Monday, July 14, 2014

செய்தி ஊடகத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு? மத்திய அரசு பரிசீலனை: ஜாவடேகர்

செய்தி ஊடகத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது குறித்து அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
செய்தி ஊடகத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்தையும் பெற விரும்புகிறோம்.
தற்போது, செய்தி ஊடகங்களில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. செய்திகள் அல்லாத வர்த்தகப் பதிப்புகள், பொதுப் பொழுதுபோக்கு ஊடகங்கள் ஆகியவற்றில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உண்டு.
கையூட்டுச் செய்திகள் (பெய்டு நியூஸ்) தொடர்பான விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் கடைசிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. நானும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளேன்.
மத்திய அமைச்சர்கள் தங்கள் முதல் 100 நாள்களுக்கான முன்னுரிமைகளைப் பட்டியலிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். அதன்படி, அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
தனியார் எஃப்.எம். வானொலியில் செய்திகள்?:
தனியாருக்குச் சொந்தமான பண்பலை வானொலிகளில் (எஃப்.எம்.) தற்போது செய்திகளை ஒலிபரப்ப அனுமதி இல்லை. எனவே, அவற்றில் செய்திகளை ஒலிபரப்புவதற்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலம் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் விதிமுறைகளை வெளியிடுவோம் என்றார் ஜாவடேகர்.
நன்றி: http://www.dinamani.com/ First Published : 02 June 2014 

No comments: