Wednesday, December 09, 2015

பேரிடர் வேளையில் வானொலி

சென்னை மழையில் உதவிய பழைய தொழில்நுட்பம் !

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்தாண்டு சென்னை கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையை சற்றும் கண்டிராத, எதிர்பார்த்திடாத சென்னையில் தங்கியிருந்த மக்கள், தற்போது சொந்த ஊருக்கே சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே மழை வெள்ளத்தால் சிரமப்பட்ட சென்னை வாசிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 30) தொடங்கிய தொடர்மழை தான் பேராபத்தை தந்தது. பெருமழை தொடர்ந்து 2 நாட்கள் வெளுத்துக்கட்டியது. 

சென்னைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால், எல்லா புறமும் மக்களை நகர விடாமல் தவிக்கவிட்டது.

இன்று எட்டாவது நாள்.

சற்று மக்கள் மீண்டு வந்தாலும், உணவு இன்றி, தங்க இடமின்றி, உடுத்த உடையின்றி பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர், சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம், சென்னை மக்களின் அவதிக்கு மழை காரணமாக இருந்தாலும், தொலைத்தொடர்பும், போக்குவரத்தின்மையும் அவர்களை மேலும் துயரத்திற்கு ஆளாக்கியது.

ஆனால், இந்த பேரிடர் வேளையில் வானொலி நிறைய பேருக்கு ஆறுதல் அளித்ததாக சென்னைக்குள் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, எந்த பகுதியில் என்ன நடந்தது. எங்கு வெள்ளம் சூழ்ந்தது உள்ளிட்ட தகவல் அறிவிப்பாளர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தனர். மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சி சேவையும் துண்டிக்கப்பட்டது. 

வெள்ளம் புகுந்ததால் சில தொலைக்காட்சி நிறுவனங்கள்  தற்காலிகமாக சேவையை நிறுத்தின.

சென்னைக்கு வெளியே, போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ஆங்காங்கே நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களில் இருந்தவர்களும், வானொலி சேவை மூலமே நிலைமையை தெரிந்துக்கொண்டனர்.

அகில இந்தியா வானொலியான அரசு பண்பலை சேவையில் மணிக்கொரு முறை ஒலிபரப்பான செய்திகள் அவர்களுக்கு தகவல்களை அறிந்துக்கொள்ள உதவியது.

மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும், அகில இந்தியா வானொலி நிலையம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஊருக்கு திரும்பி செல்வதை முடிவெடுத்த வெளியூர் மக்கள், சென்னைக்குள் வெள்ளத்தில் சிக்காமல் தப்பினர்.

கடந்த வாரத்தின் திங்கட் கிழமை மாலையில் இருந்து மூன்று நாட்கள் எந்த செல்பேசி தொடர்பும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அழைத்து சென்றுவிட்டது இந்த மழை....

அதேசமயம், படிப்படியாக மின்சாரம், தொலைபேசி சேவை, இணைய சேவை, போக்குவரத்து சீரானதால், 21ம் நூற்றாண்டுக்குள் சென்னை முழுவதுமாக மீண்டு வந்தது என்றே கூறலாம்.

Source: http://ns7.tv/ta/how-fm-radios-help-flooded-chennai.html

No comments: