று விமானத்தில் செல்வது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் எனது முதல் விமானப் பயணம் சென்னையில இருந்து புது தில்லிக்கு செல்வதாக அமைந்தது.

சென்னை விமான நிலையத்திற்கு பலமுறை நண்பர்களையும் உறவினர்களையும் வழியனுப்பவும், வரவேற்கவும் சென்று வந்துள்ளேன். ஒரு கட்டத்தில், என்று நான் விமானத்தில் பயணம் செய்கிறேனோ, அப்பொழுது தான் விமான நிலையத்தின் வாசலை மிதிப்பேன், அதுவரை, அந்த வழியாக போனால் கூடப் பார்க்கக்கூடாது என்று மனதளவில்
சபதம் ஏற்றதுண்டு. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேறுவிஷயம்.

ஆனால் இந்த முறை நான் பயணம் செய்வதற்காக விமான நிலையத்திற்கு உள்ளே நுழைகிறேன்; என்றபோது சற்றே மகிழ்வாக இருந்தேன் என்பதை மறைக்கக்கூடாது. பொதுவாக விமானப் பயணத்திற்கான திட்டமிடல் மிகப்பெரிதாக இருந்த காலமெல்லாம் சென்றுவிட்டது. உங்களிடம் இணையத்தொடர்புடன் கூடிய கைப்பேசி இருந்தாலே விமான டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையாகி விட்டது.

எனது விமான டிக்கெட்டும் அப்படியே எடுக்கப்பட்டது தான். அதாவது நாளை மதியம் புறப்படும் விமானத்திற்கு இன்று மதியம் டிக்கெட்டை எடுக்கிறேன். அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தை எந்த நிறுவனம் கொடுக்கிறதோ அந்த விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குகிறது இணையம். இன்னும் சொல்லப்போனால், நமக்கு விமானத்தினில் எந்த சீட் வேண்டும், விமானத்தினில் எந்த வகையான உணவு வேண்டும் என்பதனைக்கூட முன் கூட்டியே பதிவுசெய்துகொள்ளும் வசதிகள் வந்துவிட்டன.

நான் புது தில்லி செல்ல தேர்வு செய்த விமான நிறுவனத்தின் பெயர் ஸ்பைஸ் ஜெட். “மிளகாய் வேகம்” எனத் தூயத் தமிழில் சொல்லலாமா? இவர்களைத் தேர்வு செய்யக் காரணம் மற்ற நிறுவனங்களை விட ஸ்பைஸ் ஜெட் குறைந்த கட்டணத்தினில் டிக்கெட்டினை வழங்கியது. பயணத்தின் முதல் நாளில் புக் செய்த டிக்கெட் என்பதனால் ரூ. 6050 என டிக்கெட் வழங்கப்பட்டது. இதனையே மூன்று மாதத்திற்கு முன் முன்பதிவு செய்திருந்தால் ரூ.3000-க்கும் குறைவாகவே டிக்கெட்டினை எடுத்திருக்கலாம்.

இங்கு இன்னும் ஒன்றையும் கூறியாக வேண்டும். நான் பயணம் செய்யத்
தேர்வு செய்த விமானம் சன் டி.வி குழுமத்திற்கு சொந்தமானது ஆகும்.
எனது பயணத்திட்டமானது ஒரு நாளுக்கு முன்னதாகத் தான்
முடிவானது. காரணம் எங்களது பல்கலைக்கழகம் இந்தியா முழுவதும்
இளங்களை மற்றும் முதுகலைத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அங்கே தேர்வு நடக்கும் இடங்களைப் பார்ப்பதற்காக எங்களைப் போன்ற துணை பேராசிரியர்களை “பறக்கும் படை” அதிகாரிகளாக நியமித்து இருந்தது.

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமலேயே உள்நாட்டு விமானங்களில் பயணிக்கலாம். இருந்தாலும் அடையாளத்திற்காக கடவுச்சீட்டினை எடுத்துக்கொண்டு 11.30 விமானத்திற்கு 10.30-க்கு சென்னை காமராஜர் உள்நாட்டு விமான முனையத்திற்கு சென்றேன். கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் வழக்கமான பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டு
இருந்தன. உள்ளே செல்லும் முன் எனது விமான டிக்கெட் மற்றும் அடையாள அட்டை சோதிக்கப்பட்டது.

தற்பொழுது விமான டிக்கெட் என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போன்ற புத்தகமாக இல்லை. சாதாரண ஏ4 தாளில் பிரின்ட் எடுக்கப்பட்டது. நமது ரயில் பயணத்திற்கு இணையத்தில் பதிவு செய்தால் எப்படி டிக்கெட்டை பிரின்ட் எடுக்கிறோமோ, அதே வடிவில் தான் இந்த டிக்கெட்டும் உள்ளது.
விமான நிலையத்தில் நாளிதழ்களும், பத்திரிகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது.

வேண்டியவற்கள் எடுத்து படித்துக் கொள்ளலாம். எனது சோல்டர் பேக் தவிர மற்றவற்றை குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் கவுண்டரில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை நேரடியாக நாம் செல்லும் விமானத்திற்கு சென்றுவிடும். நான் ஏறவேண்டிய விமானத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்ததால், விமான நிலையத்தினுல் ஒரு நடை போட்டேன்.

அங்கு விற்கும் பொருட்கள் எதனையும் நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இல்லை. வெருமனே நோட்டம் விட்டேன்.
விமானம் புறப்பட வேண்டிய நேரமான 11.30 ஆகியும், எந்த அறிவிப்பும் இல்லை. எனவே மனதளவில் சிறிது பயம் தொற்றிக்கொண்டது. விமான நிலையத்தினில் வைக்கப்பட்ட தொலைக்காட்ச்சியில் பதிவு செய்யப்பட்ட என்.டி.டி.வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.

எனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு ஏதேனும் அறிவிப்பு கொடுக்கப்படுகிறதா என கவனித்தேன். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை.
அறிவிப்பு ஏதும் இல்லாததால் நேரடியாக ஸ்பைஸ் ஜெட் உதவியாளர் நின்ற இடத்திற்கு சென்று காரணத்தினை விசாரித்தேன். குழைவான ஆங்கில வார்த்தைகள் அவரது குரலில் இருந்து வழுக்கி விழுந்தன. இன்னும் பத்து நிமிடத்தில் விமானம் வந்துவிடும் எனக் கூறியப்பின்னரே மனநிம்மதி அடைந்தேன்.

விமானம் வரும் வரை சற்றே பின்னோக்கி செல்வோம்….ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவிற்கு சென்றதை இதே ஒலி அலைகளைத் தேடியில் எழுதியுள்ளேன். அதுவே எனது மெட்ரே நகர பயணங்களில் சென்னையை அடுத்த பெரிய நகரம். புது தில்லி மற்றும்
மும்பை நகரங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

பல்கலைக்கழக பணியில் அமர்ந்த பின் ஒரு வருடத்தில் மும்பை, புனே, அஹமதாபாத், காந்தி நகர், விஜயவாடா, புது தில்லி, சண்டிகர், டேராடூன் மற்றும் ஹரித்துவார் போன்ற நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இது பி.பி.சி-யில் இருந்த போது கிடைக்கவில்லை. எனவே தான் கூறினேன், வாய்ப்பு கிடைக்கும் போது சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பயன்படுத்திக் கொண்டேன்.

விமான நிலையத்தில் உள்ள ஒலி பெருக்கி ஸ்பைஸ் ஜெட் எனக் கூறக் கேட்டு கனவு உலகில் இருந்து மீண்டு வந்தேன். புது தில்லி செல்ல உள்ள ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்து விட்டதாகவும், அதில் செல்ல உள்ளவர்கள் செல்லும் வழியையும் அறிவித்துக் கொண்டு இருந்தனர். அவர் குறிப்பிட்ட அந்த வழியில் சென்ற போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வாயிலில் நின்ற காவலாளி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தினை அவர் கூறியபோது தான் அறிந்தேன் என்னுடையத் தவறினை.
(தொடரும்…)

No comments: