Monday, December 08, 2014

கனடிய தமிழ் வானொலி

கனடிய தமிழ் வானொலி முன்னெடுத்த மலையக மக்களுக்கான நிதி சேர் நிகழ்வு


மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர்.
   
அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தமது உறவுகள் பலரை இழந்தும் தமது இருப்பிடங்களை தொலைத்தும் நிற்கும் எம் மலையக உறவுகளுக்காக கனேடிய தமிழ் வானொலியூடாக பங்கு கொண்ட எம்மக்கள் குறுகிய நேரத்துக்குள் இருபத்தைந்து ஆயிரம் டொலர்களை முன்வந்து வழங்கினர்.
சில மணி நேரங்களே நடைபெற்ற இவ்வானொலி நிகழ்ச்சியூடாக தமது உறவுகளுக்காக குரல் கொடுத்த எம்மக்கள் மலையக உறவுகள் நீண்டகாலமாக எதிர் கொண்டு வரும் அநீதிகளையூம் அரச அடக்குமுறைகளையும் பேசியதோடு மலையக தமிழர் சமூகமாக அவர்களது வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் எமது தொடர்ச்சியான பங்களிப்பும் ஆதரவூம் இருக்க வேண்டும் எனவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர் . கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சமூகமாக எமது உரிமைகளுக்காகப் போராடிவரும் நாம் அதுவும் குறிப்பாக அதே 'சிறிலங்கா நாட்டின்" இன்னொரு சமூகமாக இருந்துவரும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளிற்காக குரல் கொடுப்பதன் மூலமே அவர்களது போராட்டத்தைப் பலப்படுத்தவும் அதனுடாக எமது போராட்டத்திற்கான ஆதரவை வலுப்படுத்தவும் முடியூம் என்னும் வகையிலான காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குமான களமாக இவ்வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வாறான வகையில் ஆரோக்கியமான உரையாடல்களையும் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் உருவாக்கும் ஒரு ஊடகமாக எம்மை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில் கனடியத் தமிழ் வானொலி எம் மக்களுடன் சேர்ந்து பெருமை கொள்கின்றது. இந் நிகழ்ச்சியில் இணைந்து செயற்பட்ட மண்வாசனை அமைப்பிற்கும் மற்றும் இதில் இணைந்து பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

செய்தி - கனடிய தமிழ் வானொலி

No comments: