Saturday, February 18, 2012

நேயரின் பார்வையில்


பிற்பகல் 2 மணியிருக்கும், தொலைபேசி மணி ஒலித்தது. எதிர் முனையில்
பேசியவரின் குரல் பரிச்சியமானதாக இருந்தது. ஆனால் யார் என ஊகிக்க
முடியவில்லை. அவர் கூறியதை வைத்து பிற்பாடு அவர் யார் என்பதை அறிந்து கொண்டேன். “டி.எக்ஸ் போட்டி 2011-ல் உங்களுக்கு ரேடியோ ப்ஃரீ ஆசியா வழங்கும் வானொலிப் பெட்டி பரிசாக கிடைத்துள்ளது.

அந்தப் பரிசினைத் தபாலில் அனுப்புவதால் உடைய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே நாளை எடப்பாடி திரு. கே.சி. சிவராஜ் அவர்களின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள வரவுள்ளேன். தாங்கள் எடப்பாடி வர முடியுமா?” என்று கேட்ட அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, இந்த இதழின் ஆசிரியர் தான்.

நான் கைத்தறி தொழில் செய்து வருகிறேன். தொழில் சுமைக் காரணமாக எடப்பாடி செல்ல இயலாத நிலை. இருப்பினும் ஜெய்சக்திவேலை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை நான் இழக்க விரும்பவில்லை. எனவே அந்த
வாய்ப்பினைப் பயன்படுத்தி நானும் எனது மகனுமான சுதர்ஸனும் பவானி
வழியாக எடப்பாடி சென்றோம்.

ஒரு காப்பி ஷாப்பில் வைத்து எங்களது முதல் சந்திப்பு நடந்தது. வானொலி நேயர்களை முதல் முறையாக சந்திப்பதே ஒரு
மகிழ்ச்சியான தருனம் தான். அதுவும் ஒரு போட்டியில் வென்று சந்திப்பது என்பது இன்னும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு வானொலி நிலையம் வழங்கிய வானொலிப் பெட்டியை அதுவும் போட்டியில் கலந்து கொண்டு வாங்குவது இதுவே முதல் முறை. ரேடியோ ப்ஃரீ ஆசியா முத்திரையுடன் கூடிய அந்த வானொலிப் பெட்டி உண்மையிலே எங்களின் மனதினைக் கவர்ந்தது. அதன் பின் நெரிஞ்சிப்பேட்டையில் ஒரு முக்கியமான வானொலி சேகரிப்பாளரை சந்திக்கப்போவதாகவும் வரநேரமிருந்தால் வரலாம் எனவும் கூறியது தான் தாமதன்,
நாங்களும் தயாரானோம்.

எனவே முதலில் எடப்பாடியில் இருந்து முதலில் பூலாம்பட்டிக்குச் சென்று அங்கு இருந்து மறுகரையில் உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கு படகில் சென்றோம். உண்மையிலேயே அது மறக்க முடியாத படகுப் பயணமாக இருந்தது. படகில் பயணம் செய்தல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வானொலி நேயரைச் சந்திக்க இன்னுமொரு வானொலி நேயரோடு என்றால் சொல்லவா வேண்டும். சுதர்ஸன் பல்வேறு
கோணங்களில் புகைப்படம் எடுத்தபடி வந்தான்.

நிச்சயமாக அந்த நிகழ்வுகளை தக்க தருனத்தில் புகைப்படம் எடுத்த சுதர்ஸனை பாராட்டியே ஆகவேண்டும். மறுகரையில் எங்களுக்காக திரு. ஜெகதீஸ்வரன் காத்திருந்தார். அவரது வீடு செல்லும் வரை அவரும் ஒரு வழக்கமான வானொலி நேயராக மட்டுமே இருப்பார் என்பது பொய்த்துப்போனது. காரணம் அவரரின் வால்வு ரேடியோ கலெக்சன் பிரம்மிக்க வைத்தது. சர்தேச வானொலி நேயராக மட்டுமல்லாமல் பல்வேறு பட்ட வானொலிப் பெட்டிகளை வாங்கி சேகரித்தும் வருகிறார்கள். அவரது வீடு மிக அழகான சூழலில் தோட்டத்திற்கு மையத்தில் அமைந்து இருந்தது மனதிற்கு ஒரு விதமான சந்தோஷத்தினை கொடுத்தது.

பொதுவாக இதுபோன்ற தோட்டத்தில் அமைந்துள்ள வீடுகளில் வளர்ப்பு பிரானிகளை வளர்த்து வருவர். ஆனால் இவரது வீட்டில் அப்படியொன்றும் இல்லையே என சுற்றும் முற்றும் பார்த்தோம். ஒரு மூலையில் ஈனச்சுவரத்தில் ஒரு நாய் உளைத்துக்கொண்டு இருந்தது. இதனை நாய் என்று சொன்னால் நிச்சயம் திரு.ஜெகதீஸ்வரன் கோபித்துக்கொள்வார்.
காரணம் அவரது வீட்டில் அதுவும் ஒரு குடும்ப உறுப்பினராகே இருந்து வந்தது. சமீபத்தில் அது ஏதோ தவறுதாலாக தின்று விட்டதால், உடல் நலிந்து காணப்பட்டது.

 இன்னும் ஒன்றையும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும். திரு.ஜெகதீஸ்வரன் வானொலி பெட்டிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களையும் திரட்டி வருகிறார். சில ஞாபகங்கள் மனதில் இருந்து அகல மறுக்கும்.

அதற்குக் காரணம் அந்த நினைவுகள் நம் மனதின் ஆழத்தினில் இயற்கையாகவே பதிந்து விடும். அன்றை தின மதிய உணவானது அவரது இயற்கை சூழ்ந்த வீட்டில் அவர்களது துணைவியாரால் இன்முகத்துடன் பரிமாரப்பட்டது.

அந்த இனிய சந்திப்பு இன்றும் பல்வேறு எண்ண ஓட்டங்களை மனதில் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை. வானொலி என்ற ஒன்று ஒரு பொழுது போக்கு ஊடகம் மட்டுமல்ல, அது பல்வேறு நண்பர்களையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த நண்பர்கள் மூலம் நமக்கு கிடைக்கும் தகவல்கள் எங்கும் காணக்கிடைக்காத ஒன்று.

எங்கள் சந்திப்பு மாலையில் நிறைவடைந்து பிரியா விடைபெற்றோம். சந்திப்பில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் அவை அனைத்தினையும் ஒருசேர இங்கு பதிவுசெய்ய முடியாது. விடைபெற்று வாசலுக்கு வெளியே வரும் போது, அந்த நாயின் இருமல் அதிகமாகி இருந்தது மனதினை ஏதோ செய்தது. காரணம் அது அவர் வீட்டில் நாயாக  வளர்க்கப்படவில்லை. - என்.டி. சண்முகம்
(கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள 8883461856. கட்டுரை ஆக்கத்தில் உதவி ச. சுதர்ஷன்)

No comments: