Friday, January 12, 2024

அசாத் ஹிந்த் வானொலியில் தமிழ்

 



BOSE: An Untold Story of an Inconvenient Nationalist எனும் புத்தகத்தினை இன்று புத்தகக் காட்சியில் பார்த்தவுடன் வாரி அனைத்துக் கொள்ளத் தோன்றியது. என்ன ஒரு செய்நேர்த்தி, வடிவமைப்பு. அழகான கட்டுமானம்.

சுபாஷ் சந்திர போஸ் புத்தகங்களில் எதைப் பார்த்தாலும், உடனே அதில்  Azad Hind Radio பற்றி என்ன எழுதியுள்ளார்கள் என்று ஆர்வத்துடன் தேட தொடங்கிவிடுவேன். அதே தான் இன்றும் நடந்தது, உடன் வந்த அன்பு மாணவர் விஷ்வா ஒவ்வொரு பக்கத்தினையும் கண்கள் விரிய பார்த்த என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

F18 Penguin அரங்கில் தான் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. 740 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ₹ 999. (10% கழிவு தனி) இந்த நூல் எனக்குப் பிடித்தமைக்குக் காரணம், அவ்வளவு மேற்கோள்கள் மற்றும் துணை தரவுகளை ஆசிரியர் கொடுத்துள்ளது தான். குறிப்பாக துணை நூற்பட்டியல் மலைக்க வைக்கிறது.

"நான் சுபாஷ் சந்திர போஸ் அசாத் ஹிந்த் ரேடியோ ஊடாகப் பேசுகிறேன், நான் இங்கு இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்" என்று தனது கம்பீரக் குரலில் "மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று பேசியதை, வரிகள் மாறாமல் அப்படியே இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் சந்திரஷுர் கோஸ்.

பத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அசாத் ஹிந்த் வானொலித் தொடர்பானத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். இதில் சுவாரஷ்யமானத் தகவல் என்னவெனில், இந்த வானொலி தமிழ் மொழியிலும் சிற்றலையில் (Shortwave) ஒலிபரப்பியது என்பது அனைவருக்கும் ஆச்சர்யம் ஊட்டும் செய்தி.



No comments: