Thursday, October 17, 2013

வானொலி நிலைய அதிகாரி இடமாற்றம்: ரத்து செய்தது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்

சென்னை: அகில இந்திய வானொலி நிலையத்தின் அதிகாரியை இடமாற்றம் செய்ததை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

சென்னையில் உள்ள, வானொலி நிலையத்தில், அதிகாரியாக பணியாற்றியவர், விஜயகிருஷ்ணன். நிர்வாக காரணங்களுக்காக, காரைக்காலுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு, கடந்த, பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இடமாற்றத்தை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், விஜயகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இடமாற்றத்துக்கு காரணம் தெரிவிக்கவில்லை என்றும் தண்டனை விதிக்கும் விதமாக, இடமாற்றம் நடந்து"ள்ளது என்றும், மனுவில் கூறப்பட்டது. வானொலி நிலையம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'விஜயகிருஷ்ணனின் நடத்தை பற்றி, பெண் ஊழியர்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் அனைத்தும், விசாரணைக்காக, ஐவர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், பெண் ஊழியர்களை அவர் சமமாக நடத்தவில்லை என, தெரிய வந்தது' என, கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் வெங்கடேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவில், 'வானொலி நிலையத்தின் பெண்கள் பிரிவு அளித்த அறிக்கையின் விளைவாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்தவர்களை, ஐவர் குழு விசாரிக்கவில்லை. இடமாற்ற உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர், அக்டோபர் 09,2013

No comments: