Thursday, October 17, 2013

செய்திகளை வெளியிடுவது எப்படி? பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது சீனா

பீஜிங்:சீன அரசு தனது சட்ட திட்டங்கள் மற்றும் தணிக்கை விதிகளுக்கு ஏற்ப ஊடகங்களை வழிநடத்துவது தொடர்பாக அந்நாட்டை சேர்ந்த 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmurasu.org

No comments: