Thursday, January 25, 2024

மறைந்தார் NCG

நம் வாழ்வில் ஒரு சில மனிதர்களை நாம் மறக்க முடியாது. அப்படியானவர்களில் ஒருவர் தான் மறைந்த N.C.ஞானபிரகாசம்  (NCG) ஐயா அவர்கள். என் வானொலி பயணத்தில் மிக முக்கியமானவர், என்றால் அது மிகையில்லை.


 

அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தோடு எட்டு வருடங்கள் பயணிக்க உதவியவர். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் துறையில் படிக்கும் போது பகுதி நேரமாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்து, படிப்பிற்கும் உதவியவர். 

வெளிநாட்டு ஆங்கில வானொலிகளில் மட்டுமே ஒலித்து வந்த DX PROGRAM, போன்று தமிழில் ஒன்று தொடங்க நினைத்த போது, முதலில் நினைவுக்கு வந்தவர் திரு. NCG அவர்கள் மட்டுமே. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுச் சேவையான திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் அப்பொழுது அவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார்.

"வானொலி உலகம்" எனும் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து வழங்க வேண்டும் என்று கூறினேன். எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக அனுமதி கொடுத்தார். 54 வாரங்கள் ஒலித்த அந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். காரணம், அந்த நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு கடிதம் மற்றும் Reception Report அனுப்பும் நேயர்களுக்கு World Smallest QSL Cardனை அனுப்பினோம். 

ஒரு சில வெளிநாட்டு நேயர்கள் அவர்கள் எழுதும் கடிதங்களோடு அமெரிக்க டாலர்களையும் வைத்து அனுப்புவர். அது வான் அஞ்சலுக்காக அஞ்சல் தலை வாங்குவதற்கு எனக் குறிப்பிட்டு அனுப்புவர். அன்று அவர் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது, "என்னப்பா, ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு டாலர் எல்லாம் அனுப்பி வைக்குறாங்க, எனக்கு தெரிஞ்சு தமிழில் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படி நேயர்கள் உலகம் முழுக்க இருந்து காசு அனுப்பியது இந்த நிகழ்ச்சிக்கா தான் இருக்கும்" என்றார்! 

பிற்பாடு அந்த நிகழ்ச்சி புத்தகமாக NCBHல் "உலக வானொலிகள்" என்ற தலைப்பில் வெளிவந்த போதும் முதல் மனிதராக வந்து வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

"வானொலி உலகம்" நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு ஒரு நேயர் பத்து பக்கங்களுக்குப் பாராட்டி ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தைப் படித்த அன்றைய இயக்குநர், திரு.ஸ்ரீநிவாசராகவன், "அப்படியென்ன அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்புகிறீர்கள்" என்று NCGயிடம் கேட்டுள்ளார். 

உடனடியாக என்னை அழைத்து, உடனே புறப்பட்டு வாருங்கள். உங்கள் நிகழ்ச்சிக்கு யாரோ பத்து பக்க கடிதத்தை இயக்குநருக்கு எழுதிவிட்டார்களாம் என்று கூறியதும், பயந்தே போனேன்.

நேரில் சென்றவுடன், பயப்பட வேண்டாம், கடித விபரத்தைக்  கூறியதோடு, அந்த கடிதத்தினையும் காண்பித்தார். அந்த கடிதத்தை எழுதியவர் திரு.பாலசுப்பிரமணியம். மூத்த Dxer, பிற்பாடு நெருங்கிய நண்பராக இன்று வரை எனது நட்பு வட்டத்தில் தொடர்கிறார். 

இப்படி பலரின் நட்பும் கிடைக்கக் காரணமானவர். பத்திரிகையில் நான் எழுதிய ஏதேனும் ஒரு கட்டுரை வெளிவந்தால், முதல் அழைப்பு இவரிடம் இருந்து தான் வரும். ஒரு கட்டத்தில் காலை அழைப்பு வந்தாலே, ஓ, பத்திரிகையில் நாம் எழுதியது ஏதோ வெளிவந்துவிட்டது என்று நினைக்கும் அளவிற்கு எம் மீது பாசமும் அன்பும் வைத்தவர்.

அவருடன் இணைந்து FM RAINBOWல் பணியாற்றிய "சினிமா நேரம்" நிகழ்ச்சியாகட்டும், "நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சியாகட்டும், இரண்டையும் இன்று எழுத்தாக்கினால், பல தொகுப்புகளாக வெளியிடலாம் சினிமா துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் அதில் ஆவணப்படுத்தினோம். இன்று ஒரு நிகழ்ச்சி கூட ஆவண காப்பகத்தில் இல்லை என்பது மிக வருத்தமான ஒரு செய்தி. காரணம் அன்று அனைத்து ஒலிப்பதிவுகளும் Spool Tapeல் செய்யப்பட்டது.

ஒரு முறை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தோம். சிம்ரன் சிறப்பு விருந்தினர். நான் ஒலிப்பதிவு பொறுப்பிலிருந்தேன். ஸ்பூல் டேப் போதவில்லை. அவசரத்தில் ஒலிப்பதிவு செய்த முதல் டேப்பை அழித்துவிட்டேன். நிகழ்ச்சி முடிந்து சிம்ரனும் சென்றுவிட்டார். பிறகு திரும்பப் போட்டுப்பார்த்த போதுதான் தெரிந்தது, முதல் டேப் அழிந்துவிட்டது என்று. கொஞ்சமும் பதட்டமில்லாமல், சிம்ரனை மீண்டும் அழைத்து ஒலிப்பதிவு செய்தோம். இதில் அவர் நம்மைக் கடிந்துகொள்ளாமலேயே, ஒரு பாடத்தினை கற்றுக்கொடுத்ததை இன்றும் மறக்க முடியாது.

இப்படி இன்னும் ஏராளமான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது. அனைத்தையும் இங்கு எழுத இயலாது. காரணம் எனது வாழ்வில் தொடர்ந்து பயணித்த ஒரு வழிகாட்டி. இனி யார் அழைத்துச் சொல்வார்கள், உனது கட்டுரை இதில் வெளிவந்துள்ளது என்று!

தான் எந்த ஒரு பணியைத் தொடங்கினாலும், சிறியவன் என்றும் பாராமல் அது பற்றி ஒரு கருத்தினைக் கேட்பார். அவரது இந்த செயல் நம்மையும் கற்றுக்கொள்ளச் சொல்லும். 

பைப்பாஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் சேலம் கோகுலம் மருத்துவமனையில்    பின் ஓய்விலிருந்தார். வியாழன் 25-1-24, அதிகாலை 12.30க்கு நம்மைவிட்டுப் பிரிந்தார். இன்று இரவு அன்னாரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நாளை மாலை மூன்று மணி வரை லாயிட்ஸ் காலனியில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.

அவரது இழப்பு எமக்கே ஈடுசெய்ய முடியாத ஒன்று. இந்த சமயத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எப்படி வருத்தத்தினை தெரிவிக்க! ரேவதி மேடம், தோழர் கற்பகம், சபரி மற்றும் திரு.ராஜாமணி சாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: