Monday, July 15, 2013

சென்னை வானொலி நிலையத்தில் அதிநவீன ஆவண காப்பகப் பிரிவு


அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தின் பவள விழாவில் முன்னாள் இயக்குநர் பி.வி.கிருஷ்ணமூர்த்திக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.ரகுபதி. உடன், (இடமிருந்து) சென்னை அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் தென் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் (பொறியியல்) எஸ்.கே.அகர்வால், சென்னை வானொலியின் துணைத் தலைமை இயக்குநர் (பொறியியல்) பி.பி.பேபி, முன்னாள் ஊழியர் வி.ஏ.எம்.ஹுசேன், தில்லி பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அலுவலர் ஜவஹர் சர்க்கார், பெங்களூர் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் தென் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் (நிகழ்ச்சி) ஆர்.வெங்கடேஸ்வரலு.

இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் விரைவில் அதிநவீன ஆவண காப்பகப் பிரிவு அமைக்கப்படும் என தில்லி பிரசார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் ஜவஹர் சர்க்கார் கூறினார்.
அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் புதன்கிழமை (ஜூன் 18) பவள விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஜவஹர் சர்க்கார் பேசியது:
இந்திய வானொலியின் சென்னை நிலையம் ஒரு வானொலி நிலையமாக மட்டுமல்லாமல், பிற வானொலி நிலையங்களைக் காட்டிலும் மிகச் சிறந்த முறையில் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை மக்களுக்கு கடந்த 75 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
இதுபோன்ற சிறந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் டேப்புகளில்தான் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. டேப்புகளில் செய்யப்படும் பதிவுகள் விரைவில் அழிந்துவிடும்.
எனவே, சிறந்த நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிப் பதிவுகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை நிலையத்தில் விரைவில் அதிநவீன ஆவண காப்பகப் பிரிவு அமைக்கப்படும். இந்தப் பிரிவில் நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கருவிகள் இடம்பெறச் செய்யப்படும்.
இதன் மூலம் ஒலிப் பதிவுகள் பாதுகாத்து வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், விரைவாக டிஜிட்டல்மயமும் ஆக்கப்படும். இந்தியாவிலேயே தில்லி நிலையத்துக்குப் பிறகு இரண்டாவதாக சென்னை நிலையத்துக்கு இந்த நவீன தொழில்நுட்பம் கொண்டுவரப்பட உள்ளது என்றார் அவர்.
75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை வானொலி நிலையம் இதுவரை 13,000 மணி நேரங்களில் 25,000-க்கும் மேற்பட்ட ஒலிப் பதிவுகளை செய்துள்ளது. இதில் 700 மணி நேர ஒலிப் பதிவுகள் மட்டுமே இதுவரை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என விழாவில் பேசிய சென்னை நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவில் பெங்களூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆர். வெங்கடேஸ்வரலு பேசியது:
சென்னை நிலையம்தான் தென்னிந்தியாவிலேயே முதல் வானொலி நிலையமாகும். பலதரப்பட்ட கலைஞர்களை இந்த நிலையம் சந்தித்துள்ளது. இந்த நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள், தென்னிந்தியாவில் உள்ள பிற வானொலி நிலையங்களில் மட்டுமல்லாமல் லட்சத்தீவு மற்றும் போர்ட் பிளேர் வானொலி நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இடம்பெற்றனர். தமிழ் திரைப்படத் துறைக்கு மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய திரைப்படத் துறை வளர்ச்சியிலும் சென்னை வானொலி நிலையம் பெரும்பங்காற்றியுள்ளது என்றார் அவர்.
விழாவில் அகில இந்திய வானொலி சென்னை நிலைய கூடுதல் தலைமை இயக்குநர் (பொறுப்பு) க.பொ. ஸ்ரீநிவாசன், புதுதில்லி பிரசார் பாரதி உறுப்பினர் (ஊழியர்) பிரிகேடியர் (ஓய்வு) வி.ஏ.எம். ஹுசேன், சென்னை அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குநர் (பொறியியல்) எஸ்.கே. அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
(நன்றி: தினமணி 19 June 2013)

No comments: