Wednesday, January 19, 2022

மீண்டும் இலங்கை வானொலி


வானொலி தொடர்பான அஞ்சல் தலை மற்றும் முதல் நாள் கடித உறைகளை (First Day Cover) சேகரிக்கத் தொடங்கி 20 வருடங்கள் ஆகிறது. இதில் ஒரு சில உறைகள் விரைவில் கிடைத்துவிடும், ஆனால் ஒரு சில உறைகளை வருட கணக்கில் காத்திருந்து பெறவேண்டியதாக இருக்கும். அந்த வரிசையைச் சேர்ந்தது இந்த உறை.

இலங்கை வானொலியின் பொன்விழாவையொட்டி 2017இல் இந்த உறை வெளியானது, அன்று முதல் பல்வேறு நண்பர்களிடம் முயற்சி செய்து, இன்று தான் இது கிடைத்தது. கூடவே பயன்படுத்தாத மிக அழகிய ரூ.10 மதிப்புள்ள தபால் தலையும். 

60 மி.மீ x 30 மி.மீ அளவுள்ள இந்த முத்திரையை வடிவமைத்தவர் புலஸ்தி எதிரிவீர. இலங்கை அரசாங்க அச்சு திணைக்களத்தால் 5 ஜனவரி 2017 அன்று வெளியிடப்பட்டது. மொத்தமாக ஐந்து லட்சம் அஞ்சல் தலைகள் அச்சிடப்பட்டாலும், உலக அளவில் உள்ள வானொலி நேயர்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. அதன் காரணமாகவே இது இன்று சந்தையில் விலை அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

இலங்கை ஒலிபரப்பு சேவை 1924 ஜூன் மாதம் 27ஆம் தேதி பரீட்சார்த்த முறையில் தொடங்கினாலும், 1967 ஜனவரி மாதம் 5ஆம் தேதி முதல் தான் இது அரச கூட்டுத்தாபனமாகச் மாற்றம் செய்யப்பட்டது.  அது ஐம்பது ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த தபால் தலை முத்திரைப் பணியகத்தால் வெளியிடப்பட்டது.

நாளை 20-01-2022 காலை 7 மணி முதல் 8 மணிவரை  இலங்கை சர்வதேச வானொலி மீண்டும் மத்திய அலைவரிசையில் 873 கி.ஹெர்ட்ஸில் ஒலிபரப்ப உள்ளதையொட்டி இந்த அஞ்சல் தலை மற்றும் முதல் நாள் கடித உறைகளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

1 comment:

Unknown said...

மிகவும் சிறந்த சேகரிப்பு வாழ்த்துக்கள்