Monday, September 15, 2008

சர்வதேச வானொலி ஆகஸ்ட் - செப்டம்பர் 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ்.

இந்த இதழில்...
* ஆசியாவின் முதல் தமிழ் வானொலி
* விலையும் குறைவு.. பயனும் அதிகமுள்ள வானொலி
* ஒலியுதிற்காலம்
* ரூ. 4000/- விலை கொண்ட டிஜிடல் வானொலி
* வருடத்தில் ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலி

என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை

விரல்நுனியில் SMS விடு தூது-2

CRI SMS NET
பாண்டிச்சேரியிலிருந்து தினந்தோறும் தமிழக நேயர்களிடையே சென்றடையும் CRI SMS NET. சீன நாட்டின் கலை, பண்பாடு, இலக்கியம், சுற்றுலா, விளையாட்டு என அனைத்துத் துறைத் தகவல்களையும் அக்குவேறு ஆணி வேறாக அலசி உடனுக்குடன் தகவல் தருகிறது இந்த CRI SMS NET . இந்த CRI SMS NET-ல் பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து செய்திகள் இடம் பெறாது. அதுபோல் மற்ற வானொலிகள் பற்றிய தகவல்களும் தற்போது இடம்பெறுவது இல்லை.
தொடர்புகொள்ள:
எஸ்.செல்வம் - 99769 90808,
என். பாலகுமார் - 98423 13233

DG SMS NET
மின்னக்கல் என்ற சிறிய கிராமத்திலிருந்து வரும் கிராமத்து மின்னல். அனைத்து சிற்றலை வானொலிகள் பற்றிய நேரம், அலைவரிசை, போட்டித் தகவல்கள், தொடர்பு முகவரி எனப் பல்வேறு தகவல்கள் தரும் மினி WRTH. (SW,MW,FM) பண்பலை, சிற்றலை, மத்திய அலை கேட்கும் நேயர்களின் தகவல் சுரங்கம். உள்ளூர் வானொலி முதல் உலக வானொலிகள் வரை அனைத்துத் தகவல்களையும் DG SMS NET மூலம் பெற முடியும்.
தொடர்புக்கு:
மின்னக்கல் செல்வராஜ்-99428 33661

RVA SMS NET
வேரித்தாஸ் தமிழ்ப்பணி- உலகத் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற வானொலி. வேரித்தாஸ் வானொலியைத் தமிழர்கள் மத்தியில் மேலும் அதிக நேயர்களிடையே சென்றடையும் வண்ணம்வழிவகை செய்திட இனிய இதயங்கள் திமிரி. கண்ணன் சேகர், செல்லூர் என்.சீனிவாசன் இருவரும் இணைந்து நடத்திடும் RVA SMS NET நெட் இது. முழுக்க முழுக்க வேரித்தாஸ் வானொலியை மையப்படுத்தியே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. தொடர்புக்கு,
கண்ணன் சேகர்-98949 76159
செல்லூர் என்.சீனிவாசன்-99941 26668

நெல்லை SMS NET
திருநெல்வேலியிலிருந்து சிலோன் ரேடியோ நேயர் கோபால் அவர்களால் நடத்தப்படுகிறது. இந்த நெல்லை SMS NET மூலம் பெரும்பாலும் இலங்கை வானொலி பற்றிய தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஏறத்தாழ 400 நேயர்களைச் சென்றடையும் நெல்லை SMS NET இது.நேயர்கள் செவிகளைத் தாலாட்டி ரசனையை வளர்க்கும் இலங்கை வானொலி அன்றுமுதல் இன்றுவரை தனது பெருமையை யும், புகழையும் தக்க வைத்துள்ளது என்பதை இந்த நெல்லை SMS NET சிறப்பாக செயல்படுவதை வைத்தே கூறிவிடலாம்.
தொடர்புக்கு:
திருக்களூர் கோபால்- 98429 50035, 98429 50075

பொள்ளாச்சி SMS NET
என். லட்சுமணன் அவர்களால் ஏராளமான நேயர்களை சென்றடைந்த தமிழகத்தின் பிரபலமான SMS NET. தனது வேலைப்பளு காரணமாகத் தற்போது நிறுத்தி¬ வைத்துள்ளதாகக் கூறும் லட்சுமணன், விரைவில் தனது SMS NET சேவையைத் தொடருவார்.
தொடர்புக்கு:
என். லட்சுமணன் - 98650 16402

SMS NET என்பது பொழுதுபோக்க அல்ல, நம் பொழுதைப் பயனுள்ளதாக்கி விரல்நுனியில் வந்து தகவலை சேர்க்கும் SMS விடு தூது. -வண்ணை கே. ராஜா

Sunday, September 07, 2008

SMS விடு தூது...

SMS -குறுந்தகவல் செய்திப் பரிமாற்றம் - தற்போதைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயமாகஉள்ளது. காரணம், காலை முதல் இரவு வரை பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எளியமுறையில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள SMS வசதியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் வானொலி நேயர்கள் மத்தியில் SMS Net பிரபலமாகஉள்ளது.

SMS Net(எஸ்.எம்.எஸ் நெட்) என்றால் என்ன? நீங்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நெட் அமைப்பாளரிடம் உங்கள் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். தினமும் தகவல்கள் உங்கள் விரல்நுனிக்கு வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு தகவலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எந்த விதத் தடையுமின்றி வந்துசேரும்.

உதாரணமாக உங்களுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வர இருக்கலாம். இந்தத் தகவலை நெட் ஆபரேட்டரிடம் பதிவு செளிணிதுவிட்டால் போதும். உங்கள் பிறந்த நாளன்று அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் சென்றடையும். அனைவரும் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. இதுபோன்ற நினைவூட்டல்கள் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, முக்கிய வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நேரம், வானொலிப் பேட்டிகள், வானொலி ஆண்டுவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள்ஒலிபரப்பாகும் நேரம் போன்றவற்றையும் நினைவூட்டத் தவறுவதில்லை. திருமணநாள், பிறந்தநாள் வாழ்த்துக்களை நேயர்களிடம் பரிமாறிக் கொள்ளும் வகையில் செயல்பட்டு நட்புறவை வளர்க்கும்எஸ்.எம்.எஸ் நெட் பற்றி என்னவென்று சொல்வது!

சிற்றலை வானொலி கேட்போருக்குப் பிரபல வானொலிகள் ஒலிபரப்பாகும் நேரம், அலைவரிசை, முகவரி போன்றவற்றைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். இந்தத் தகவல்கள் தெளிவாக அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் நெட் மூலமும் சென்றடைகின்றன.பிரபல சிற்றலை வானொலிகளில் அவ்வப்போது நடத்தப்பெறும் போட்டிகள் பற்றியும், அதில் பங்குபெறும் முறையும் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ் செய்திகளாகப் பரிமாறப்படுகின்றன. முகம் தெரியாத பல்வேறு முகவரிகள்இந்த SMS Net மூலம் தகவல்களைப் பெறுவதோடு நட்புறவை வளர்த்துக்கொண்டு பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

SMS Net -உங்கள் வாழ்வில் புது அனுபவங்களை ஏற்படுத்தித் தருகின்றன. பங்கேற்க மறந்த வானொலிப் போட்டிகள் இப்போது இல்லை. எல்லாமே SMS Net தரும் தகவல் மழையால்தான்.வானொலி கேட்பதில் தகவல் பெறலாம், இசை கேட்கலாம், அதையும் தாண்டி தமிழக நேயர்களிடையே நட்புறவை வளர்க்கும் SMS Net என்ற உறவுப்பாலங்கள் மென்மேலும் வளர்ந்தால்தான் வானொலித் துறையும் வளரும். நேயர்களிடையே ரசனை மட்டுமல்ல, நட்புறவும் வளரும். வயது, கல்வித்தகுதி, ஜாதி, மதம் தாண்டி நம்மை இணைக்கும் வானொலி கேட்கும் ஆர்வம் பெருக நட்பு வட்ட சங்கிலி (SMS Net) நிறையப் பெருகவேண்டும். தமிழகத்தில் உள்ள SMS Net-களின்விபரம் நாளை.. -வண்ணை கே. ராஜா

Saturday, September 06, 2008

தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு; சாருஹாசன் பேட்டி - பாகம் 4

ஆந்திர அரசு தங்களுக்குக் கொடுத்த விருது பற்றி?
ஒரு சமயம் இரவு 12 மணிக்கு ஆந்திர கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஹாமில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் மட்டுமே அந்த அலைவரிசையில் இருந்தேன். ஆந்திராவில் புயலின் காரணமாக உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரில் இருந்து வரும் ஹெலிகாப்டருக்கு சென்னையில் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறினார்.நானும் உடனே அவர்களை அலைவரிசையிலேயே இருக்கச் சொல்லி, எங்களது வீட்டின் கீழ்த் தளத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இந்தியன் ஆயில் உதவி பொது மேலாளர் தங்கியிருந்தார். அவரை அழைத்து அலைவரிசையில் பேசச் சொல்லி, நானே ஆந்திர கலெக்டரின் சார்பில் கடிதம் எழுதி, ஹெலிகாப்டருக்கான எரி பொருளை வாங்கிக் கொடுத்தோம். இந்த சேவைக்காக எனக்கு ஆந்திர அரசு விருதினைக் கொடுத்தது. இதுவும் ஹாம் வானொலியில்மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது.

மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியபோது ஏதேனும் மறக்க முடியாத அனுபவம்?
1960களில் பெரும்பாலான ஹாம் உபயோகிப்பாளர்கள் மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியே வெளிநாட்டில் உள்ள ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வந்தனர். ஒருசமயம் நான் கீயில் ஒலிபரப்பி வரும்போது ஸ்காட் என்ற பெயரில் ஒருவர் மறுமுனையில் இருந்து எனக்கு பதில் அனுப்பினார். உடனே அவரிடம், நீங்கள் விண்வெளிவீரர் ஸ்காட்தானே?Óஎன்று கேட்டேன். உடனே, அவர் Òநீங்கள்தான் முதல் தடவையாக என்னைக் கண்டு பிடித்துள்ளீர்கள். நான் எத்தனையோ முறை இந்த மோர்ஸ் ஒலிபரப்பில் வந்துள்ளேன். ஆனால் முதன்முறையாக நீங்கள்கண்டு பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிÓ என்றார். அந்த கால கட்டங்களில் ஸ்காட் மிகப் பிரபலம்.

ஹாம் வானொலியின் வருங்காலம் எப்படி இருக்கும்?
பலர் நினைக்கிறார்கள், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் ஹாம் வானொலியும் மறைந்துவிடும் என்று. ஆனால் அது மறைந்து விடாது. காரணம் புதிய தொழில்நுட்பங்களோடு இணைந்துசெல்லவல்லது இந்த ஹாம் ரேடியோ. உதாரணமாக இணையத்தோடு இணைந்து இன்று ஹாம் வானொலியைக் கேட்கலாம், என்ற அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

தொலைதூர நேயர்களோடு பேசிய அனுபவம் ஏதேனும் உண்டா?
நிறைய உண்டு. சுவாரஸ்யமான சம்பவம் கூட ஒன்று உண்டு. நான் எனது ஹாம் ரேடியோவில் எப்.எம் அலைவரிசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, சீனாவில் இருந்து ஒருவர் அதே அலைவரிசை யில் வந்தார். எனக்கு ஆச்சரியம் என்னவெனில் எப்.எம் அலைவரிசை 80 கிலோமீட்டருக்கு மேல் போகாது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்? அதன்பிறகு எனது நண்பர் மூலம் இதற்குத்தீர்வு கிடைத்தது. அயனி மண்டலத்தில் இரண்டு லேயர் நெருங்கும்போது அதனுள் இந்த எப்.எம் அலைவரிசை புகுந்து, எங்கு ஓட்டை உள்ளதோ, அங்கு அது இறங்கிவிடும். அது போன்றே இன்று ஏராளமானோர் ஒரு சில சமயங்களில் தொலைதூரப் பண்பலையைக் கேட்க முடிகிறது.
சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல், வண்ணை கே. ராஜா (முற்றும்)

Friday, September 05, 2008

ராஜிவ் காந்தியும் ஒரு ஹாம்: சாருஹாசன் பேட்டி - பாகம் 3

ஹாமில் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?
ஏராளம் உண்டு. அதில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி யதை மறக்க முடியாது. ஒரு சமயம் இரவு 11 மணிக்கு HAM-ல் ஒரு பெண்ணின் குரல், தனது கணவர் ஹாம் என்றும், அவர் அந்த சமயம் ஊரில் இல்லை. இந்த சமயத்தில் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது என்று கூறினார். நான் உடனே அவர்களை அதே அலைவரிசையில் தொடர்ந்து இருக்கச் சொல்லிவிட்டு மற்றொரு டாக்டரை தொலைபேசியில் அழைத்து, அவரும் ஹாமாக இருந்ததால் ஹாம் அலைவரிசையில் வரச்சொல்லி, குழந்தையின் நிலையை விசாரித்து உடனே மருத்துவமனைக்குஅழைத்து வந்து, இரவோடு இரவாக அறுவைச் சிகிச்சைசெய்து குழந்தையைக் காப்பற்றினார். அவரின் பெயர் டாக்டர் கஜா. அவரது வீட்டில் அனைவருமே ஹாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியாது.

ஹாம் வானொலியின் சிறப்பு என்ன?
ஏராளமான சிறப்புகள் உள்ளன. உதாரணமாக ஒன்று. ஒருசமயம் ஒரு ஹாம் உபயோகிப்பாளரின் கார்திருடப் பட்டுவிட்டது. உடனே அவர் ஹாம் வானொலியில் தன் கார் திருடப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த சமயத்தில் ஹாம் வானொலியில் இருந்த ஒருவர், அந்த எண்கொண்ட கார் விமான நிலையம் தாண்டி சென்று கொண்டிருப்பதாகத் தகவல் கொடுத்தார். உடனே அந்தத் தகவல் போலிஸ்க்குத் தெரியப் படுத்தப்பட்டு, அந்தப்பகுதி போலிஸாரால் பிடிக்கப்பட்டது. இது போன்று இன்னும் ஏராளமான நன்மைகள் அந்தக் காலகட்டத்தில் ஹாம் வானொலியைப் பயன் படுத்துவதால்இருந்தன.

ராஜிவ் காந்தியும் ஒரு ஹாம் வானொலி பயன் பாட்டாளர் எனக் கேள்விப்பட்டோம்...?
ஆம், ராஜீவ் காந்தியும் ஒரு ஹாம் உபயோகிப்பாளர். பிரதமர் ஆவதற்கு முன்பு தினமும் ஹாம் அலைவரிசையில் வருவார். அந்த சமயங்களில் அவருடன் பேசிய மிகச் சிலரில் நானும் ஒருவன். இதுஅவருக்குத் தெரியாது. அதன்பின் அவர் ஹைதராபாத் வந்தபோது தேசிய அமெச்சூர் வானொலி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பேசினார். அந்த சமயத்தில் அவருடன் பேச முடியவில்லை என்பதில் இன்றும் வருத்தமே.

வெளிநாட்டு ஹாம்-களுடன் பேசிய அனுபவம்?
நான் பெரும்பாலும் இங்கிலாந்து ஹாம்களுடன் பேச விருப்பப்படுவேன். அதற்காக இரவு 12 மணிவரை விழித்துக்கொண்டு இருப்பேன். காரணம், இங்கிலாந்தில் அப்பொழுது மாலைநேரம். அந்த சமயத்தில்தான் ஏராளமான ஹாம்கள் அலைவரிசையில் வருவர். ஒரு சிலநாட்கள் அவர்களுடன் விடிய விடிய பேசிய அனுபவங்களும் உண்டு. (தொடரும்)

Thursday, September 04, 2008

சாருஹாசன் பேட்டி - பாகம் 2

ங்களுடைய Call Sign பற்றி?

1962இல் நான் தேர்வு எழுதி ஹாம் உரிமம் வாங்கினேன். எனது Call sign VU2 SCU. அந்த நேரத்தில் எனது வக்கீல் பணியில் தீவிரமாக இருந்ததால் Call Sign-ஐப் புதுப்பிக்கத் தவறிவிட்டேன். இதனால் மீண்டும் ஒருமுறை புதிதாக விண்ணப்பித்து Call Sign-ஐ வாங்க வேண்டியதாயிற்று. 1982இல் அதே Call Sign-ஐப் பெற்றேன்.

தாங்கள் பயன்படுத்திய ஹாம் வானொலிப் பெட்டிகள் குறித்து?
அந்த காலகட்டங்களில் ஹாம் வானொலிப் பெட்டிகளின் விலை அதிகமாக இருந்தது. மேலும் இந்தியாவில் அவை விற்பனைக்குக் கிடைக்காது. எனக்குத் தேவையானவற்றை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்தேன். அப்பொழுது என்னிடம் VHF மற்றும் UHF-இல் செயல்படக்கூடிய சாதனங்கள் இருந்தன. இதற்காக 20 மீட்டர் மற்றும் 40 மீட்டரில் ஒலிபரப்புவதற்காக Long Wire ஆண்டனாவைப்பயன்படுத்தி வந்தேன்.

ஹாம் வானொலியில் ரிபீட்டர் என்றால் என்ன?
VHF அலைவரிசைகளில் ஹாம் வானொலியைப் பயன்படுத்தும்போது அது நீண்டதொலைவுக்குச் செல்லாது. எனவே இது போன்ற ரிபீட்டர்கள் VHF ஒலி அலையைப்பெற்று மீண்டும் சக்தி கூட்டி மேலும் ஒலிபரப்பும். இதனால் VHF ஒலி அலைகள் நீண்ட தொலைவுக்குச் செல்லும். அன்றைய காலகட்டத்தில் ஒரு ரிப்பீட்டரின் விலை குறைந்தது ஒரு லட்சம் ரூபாய். காரணம் அதில் 'டியூப்ளெக்சர்' என்ற ஒன்றின் மீது தங்கமுலாம் பூசியிருப்பார்கள். ரிப்பீட்டரைப் பயன்படுத்தவும் தனியான உரிமம் வேண்டும். ஆனால் உரிமம் இல்லாமலேயே அதில் பல பரிசோதனைகளைச் செய்து பார்த்தேன்.

தங்களைப் போன்று நடிகர்கள் வேறு யாராவது ஹாம் உரிமம் பெற்றுள்ளனரா?
நடிகர்களில் என்னைப்போன்றே எனது சகோதரர் கமல்ஹாசன் ஹாம் உரிமம் வைத்துள்ளார். அவரது Call sign VU2 HAS. அதேபோன்று எனது சகோதரர் சந்திரஹாசனின் Call sign VU2 SCH. ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஹாம் வானொலியில் அடிக்கடி பேசுபவராக மம்மூட்டி உள்ளார். தனதுநடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது ஹாம் அலைவரிசையில் வருவார். அதேபோன்று ஆந்திர நடிகர் பிரசாந்தும் ஹாம் வானொலி உரிமம் வைத்துள்ளார். (தொடரும்)

Wednesday, September 03, 2008

சாருஹாசன் சிறப்புப் பேட்டி - பாகம் 1

சாருஹாசன் என்றால் நம் எல்லோருக்கும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்று மட்டுமே தெரியும். ஆனால் அவர் வானொலியோடும் தொடர்பு கொண்டவர் என்பது மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். ஹாம் வானொலித்துறையில் பழுத்த அனுபவம்கொண்ட இவரை ஒரு மாலை வேளையில் நமது சர்வதேசவானொலி நேயர்களுக்காக அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

ஆழ்வார்ப்பேட்டையில், முர்ரேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டைப்பற்றி அங்குள்ளவர்களிடம் யாரைக் கேட்டாலும் மணிரத்தினம் வீடா என்றே கேட்கிறார்கள். 77 வயதாகும் சாருஹாசன் தற்பொழுது தனது மகள் சுஹாசினியுடன் வசித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பாரிஸில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இரண்டு வருட காலம் நகர முடியாமல் இருந்தவர் இப்பொழுது பழைய சுறுசுறுப்புடன் நம்மோடு ஹாம் வானொலி பற்றி உரையாடியதன் எழுத்து வடிவம் இந்த இதழில் இடம்பெறுகிறது.

வானொலித் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?
பரமக்குடியில் இருக்கும் ஒரு மாணவனை காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சேர்க்கச்சென்று இருந்தேன். அங்குள்ள மாணவர் விடுதியில் அந்த மாணவனைத் தங்க வைத்துவிட்டு வரும்போது, அருகில் உள்ள ஒரு அறையில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஒருவர் தபால் அலுவலகங்களில் தந்தி அடிப்பதுபோல் ஏதோ செய்துகொண்டு இருந்தார். அவரிடம் அது என்ன என்று ஆர்வமுடன்கேட்டேன். அதற்கு அவர், அது மோர்ஸ் கீ என்றும், அதன்மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். அவரது பெயர், சாரி. அவரது Call signVU2SR. அதன்பின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரிடம் சென்று மோர்ஸ் கற்றுக்கொண்டேன். அதன்பின் அவர் ஜெர்மனிக்கு சென்று விட்டார். அதுவே முதன்முதலில் ஹாம்ரேடியோ மீது ஆர்வம் வரக் காரணமாக இருந்தது.

முதன் முதலில் ஹாம் வானொலியில் பேசியது பற்றி?
உண்மையைக் கூற வேண்டுமாயின் முதலில் ஹாம் வானொலியில் நான் பேசியது எனது Call signல் அல்ல. சாரி அவர்கள் ஜெர்மனி சென்று விட்டதால் அவரது Call sign-ல் பேசினேன். இதை VU2LE எனும் ஹாம் உபயோகிப்பாளர் கேட்டுவிட்டு, Òநீ சாரி அல்ல, உனதுபெயர் என்ன?Ó, என்று ஹாம் ரேடியோவில் கேட்டதுதான் தாமதம். உடனே வானொலிப்பெட்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்துவிட்டேன். அதன்பின் அவர் யார் எனக் கண்டுபிடித்து, அவரிடமே மீண்டும் பயிற்சி பெற்றேன். அவர் பெயர் பாலகிருஷ்ணன்.

அந்தக் காலகட்டத்தில் இருந்த ஹாம் வானொலி லைசன்ஸ் பெற்றோரின் எண்ணிக்கை?
நான் ஹாம் வானொலி உபயோகிக்க உரிமம் வாங்கியபோது இந்தியாவில் இருந்த ஹாம் வானொலிக்கு உரிமம் பெற்றோரின் மொத்த எண்ணிக்கையே 400தான். ஆனால் 1980களில் சென்னையில் மட்டுமே ஹாம் வானொலிக்கு தேர்வு எழுதியவர்கள் 6000 பேர். அந்த சமயத்தில் இந்தியாவிலேயே அதிக ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் இருந்த மாநிலமாக தமிழகம் இருந்தது, அடுத்த இடத்தில் கேரளா இருந்தது. (தொடரும்)

Tuesday, September 02, 2008

எம்.ஜி.ஆருக்கு தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் பட்டம்

லங்கை வானொலி நிகழ்ச்சியில் சமீபகாலமாக ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் கடந்த 02.03.2008 அன்று காலை 7.05 முதல் 7.45 வரை இலங்கை சர்வதேசவானொலி ஒலிபரப்பிய 'தொடுவானம்' நிகழ்ச்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் இந்திய நேயர்களுடன் தொலைபேசி மூலம் நேரடியாக உரையாடியது இலங்கை வானொலி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.

ஒரு எழுத்தாளன் என்பதற்கு, ஒருவன் தோளில் பை, ஜிப்பா, பைஜாமா போட்டுக்கொண்டு வந்தால் அவனை எல்லோருக்கும் அடையாளம் தெரியும். அந்த வடிவத்தை மாற்றி அமைத்தவர் தமிழ்வாணன்தான். எப்படி என்றால் தமிழ்வாணன் என்பதற்குபதில் ஒரு கருப்புக் கண்ணாடி தொப்பி படமாக வரையப்பட்டு அனுப்பினால் மணிமேகலைப் பிரசுரத்துக்கு வந்து சேர்ந்துவிடும், அதேபோன்று லேனா தமிழ்வாணனுக்கு கருப்புக்கண்ணாடிவரைந்தால் போதும். தபால் உரிய முகவரிக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. தனக்கு அதுபோன்று ஒரு அடையாளம் இல்லை என்று சொல்லி ஆதங்கப்பட்டார் ரவி தமிழ்வாணன்.

மணிமேகலைப் பிரசுரத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலமானவர்களுடைய முகவரிகளை வெளியிட்டுள்ளது பற்றி நிகழ்ச்சியில் கூறினார். உலகத்தில் எந்த இடத்தில் தமிழர்கள் வசிக்கின்றார்களோ அந்தந்த இடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து உரையாடியதைப் பெருமைப்படக் கூறினார். இலங்கைக்கு ஐந்து முறை சென்று, மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றவர்களிடம் நான்கு முறை அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொண்ட அனுபவத்தை நேயர்களுடன் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டது பல நேயர்களின் மனதினைத் தொட்டது. காரணம் அந்த மக்கள் என்னசெய்கிறார்கள் மற்றும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நானும் நன்கு அறிவேன்.

எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் கிடைத்திருந்தாலும், தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் பட்டம்தான் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது என்று நிகழ்ச்சியில் சொன்னது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். கே.பாலாஜி திரைப்படத்தில் கதாநாயகன், நாயகிக்கு ராஜா- ராதா என்று பெயர் இருப்பதுபோல் எழுத்தாளர் சுஜாதா அவருடைய கதையில் கணேஷ்-வசந்த் என்றும், தமிழ்வாணன் துப்பறியும் நாவல்களில் சங்கர்லால் வருவதை இலங்கை வானொலி நேயர்கள் கேட்டவிதம், அதற்கு ரவி தமிழ்வாணன் பதிலளித்தவிதம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், சக பணியாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடுவதாகநிகழ்ச்சியில் அறிவித்தது, இலங்கை வானொலி நேயர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை நிச்சயமாகத் தரும். இலங்கை சர்வதேச வானொலியில் நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில்கலந்துகொண்ட முதல் நபர் ரவி தமிழ்வாணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே சர்வதேச வானொலியில் 14.05.2006 அன்று காலை 9.05க்கு ஒலிபரப்பு முடிகின்ற தறுவாயில் எனக்காக சிறப்பு ஒலிபரப்பு என்று கூறி பதினைந்து நிமிடங்கள், அதாவது 9.20 வரை நீடிக்கப்பட்டு, அன்றைய அறிவிப்பாளர் திருமதி. விசாலாட்சி ஹமீது அவர்கள்எம்.ஜி.ஆர் நடித்த நான்கு பாடல்களுக்கு விளக்கம் கேட்டு அந்தப் பாடலை ஒலிபரப்பு செய்தார்கள். இந்த வாய்ப்பு அந்த சர்வதேச வானொலியில் முதன் முதலில் நேயர் என்ற முறையில் எனக்குக் கிடைத்தது. - வள்ளியூர் ஏ.பி.எஸ். ரவீந்திரன்

Monday, September 01, 2008

வானொலிப்பெட்டியின் விலை ரூ.2,40,000?!

டிஜிட்டல் வானொலிப் பெட்டிகளில் மற்றும் ஒரு புதிய வானொலிப்பெட்டி சந்தைக்கு வந்துள்ளது. ஜப்பான் ரேடியோ கம்பெனியால் தயாரிக்கப்பட்ட இந்த வானொலிப் பெட்டியானது கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. NRD-630 மாடல் எண் கொண்ட இந்த வானொலிப்பெட்டியானது, புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

90 கிலோ ஹெர்ட்ஸில் இருந்து 30,000 கிலோ ஹெர்ட்ஸ் வரை ஒலிபரப்பும் அனைத்து வானொலிகளின் ஒலிபரப்புகளையும் தெளிவாக இந்த வானொலியில் கேட்கலாம். ஒரு ஹெர்ட்ஸ் என்றவாறு நகரும் வகையில் இது உள்ளது. அதாவது 7275.000 என்று இதன் கேட்கும் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துல்லியமான ஒலிபரப்பினைக் கேட்கலாம். LSB, USB, AM, CW மற்றும் RTTY ஆகிய வடிவங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இதில் தெளிவாகக் கேட்கலாம். இந்த வானொலிப்பெட்டியின் Bandwidth முறையே 6, 3, 2.7, 0.5 மற்றும் 0.3 என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது.

300 அலைவரிசைகளைத் தன்னகத்தே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் திறன் இந்த வானொலிப்பெட்டியில் உள்ளது. நான்கு வகையான டியுனிங் வசதியைக் கொண்ட இந்தவானொலிப்பெட்டியிலேயே ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளதோடு, தெளிவான பெரிய டிஸ்பிளே உள்ளதால், எளிதாக சிற்றலை வானொலிகளை உடனுக்குடன் டியுன் செய்ய முடிகிறது.மேலும் இதில் Passband Shift, DBV, S-Meter, Squelh, Dimmer மற்றும் AGC பிரிவு ஆகியவை வானொலிப்பெட்டிக்கு மேலும் வலுசேர்க்கின்றன.

பெரும்பாலும் கண்காணிப்பு பணிக்காக மட்டுமே இது போன்ற வானொலிப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. காரணம், இது பெரிதாக இருப்பதோடு மட்டுமின்றி விலையும் மிக அதிகமானதாகவே உள்ளது. 16 இன்ச் ரேக்கில் மட்டுமே வைக்கக்கூடியதாக உள்ள இந்த வானொலிப்பெட்டியின் இந்திய விலை ரூ.2,40,000 ஆகும். தனி மனிதர்களால் வாங்க முடியாத இந்த வானொலிப்பெட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்: http://www.universal-radio.com/