Monday, April 09, 2012

சாதனைக்காக தமிழ் கற்கும் சீன மாணவி!

புதுச்சேரி, மார்ச் 23:   தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த மாணவி
ஜெயா (எ) லீலூஸ் (படம்) தமிழ் கற்று வருகிறார்.
சீனாவில் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர் லீலூஸ். இவர் சீனாவில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டி ஆப் சீனா என்ற பல்கலைக்கழகத்தில் ஆர்வமுடன் தமிழ் பயின்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு சீனாவில் உள்ள தமிழ்
வானொலியில் வேலை கிடைத்தது. சீன மொழியில் இருக்கும் செய்திகளை இவர் தமிழில் மாற்றித் தர வேண்டும் என்பதே இவரது பணி. இப் பணியை இவர் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். லீலூஸ் என்ற சீனப் பெயரையும் இவர் தமிழர்களின் பெயருக்கு தகுந்தாற்போல் ஜெயா என்று மாற்றிக் கொண்டார்.
எழுத்து வடிவில் இருக்கும் தூய தமிழைப் போல் இவர் பேசுகிறார். இந் நிலையில்  தமிழர்கள் பேச்சு வழக்கில் மொழியை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிவதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி வந்த இவர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 5 மாதமாக பேச்சு வழக்கில் உள்ள தமிழை பயின்று வருகிறார். இவருக்கு பேராசிரியர்கள் ரவிசங்கர், பரசுராம் ஆகியோர் தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர்.
இது குறித்து ஜெயா (எ) லீலூஸிடம் கேட்டபோது, நான் தமிழ் வானொலியில் பணி செய்வதால் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் பயின்றேன். அங்கு பேச்சு வடிவில் மக்கள் எவ்வாறு தமிழை பேசுகிறார்கள் என்பதை பயில்வதற்கான வசதி இல்லை. பேச்சு வடிவிலான தமிழ் தெரிந்தால் எனது தொழிலில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதினேன். இதனால் இங்கு தமிழ் பயின்று வருகிறேன் என்றார்.
இவரது கணவர் வாங்க் ஹுயும் உறுதுணையாக இவருடன் புதுச்சேரி வந்து தங்கியுள்ளார். தமிழ் கற்று சாதிக்க நினைக்கும் சீன மாணவியின் செயல்பாடு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. (தினமணி 23/04)

No comments: