தமிழ்நாட்டில் முதன் முதலாக வானொலி நிலையம் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் ஒரு முக்கியமான பெயர், ராவ் பகதூர் சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி. அவரது அயராத முயற்சியின் காரணமாகவே சென்னையில் முதல் வானொலி நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.
கல்வித் திறனும் ஆர்வமும்
19ஆம் ஏப்ரல் 1883ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கிருஷ்ணசுவாமி செட்டி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் தொழில்நுட்பக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஹெர்ட்ஸ், ரிச்சி, பிரான்லி மற்றும் மார்கோனி ஆகியோரின் வானொலி சம்பந்தப்பட்ட பரிசோதனைகளில் ஆர்வம் கொண்டார். பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் பேட்டரி செல்கள் மற்றும் 'கோஹீர்' என்ற கருவியைப் பயன்படுத்தி வானொலி சிக்னல்களைப் பெறும் கருவிகளை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிட்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அங்கு வளர்ந்து வந்த வானொலி தொடர்புகளை நேரில் கண்டறிந்தார்.
தாய்நாட்டில் முயற்சிகள்
தாய்நாட்டிற்குத் திரும்பிய பிறகு, இங்கிலாந்தின் வானொலி நிலையங்களின் சிக்னல்களைப் பெறக்கூடிய சிறந்த வானொலி பெறும் கருவியை உருவாக்கினார். மேற்கத்திய நாடுகளில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலி ஆர்வலர்களால் ஈர்க்கப்பட்டார். இந்தியாவில் வானொலி ஒலிபரப்புக்கான கருவியை உருவாக்கும் கனவை அவர் கொண்டிருந்தார். ஆனால், அவ்வாறு உருவாக்கத் தேவையான உதிரிபாகங்கள் கிடைப்பதில் பெரும் சவால் இருந்தது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, தங்கக் கலைஞர்கள் மற்றும் கண்ணாடி ஊதும் கலைஞர்களின் உதவியுடன் Triode Valves தயாரிக்க முயற்சித்தார், ஆனால் அது பலனளிக்கவில்லை.
சென்னை வானொலி மன்றம்
1924ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், சென்னையில் வானொலி மன்றம் ஒன்றைத் தொடங்குவது குறித்து, சென்னைப் பத்திரிகைகளில் ராவ் பகதூர் சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி பரப்புரை செய்தார். மக்களிடையே ஆதரவைத் திரட்டுவதே இதன் நோக்கம். அவரது முயற்சியால், 1924ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள கவுன்சில் அறையில் ஒரு முதற்கட்டக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. செல்வாக்குமிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வானொலி எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்குப் புரியவைக்கும் நோக்கில், மார்கோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அந்நாளில் செயல் விளக்கக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சித் தலைவர் வி. திருமலை பிள்ளை இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். சமூக சேவகரும் செல்வாக்குமிக்க நபருமான திருமலை பிள்ளை இந்த நிறுவனத்தில் ஆர்வம் காட்டியதால், இந்த மன்றத்தின் மதிப்பு மேலும் உயர்ந்தது.
கிளர்ந்தெழுந்த ஆர்வம்
1924ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் மாநகராட்சி கட்டிடங்களின் கவுன்சில் அறையில் முதற்கட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை நகரின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வி. திருமலை பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வானொலி சேவையை விரைவில் தொடங்குவதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கும், ஆரம்பகால பணிகளைச் செய்வதற்கும் ஒரு செல்வாக்குமிக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் சென்னை மாகாண ஆளுநர் ஹெச்.ஈ. விஸ்கவுண்ட் கோஷன் தலைமை தாங்கினார். சி.பி. ராமசாமி ஐயர் தலைவராகவும், சி.வி. கிருஷ்ணசுவாமி செட்டி கௌரவத் தலைவராகவும் இருந்தனர். மன்றத்தின் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ள ஒரு அமைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஈ.ஜே.எஸ். கிரீன்வூட், எஃப். நோபல், ஏ.ஜி.டி. வெப், பிராம்வெல், எம்.எஸ். சங்கரன், பி.வி. சாரி, ஹாஜி முகமது இப்ராகிம் சைய்யத், சி.டி. ஆழ்வார் செட்டி, ஈ.எச்.எம். போவர், வித்யாசாகர் பாண்டியா, கே.சி. சீனிவாச ஐயங்கார், பி. சம்பந்த முதலியார், ஏ.ஏ. HAYLES, J.J. Binstead, L.C. நிக்கல்சன், ஜி.டபிள்யூ. வால்போல், எஸ். ரங்கசாமி ஐயங்கார், டி.எச். கால்வே, ரெவ். ஹெச். யங் நெக்கர் மற்றும் ஆர்.ஏ. பர்ரிட்ஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். (சுவாரஷ்யமான தமிழக வானொலி வரலாறு தொடரும்)
No comments:
Post a Comment