Wednesday, December 02, 2015

திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

திருநெல்வேலி வானொலி 1.12.1961 அன்று தொடங்கப்பட்டு 53 ஆம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு 1.12.2015 மாலை 3 மணிக்கு திருநெல்வேலி அகிலஇந்திய வானொலி வளாகத்தில் ஆண்டுவிழா நடைபெற்றது.


 
நிகழ்ச்சி அறிவிப்பாளர் உமாகனகராஜ், கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

 நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்துத் தலைமையுரையாற்றினார். 

அறிவிப்பாளர் திரு.கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் அறிமுகவுரையாற்றினார். 

அறிவிப்பாளர் சந்திரபுஷ்பம் வானொலிநிலையத்தை வாழ்த்திப் பாடல் பாடினார். எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று, அவர் சிறுகதைகளுக்கு நெல்லை வானொலி தந்த முக்கியத்துவத்தைச் சொல்லி மிக அழகாகப் பேசினார்.

 மூத்த ஊழியர் கே.ஆர்.கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். நிலையச் செயற்பொறியாளர் இவாஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி தன் தலைமையுரையில், “1961 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று தொடங்கப்பட்ட திருநெல்வேலி வானொலியின் விவசாயப் பண்ணை இல்லப் பிரிவில்தான் தென்கச்சி சுவாமிநாதன் பணியாற்றினார். மக்கள் மனதில் பெரிதும் இடம்பெற்ற இன்றுஒருதகவல் நிகழ்ச்சியை ஒரு நாள்கூட இடைவிடாது 13 ஆண்டுகள் ஆயிரக்கணக்கான புதியதகவல்களைச் சொல்லி ஊடகத்துறையில் அசைக்கமுடியாத சாதனைகள் செய்த தென்கச்சி சுவாமிநாதன் பணியாற்றிய திருநெல்வேலி  வானொலி 53 ஆம் ஆண்டினைத் தொட்டு ஆண்டுவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
 ஆகாஷ்வாணி நடத்திய நாடகப்போட்டியில் திருநெல்வேலி வானொலி நிலையம் தயாரித்த கம்ப்யூட்டர் எக்ஸ்.ஒய்.இசட் என்னும் நாடகம் தேசியஅளவில் பரிசினை வென்று சாதனை படைத்தது” என்று பேசினார்.


சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன் சிறப்பு விருந்தினராய் பங்கேற்றுச் சிறப்புரையாற்றும்போது, 

  “ திருநெல்வேலி வானொலி அரைநூறாண்டுகளைக்கடந்து தரமான நிகழ்ச்சிகளைத் திறமாகத் தந்துகொண்டிருக்கிறது. எத்தனை ஊடகங்கள் வந்தாலும் வானொலியின் தேவை இந்தச் சமூகத்தில் இருந்துகொண்டேதான் இருக்கும்.வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வந்தபோது யாரும் எட்டமுடியாத பாதிக்கப்பட்ட மக்களோடு வானொலி மூலமே தொடர்பு கொள்ளமுடிகிறது. 

சான்றோர் சிந்தனைகளைச் சமயவேறுபாடுஇல்லாமல் கேட்கும் மக்கள் பரந்தமனம் உடைய, பிற மதங்களை மதிக்கும் உயர்ந்த இலட்சியமுள்ள மனிதர்களாக மாறுகின்றனர். நூல்களைப் படிக்கவேண்டுமென்றால் கூட எழுத்தறிவு அவசியம்.ஆனால் படிக்காத பாமரரும் வானொலி கேட்கலாம். உலகியல் நடப்புகளைத் தெரிந்துகொள்ளலாம். 

திருநெல்வேலி வானொலியில் தரமான சரியான உச்சரிப்போடு பேசும் அறிவிப்பாளர்களிடம் இருந்து தமிழைத் தவறின்றிப் பேசக்கற்றுக்கொண்டேன்.

சிறுவர்களில் தொடங்கி, இளையோர்,பெண்கள், மூத்தோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. 

திருநெல்வேலி வானொலி தாமிரபரணி நதி குறித்த, சுற்றுச்சூழல் குறித்த,தமிழ்ப்பண்பாடு குறித்த, சாதனைபடைத்த ஆளுமைகள் குறித்த, மனதைப் பக்குவப்படுத்தும் இசைகுறித்த, தமிழ்இலக்கியம் குறித்த தரமான நிகழ்ச்சிகளை அரைநூற்றாண்டினைக் கடந்தும் தந்துகொண்டிருக்கிறது.

 தரமாகப் பேசத்தினமும் வானொலி கேட்கவேண்டும். டெல்லி செய்தியறிக்கை வாசித்த சரோஜ்நாராயண்சாமி,சென்னை வானொலியில் செய்திகள் வாசித்த ஜெயாபாலாஜி, பாலசுப்ரமணியன்,சென்னை தொலைக்காட்சியில் செய்திகள் வாசித்த ஷோபனா ரவி, நெல்லை வானொலியின் உமாகனகராஜ், சந்திரபுஷ்பம் பிரபு, கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன், குடந்தை வேங்கடபதி, கீழப்பாவூர் சண்முகையா, மேலப்பாவூர் ராமகிருஷ்ணன் ஆகியோரிடமிருந்து கல்லூரிநாட்களில்  தமிழைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொள்ள முடிந்தது.

 திருநெல்வேலி நேயர்கள் பங்கேற்றுப் பேசும் ஆனந்தப்பூங்காற்றே நேரலை நிகழ்ச்சியின் மூலம் தினமும் புதுப்புதுச் செய்திகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

 மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தை காந்திஅஞ்சலி என்ற நிகழ்ச்சியாக நெல்லை வானொலி தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது. 

வரலாற்று நாவலாசிரியர் கல்கி எழுத்திய பொன்னியின் செல்வன் நாவலை வாராவாரம் நெல்லை வானொலி தந்துகொண்டே இருக்கிறது.

 எம்.கே.தியாகராஜபாகவதர் போன்றோர் பாடிய பாடல்கள், திருமுருகக் கிருபானந்தவாரியார்,புலவர் கீரன்,எம்பார் விஜயராகவாச்சாரியார் உரைகள், மகாகவி பாரதி குறித்த, மனிதநேயம் குறித்த அரிய உரைச்சித்திரங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் அரிய நேர்காணல்களை நெல்லை வானொலி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது.” என்று பேசினார்.

 வானொலி நேயர்கள் திருமலைமுருகன்,பத்தமடை கந்தசாமி, பொருநைமைந்தன், கதிர்,திருக்களூர் பாலு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 


கவிப்பாண்டியன் நன்றி கூறினார். ஆண்டுவிழா நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை திருநெல்வேலி வானொலி நிலையம் சிறப்பாகச் செய்திருந்தது.
படத்தில் ; திருநெல்வேலி வானொலி நிலையத்தின் திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நிலையத்தின் மூத்த ஊழியர் கே.ஆர்.கே.பாண்டியன் கேக் வெட்டித் தொடங்கிவைக்கிறார்.அருகில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி,முனைவர் சௌந்தர மகாதேவன்,எழுத்தாளர் நாறும்பூநாதன்,பொறியாளர் இவாஞ்சலின் ஆகியோர் உள்ளனர்.

Source: http://mahakavithai.blogspot.in/2015/12/53.html

No comments: