Monday, February 16, 2015

உலக வானொலி தினம்

வாயாடி வானொலி!
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவ - மாணவிகள் ‘உலக வானொலி  தினத்தை’ முன்னிட்டு பிப்ரவரி  13 ஆம் தேதி அன்று ‘வாயாடி வானொலிக்கு’ என்ற  தலைப்பில் கவிதை கடிதங்கள் எழுதி வளாகம் எங்கும் ஒட்டினர்.

இது தவிர பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் தேநீர் கடையருகே, ‘வானொலி’ பெட்டியை வைத்து, அந்த கடையின் உரிமையாளர் ராஜாவை கொண்டே ரிப்பன் வெட்டி திறக்க வைத்து நாள் முழுக்க ஒலிக்கவிட்டனர். வானொலி பற்றிய ஞாபகங்களையும், கருத்துகளையும் தெரிவிக்க கையேட்டினையும் வைத்திருந்தனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலபேர் அவரவர் கருத்துகளை கையேட்டில் பதிவு செய்து சென்றனர். பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் பலவை மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பாகவும், வானொலிக்கு வாழ்த்துக்களாகவும் இருந்தன.
இதுமட்டுமல்லாமல், ‘வானொலி மன்றங்கள் அன்றும் இன்றும்’ என்றத் தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் துறைத் தலைவர் கோ. இரவீந்திரன், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளோடு, அகில இந்திய வானொலி மேனாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்.சி. ஞானபிரகாசம் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் தமிழ்ஒலி வானொலி மன்றம் எஸ். உமாகாந்தன், வானொலி நேயர் வட்டம் கு.மா.பா. கபிலன், மயிலை பட்டாபி, வானவில் வானொலி நண்பர்கள் குழு எம். செல்வகுமார், குரலோவியம் புதுக்காவியம் வானொலி மன்றம் மயிலை சிங்கார வேலு சென்னை டிஎக்ஸ் மன்றம் கே.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வானொலி நேயர்கள் எவ்வாறு குழுவாக இணைந்து செயல்பட்டனர், செயல்பட்டு வருகின்றனர். வானொலியில் ஒலிபரப்பாகக்கூடிய நிகழ்ச்சிகளின் நன்மை, வானொலியின் வரலாறுகள் பற்றி கருத்தரங்கில் பேசப்பட்டது.  ‘சர்வதேச வானொலி’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
பழைய வானொலிகள், வானொலி சார்ந்த இதழ்கள், நாளிதழ்கள், வானொலியின் நிகழ்ச்சிகளில் நேயர்கள் பரிசாக வாங்கிய பொருட்கள், அயல்நாடுகளில் வானொலியின் நிலைமை குறித்த தகவல்கள் சார்ந்த குறிப்புகள் மாணவ -மாணவிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

“இன்று தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த கொண்டே போனாலும், இதில் வானொலியின் பங்கு யாராலும் மறைக்கப்பட முடியாத, தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு நாள் மட்டும், பொதுவெளியில் வைத்த வானொலியை எல்லா நாளும், எல்லா இடங்களிலும் வைத்து பொது மக்கள் தகவல்களை பெற வேண்டுமென்பதே, இந்த ‘உலக வானொலி தினம்’ கொண்டாட்டத்தின் நோக்கமே” என்பது ஊடக மாணவ- மாணவிகளின் உற்சாக கருத்தாக இருந்தது.

-கு.முத்துராஜா
 (மாணவர் பத்திரிகையாளர்)
நன்றி http://news.vikatan.com/article.php?aid=38586#rss

No comments: