Wednesday, August 07, 2013

சீனாவில் நேயர்களின் 6-ஆம் நாள் பயணம்


ஆகஸ்டு திங்கள் 5-ஆம் நாள் காலை 10.50 மணிக்கு பெய்ஜிங் கிழக்கு தொடர்வண்டி நிலையத்திலிருந்து நண்பர் ஓவியா உடன் தொடர் வண்டி மூலம், ஷான்சி மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான தாதொங் நோக்கிப் புறப்பட்டோம். இந்நகரம், பெய்ஜிங்கிலிருந்து 374 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகருக்கு அதிவிரைவுத் தொடர் வண்டிப் பாதை இன்னும் அமைக்கப்படாததால் வேறு தொடர் வண்டி மூலம் 7 மணி நேரம் பயணம் செய்து, மாலையில் நாங்கள் தாதொங் நகரம் சென்றடைந்தோம். வழியெங்கும் ஏராளமான மலைகள் காணப்பட்டன. பயணத்தின்போது, நிறைய மலைச் சுரங்கப் பாதை மூலம் தொடர் வண்டி சென்றது. வழியெங்கும் பல கிராமங்களையும் மற்றும் விவசாயப் பயிர் வகைகளையும் கண்டு மகிழ்ந்தோம். மக்காச் சோளம் அதிகமாக பயிரிடப்பட்டிருந்தது. தொடர் வண்டி நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் நீளமுள்ள யான்ஜிங் சர்வதேச விடுதியை நோக்கிச் சென்றபோது, இந்நகரம், தனிச்சிறப்பு மிக்க, இதற்கு முன் நாங்கள் கண்டிராத வேறுபட்ட பண்பாடுகளைக் கொண்ட இடம் என்பதை புரிந்து கொண்டோம். 

இரவு ஓவியா அவர்களுடன் இணைந்து தாதொங் நகரின் தனிச்சிறப்புமிக்க உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தோம். சாப்பாட்டு மேசையில் உள்ள மின்அடுப்பில் கார நீரைக் கொதிக்க வைத்து, அதனுள்ளே மாட்டிறைச்சி, வாத்து இரத்தம், இனிப்பு உருளைக் கிழங்கு, தோஃபு, காளாண், கருப்பு நிறக் காளான், கோசுக்கீரை உள்ளிட்ட 6 வகை காய்கறிகள் ஆகியவற்றை வேகவைத்து சூடாக சாப்பிட்டோம். இது ஒரு வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நாளை காட்சியிடங்களுக்குப் பயணம் செய்து, விரிவான தகவல்களை வழங்குவோம். 

No comments: