Monday, July 07, 2014

ஜூன் 2, 1896- வானொலிக்கான காப்புரிமையை மார்க்கோனி பெற்ற நாள்

கூப்பிடுகிற தூரம் என மக்கள் சொல்வார்கள். “கூப்பிடுகிற தூரத்தை” அதிகமாக்க உழைத்த பலரில் மார்க்கோனி ( 1874 -1937) முக்கியமானவர்.
மார்க்கோனி இத்தாலி நாட்டின் ஒரு பணக்கார வீட்டு பிள்ளை. அவர் பள்ளிக்கு போகவில்லை.வீட்டிலேயே படித்தவர். 20 வயதில் தனது வீட்டில் வேலைக்காரருடன் சேர்ந்து ஒரு ஆய்வுக்கூடத்தை அவர் அமைத்தார். அதில் கம்பியில்லா தந்திக்கான ஆரம்ப கட்ட கருவிகளை உருவாக்கினார்.தந்திக் குறியீடுகளை அலையாக்கி பரப்பும் கருவியும் அந்த அலையை வாங்கி திரும்பவும் தந்திக் குறியீடுகளாக மாற்றி பதிவு செய்யும் கருவியும் அதில் இருந்தது.
தனது கண்டுபிடிப்பை பற்றி இத்தாலியின் தபால்-தந்தி அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் “பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பவேண்டியவன்” என அமைச்சர் எழுதினார். பிறகு மார்க்கோனி இங்கிலாந்திற்கு போனார்.
லண்டனின் தபால்-தந்தி துறை இன்ஜீனியர் வில்லியம் பிரீஸ் மார்க்கோனிக்கு ஆதரவு அளித்தார். மார்க்கோனி யின் கண்டுபிடிப்புக்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் காப்புரிமை கிடைத்தநாள் இன்று. பல தொடர் ஆராய்ச்சி களுக்குப் பிறகு 1897ல் டிரான்ஸ்மீட்டரை அவர் உருவாக்கி னார். 1897-ல் மே 13 ந் தேதி ‘நீங்கள் தயாரா?' என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்தினார். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் அவரது கருவியால் காப்பாற்றப்பட்டனர். அமெரிக்காவில் படகுப்போட்டி முடிவுகள் உடனுக்குடன் கிடைத்தன. 1901-ல் 2100 மைல்களை கடந்து செய்தியை அனுப்பினார்.
நிறைவாக மார்க்கோனியின் அங்கீகரிக்கப்பட்டார். இத்தாலி அவரை அழைத்து மரியாதை செய்தது. 1909-ல் கம்பியில்லாத் தந்திமுறையில் ஏற்கனவே பல ஆய்வுகள் செய்திருந்த 'கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்' என்ற ஜெர்மானி யருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று கம்பியில்லாத தந்தி காலாவதி யாகி விட்டது. ஆனால் அதன் வாரிசுகளான வானொலி, தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றால் கம்பியில்லா அலைபரப்பும் முறை விண்ணை தாண்டிவிட்டது.
மனிதனின் குரல் கூப்பிடும் தூரத்தை தாண்டி இன்று பிரபஞ்சம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி: http://tamil.thehindu.com/ Published: June 2, 2014 

No comments: