Showing posts with label ஒலிபரப்பு. Show all posts
Showing posts with label ஒலிபரப்பு. Show all posts

Monday, December 09, 2024

பெங்களூரு சூப்பர் பவர் சிற்றலை ஒலிபரப்பு நிலையம்: உலகை இணைக்கும் ஒலி


பெங்களூர் அருகில் உள்ள தொட்டபலபூர், அரலு மல்லிகே கிராமம் அருகில் அமைந்துள்ள அகில இந்திய வானொலியின் சூப்பர் பவர் சிற்றலை ஒலிபரப்பு நிலையம், இந்தியாவின் வெளிநாட்டு ஒலிபரப்பு சேவைகளை வலுப்படுத்தும் முக்கியமான ஒரு தளமாகும். 

இந்த நிலையம், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை இந்திய கலாச்சாரம் மற்றும் செய்திகள் ஆகியவற்றோடு இணைக்கும் முக்கிய பணியை செய்கிறது.

தொழில்நுட்ப சிறப்புகள்

இது உயர் திறன் கொண்ட ஒலிபரப்பு நிலையமாகும். இந்த நிலையத்தில் 500 கிலோவாட் திறன் கொண்ட ஆறு ஒலிபரப்பிகள் உள்ளன. இவை உலகின் மிக சக்திவாய்ந்த சிற்றலை ஒலிபரப்பு கருவிகளில் ஒன்றாகும்.

உலகின் பல திசைகளுக்கும் இங்கே இருந்து ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து 36 மல்டி-பேண்ட் அண்டெனாக்கள் மூலம் எட்டு வெவ்வேறு திசைகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நேயர்களை எளிதாக சென்றடைய முடியும்.

இந்த நிலையத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது. இதில் பல்ஸ் ஸ்டெப் மாடுலேஷன் (PSM) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒலிபரப்பின் தரத்தை மேம்படுத்துகிறது.

ஒலிபரப்பு செய்யப்படும் மொழிகள் மற்றும் பகுதிகள்

இந்த நிலையத்தில் இருந்து ஒரு காலத்தில் 23 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இவற்றில் 8 இந்திய மொழிகளும் அடங்கும் ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. ஒலிபரப்பு செய்யப்படும் முக்கிய பகுதிகள்:

  • ஆசியா: நேபாளம், திபெத், சீனா, மங்கோலியா, பூட்டான், ஜப்பான், கொரியா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, போர்னியோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து.
  • ஆப்பிரிக்கா: எத்தியோப்பியா, சூடான், தென்னாப்பிரிக்கா, ஜாம்பியா, சிம்பாப்வே, ரொடிசியா, மொரிஷியஸ், அங்கோலா, மொசாம்பிக், கென்யா, தான்சானியா, உகாண்டா, சோமாலியா, சவுதி அரேபியா, ஈரான், இராக், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன், நைஜீரியா, கானா, லிபியா, அல்ஜீரியா.
  • ஐரோப்பா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய இராச்சியம், மேற்கு ஐரோப்பா. சூப்பர் பவர் சிற்றலை ஒலிபரப்பு நிலையம், இந்தியாவின் ஒலிபரப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த நிலையம், இந்தியாவின் குரலை உலகெங்கும் கொண்டு செல்லும் முக்கிய பணியை செய்து வந்தது. இனியும் செய்ய வேண்டும்.
இந்த நிலையம் 9 மார்ச் 1990ல் நிறுவப்பட்டது. இந்த நிலையத்தின் மொத்த பரப்பளவு 630 ஏக்கர். இந்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 2014 கணக்கின் படி 101. இந்த நிலையம் 75 கோடி செலவில் கட்டப்பட்டது.

தற்பொழுது பெங்களூரு ஒலிபரப்பு தளம் ஒலிபரப்பும் நேரம், மொழிகள் மற்றும் அலைவரிசை விபரங்கள்

Saturday, December 07, 2024

ஜெர்மன் வானொலி (DW Radio) தமிழ் ஒலிபரப்புத் தொடங்கிய கதை

டாக்டர்.ஓலிவர் ஜோலனருடன் தங்க.ஜெய்சக்திவேல்

ஒரு சாதாரண நாளில், சென்னையின் திருவல்லிக்கேணி, நல்லதம்பி தெருவில் அமைந்துள்ள ஷெரீப் மேன்சனின் முன், ஒரு சிறிய சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு, உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. 😀

இந்த சந்திப்பில், ஜெர்மன் வானொலியின் நேயர்நல்லுறவு அதிகாரி ஓலிவர் ஜோலனர் (Dr.Oliver Zollner), ஒரு முக்கியமான முடிவை எடுக்க இருந்தார். உலகின் பல நாடுகளில் பிபிசி, சீன வானொலி, சிங்கப்பூர் வானொலி உள்ளிட்ட பல வானொலிகள் தமிழில் ஒலிபரப்பி வந்த நிலையில், ஜெர்மன் வானொலியும் தமிழில் ஒலிபரப்ப வேண்டும் என்ற எண்ணம் என்னை உட்பட பலரின் மனதில் எழுந்தது. எனவே Technical Monitor என்ற வகையில் நான் ஒரு Proposalஐ அவர்களுக்கு விரிவாக  அனுப்பியிருந்தேன். இந்த எண்ணத்தை செயல்படுத்த, ஜோலனரை ஜெர்மன் வானொலி பணித்தது. தமிழகத்திற்கு நேரில் வந்து கள ஆய்வும் மேற்கொண்டார்.

தமிழகத்தில் தனது பயணத்தின் போது, அவர் பல தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நேயர்களுடன் கலந்துரையாட உதவினேன். அவர்களின் கருத்துகளை கேட்ட பிறகு, ஜெர்மன் வானொலியில் தமிழ் பிரிவைத் தொடங்க வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்ய அவர் முடிவுக்கு வந்தார்.

தமிழகத்திற்கு வந்து சென்ற பிறகு, ஜெர்மனிக்குத் திரும்பிய ஜோலனர், ஒரு முக்கியமான கடிதத்தை எழுதினார். (கடிதத்தின் ஒரு பகுதி இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது) அந்தக் கடிதத்தில், தமிழில் ஒலிபரப்பைத் தொடங்குவதன் மூலம், ஜெர்மன் மக்களுக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை அறிமுகப்படுத்த முடியும் என்றும், தமிழ் மக்களுக்கு ஜெர்மனி மற்றும் ஜெர்மன் மக்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜோலனரின் இந்த முயற்சியின் விளைவாக, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், ஜெர்மன் வானொலி தமிழில் ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஆனாலும் இன்று இந்த டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இது உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஜெர்மன் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்ப உதவியது.

இன்று, ஜெர்மன் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளது.

ஜெர்மன் வானொலி தமிழில் ஒலிபரப்பத் தொடங்கிய வரலாற்றில் நம் பங்களிப்பும் இருப்பது மிக்க மகிழ்ச்சியே. ஓலிவர் ஜோலனரின் முக்கிய பங்கும் இங்கு மெச்சத்தக்கது. அவர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால், அவர் தமிழில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்தும் சென்றார். அதனை இந்தக் கடித உறையின் மீது அச்சிட்டும் அனுப்பினார்.

தமிழகத்தில் நடைபெற்ற கள ஆய்வில் பலரும் வானொலி கேட்க ஆர்வம் கொண்டு இருந்தனர். ஜெர்மன் வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் முக்கியத்துவம் இன்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. என்ன, அது சிற்றலையில் இல்லாமல் டிஜிட்டலில் ஒலிபரப்புகிறது.

ஜெர்மன் வானொலியில் ஒலிபரப்பான அன்றைய நிகழ்ச்சிகள் இன்றும் மறக்கமுடியாதவை. அதிலும் இலங்கையிந் திருகோணமலையில்  இருந்து 1548 khzல் ஒலிபரப்பான மத்தியலை ஒலிபரப்பை மறக்கவும் முடியுமா?

ஜெர்மன் வானொலியின் தமிழ் ஒலிபரப்பை இன்று சமூக ஊடகங்கள் ஊடாக மட்டுமே கேட்க முடியும். ஜெர்மன் வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக இருக்கும்.



 

Sunday, December 01, 2024

தமிழகத்தில் வானொலி ஒலிபரப்பின் முன்னோடி: ராவ் பகதூர் சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி


தமிழ்நாட்டில் முதன் முதலாக வானொலி நிலையம் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் ஒரு முக்கியமான பெயர், ராவ் பகதூர் சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி. அவரது அயராத முயற்சியின் காரணமாகவே சென்னையில் முதல்  வானொலி நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.

கல்வித் திறனும் ஆர்வமும்

19ஆம் ஏப்ரல் 1883ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கிருஷ்ணசுவாமி செட்டி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் தொழில்நுட்பக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஹெர்ட்ஸ், ரிச்சி, பிரான்லி மற்றும் மார்கோனி ஆகியோரின் வானொலி சம்பந்தப்பட்ட பரிசோதனைகளில் ஆர்வம் கொண்டார். பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் பேட்டரி செல்கள் மற்றும் 'கோஹீர்' என்ற கருவியைப் பயன்படுத்தி வானொலி சிக்னல்களைப் பெறும் கருவிகளை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிட்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அங்கு வளர்ந்து வந்த வானொலி தொடர்புகளை நேரில் கண்டறிந்தார்.

தாய்நாட்டில் முயற்சிகள்

தாய்நாட்டிற்குத் திரும்பிய பிறகு, இங்கிலாந்தின் வானொலி நிலையங்களின் சிக்னல்களைப் பெறக்கூடிய சிறந்த வானொலி பெறும் கருவியை உருவாக்கினார். மேற்கத்திய நாடுகளில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலி ஆர்வலர்களால் ஈர்க்கப்பட்டார். இந்தியாவில் வானொலி ஒலிபரப்புக்கான கருவியை உருவாக்கும் கனவை அவர் கொண்டிருந்தார். ஆனால், அவ்வாறு உருவாக்கத் தேவையான உதிரிபாகங்கள் கிடைப்பதில் பெரும் சவால் இருந்தது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, தங்கக் கலைஞர்கள் மற்றும் கண்ணாடி ஊதும் கலைஞர்களின் உதவியுடன் Triode Valves தயாரிக்க முயற்சித்தார், ஆனால் அது பலனளிக்கவில்லை.

சென்னை வானொலி மன்றம்

1924ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், சென்னையில் வானொலி மன்றம் ஒன்றைத் தொடங்குவது குறித்து, சென்னைப் பத்திரிகைகளில் ராவ் பகதூர் சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி பரப்புரை செய்தார். மக்களிடையே ஆதரவைத் திரட்டுவதே இதன் நோக்கம். அவரது முயற்சியால், 1924ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள கவுன்சில் அறையில் ஒரு முதற்கட்டக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. செல்வாக்குமிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வானொலி எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்குப் புரியவைக்கும் நோக்கில், மார்கோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அந்நாளில் செயல் விளக்கக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சித் தலைவர் வி. திருமலை பிள்ளை இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். சமூக சேவகரும் செல்வாக்குமிக்க நபருமான திருமலை பிள்ளை இந்த நிறுவனத்தில் ஆர்வம் காட்டியதால், இந்த மன்றத்தின் மதிப்பு மேலும் உயர்ந்தது.

கிளர்ந்தெழுந்த ஆர்வம்

1924ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் மாநகராட்சி கட்டிடங்களின் கவுன்சில் அறையில் முதற்கட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை நகரின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வி. திருமலை பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வானொலி சேவையை விரைவில் தொடங்குவதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கும், ஆரம்பகால பணிகளைச் செய்வதற்கும் ஒரு செல்வாக்குமிக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் சென்னை மாகாண ஆளுநர் ஹெச்.ஈ. விஸ்கவுண்ட் கோஷன் தலைமை தாங்கினார். சி.பி. ராமசாமி ஐயர் தலைவராகவும், சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி கௌரவத் தலைவராகவும் இருந்தனர். மன்றத்தின் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ள ஒரு அமைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஈ.ஜே.எஸ். கிரீன்வூட், எஃப். நோபல், ஏ.ஜி.டி. வெப், பிராம்வெல், எம்.எஸ். சங்கரன், பி.வி. சாரி, ஹாஜி முகமது இப்ராகிம் சைய்யத், சி.டி. ஆழ்வார் செட்டி, ஈ.எச்.எம். போவர், வித்யாசாகர் பாண்டியா, கே.சி. சீனிவாச ஐயங்கார், பி. சம்பந்த முதலியார், ஏ.ஏ. HAYLES, J.J. Binstead, L.C. நிக்கல்சன், ஜி.டபிள்யூ. வால்போல், எஸ். ரங்கசாமி ஐயங்கார், டி.எச். கால்வே, ரெவ். ஹெச். யங் நெக்கர் மற்றும் ஆர்.ஏ. பர்ரிட்ஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். (சுவாரஷ்யமான தமிழக வானொலி வரலாறு தொடரும்)

Wednesday, October 01, 2014

அகில இந்திய வானொலி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கப்படும்: மத்திய அமைச்சர் பேட்டி

கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று கூறும்போது, “கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மய மாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 2015-ல் 3-ம் கட்டப் பணிகளும் 2016-ல் 4-வது கட்டப் பணிகளும் நிறைவு பெறும்.
இப்பணிகளை தாமதப்படும் நோக்கம் எனது துறைக்கு இல்லை. கிராமப்புற மக்களும் டிஜிட்டில் ஒளிபரப்பை பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஊடகம் மற்றும் கேளிக்கை துறையில் மிகப்பெரிய வளர்ச் சிக்கு வாய்ப்புள்ளது. இத்துறை யில் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. 2020-ல் இந்த முதலீடு இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்.
அகில இந்திய வானொலி ஒலிபரப்பு மற்றும் தூர்தர்ஷன் ஒளிபரப்பு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவற்றின் சிறந்த நிகழ்ச்சிகள் இணைக்கப்பட்டு, புதிய பெயரில் மொபைல் அப்ளிகேஷன்களிலும் தரப்படும்.
பண்பலை வானொலியில் செய்தி
பண்பலை வானொலி சேவையில் 3-வது கட்டமாக 294 நகரங்களில் 839 புதிய வானொலி நிலையங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வரும் டிசம்பருக்கு முன் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை தரப்படும். முதல்கட்டமாக இவர்கள் அகில இந்திய வானொலி செய்திகளை ஒலிபரப்பலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்” என்றார்.
இலவச செய்தி எஸ்எம்எஸ்
அகில இந்திய வானொலியின் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவையை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே ஆங்கிலத்தில் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தி, மராத்தி, சமஸ் கிருதம், டோக்ரி, நேபாளி ஆகிய 5 மொழிகளில் இச்சேவை தொடங் கப்பட்டுள்ளது.

Published: September 20, 2014 10:43 IST

Source: http://tamil.thehindu.com/