Thursday, July 18, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 7

160 ஆண்டுகள் சேவை

திருச்சி : ''....... சீரியஸ் ஸ்டார்ட் இம்மீடியட்லி'' இந்த வாசகம் ஒரு தலைமுறைக்கு முன்பு வரை ஏக பிரபலம். இதை பரப்பியதில் டெலிகிராம் எனப்படும் தந்திகளுக்குத்தான் முக்கிய பங்கு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதி வடிவம் டெலிகிராம் எனப்படும் தந்தி. ஒரு தலைமுறைக்கு முந்தைய மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது இந்த டெலிகிராம். தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், திருமணம், வேலை, வாழ்த்து, இறப்பு என அத்தனை செய்திகளையும் தந்தி கொண்டு சேர்த்திருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டும் இருந்த நடைமுறை பின்னர் முன்னாள் எம்பி நல்லசிவம் நாடாளுமன்றத்தில் எடுத்த முயற்சியால் தமிழிலும் புழக்கத்தில் வந்தது. 

இந்தியாவில் கடந்த 1850ல் சேவையை தொடங்கியது முதல் மகிழ்ச்சி சம்பவங்களையும் அதற்கு நேரான துக்க விஷயங்களையும், அவசர தகவல்களையும் எழுத்துப்பூர்வமாக மக்களிடம் எடுத்துச்சென்றது தந்தி. தந்தி என ஒன்று வந்துவிட்டால் மனம் படபடக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போன தந்தி சேவை தற்போது தனது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஜூலை 15ம் தேதி முதல் டெலிகிராம் சேவை நிறுத்தப்பட உள்ளது.

ஆரம்பத்தில் தபால் தந்தித்துறையின் கீழ் இருந்த இந்த சேவை பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் வந்தது. தற்போது ஸ்மார்ட் போன், இ மெயில், எஸ்எம்எஸ், சாட்டிங் போன்ற நவீன தொலை தொடர்பு சேவைகளின் வரவால் டெலிகிராம் ஓரங்கட்டப்பட்டது. இன்றைய இளம் தலைமுறை பலருக்கு தந்தியின் பயன்பாடு, செயல்பாடு கூட தெரியாது. நாளடைவில் டெலிகிராமுக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. எழுத்துக்களை எண்ணி எண்ணி டைப் அடித்து அனுப்பப்பட்டு வந்த சேவை, வளவளவென பேச வைத்த செல்போன் நிறுவன வரவுகளால் தந்தியின் மகத்துவமும் தேவையும் குறைந்தது. 

இந்த நிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் தந்தி சேவையை ஜூலை 15 முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தந்தி புக்கிங் செய்வதற்கு கடைசி நாளும் அதுதான். இதுகுறித்த சுற்றறிக்கையை மூத்த பொது மேலாளர் ஷமீம் அக்தர் இந்தியாவில் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், பல்லாண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் தந்தி முறையை நிறுத்தக்கூடாது; அது தொடர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: