Saturday, October 26, 2013

செய்திகளுக்கு இப்போது என்ன அவசியம்?

தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகளை அனுமதிக்கும்போது, ஏன் தனியார் வானொலியில் செய்திகள் வாசிப்பதை அனுமதிக்கக் கூடாது? என்று ஒரு வழக்கில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், தனியார் வானொலி நிலையங்களின் நிர்வாகிகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைச் செயலரை சந்தித்து இதே கேள்வியைக் கேட்டார்கள். அப்போது அவர் சொன்ன பதில்: முதலில் அகில இந்திய வானொலி நிலைய பண்பலை வரிசையில் தொடங்குவோம். பிறகு படிப்படியாக தனியார் வானொலி நிலையங்களுக்கும் செய்தி வாசிக்க அனுமதி அளிக்கப்படும். அத்தகைய அனுமதி அளிக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று வாரியம் (டிராய்) ஏற்கெனவே மிகத் தெளிவாக இது பற்றி கூறியிருக்கிறது. 3வது திட்ட காலத்தில், எப்எம் ரேடியோக்களில் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை ஒலிபரப்ப அனுமதிக்கப்படும். ஒரு மாவட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் இருக்குமெனில் கூடுதலாக ஒரு வானொலிக்கு செய்தி ஒலிபரப்ப அனுமதிக்கலாம் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இதன் நோக்கம், மாவட்ட அளவிலான உள்ளூர் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான். தனியார் தொலைக்காட்சி செய்திகள் பெரும்பாலும் மாநில அல்லது தேசிய அளவிலான செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. மிகவும் அரிதான சம்பவங்களில் மட்டுமே மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அந்தந்த மாவட்டம், உள்ளூர் தகவல்களுக்கான செய்திகள் கிடைக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவையும்கூட.
இப்போது எப்எம் ரேடியோக்களில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான செய்திகளை, தேர்தல் முடிவுகள் தொடர்பான சிறு தகவல்களை இடையிடையே ரேடியோ ஜாக்கிகள் பேசுகிற பேச்சோடு சொல்லிவிடுகிறார்கள். முழுமையான செய்தி என்று இல்லாத நிலையிலும்கூட, கேட்போருக்கு இந்த செய்திகள் கிடைத்து விடுகின்றன.
மற்றொரு விதத்தில் செய்தியை ஒலிபரப்பும் கலையையும் இந்த எப்எம் ரேடியோக்கள் கற்று வைத்திருக்கின்றன. அதாவது, அந்த தனியார் வானொலியின் துணை நிறுவனமாக இருக்கும் பத்திரிகைக்கு விளம்பரம் கொடுப்பதைப்போன்று, சில செய்திகளை வரிசையாக சொல்லிவிட்டு, மாலையில் அல்லது நாளை இந்த செய்திகளைப் பத்திரிகையில் பாருங்கள் என்கிறார்கள்.
இவ்வாறு செய்திகளை ஒலிபரப்பினாலும் அதில் வருவாய் காண முடியவில்லையே என்பதுதான் எப்எம் ரேடியோக்களின் இன்றைய ஆதங்கம். செய்திகளுக்கு இடையே விளம்பரங்களைப் பெற்று, அதற்கென தனி கட்டணங்களை நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே சட்டப்படி தங்களுக்கும் செய்தி ஒலிபரப்ப அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தற்போது அகில இந்திய வானொலி நிலையம் மட்டுமே செய்திகளை ஒலிபரப்பி வருகிறது. இது அரசு நிறுவனமாக இருப்பதால் அரசு சார்ந்த செய்திகள் மட்டுமே ஒலிபரப்பாகிறது. நாங்கள் செய்திகளை சுவையாகக் கொடுப்போம் என்பதுதான் தனியார் வானொலிகளின் வாதம்.
அகில இந்திய வானொலியின் செய்திகள் சுவை இல்லாததாக இருக்கலாம். ஆனால் உண்மைக்கு மாறானவை அல்ல. மிகவும் கட்டுப்பாட்டுடனும் சமூகப் பொறுப்போடும் செய்திகளை ஒலிபரப்புகிறார்கள். ஆனால் தனியார் வானொலிகளில் இத்தகைய சுயகட்டுப்பாடு இருக்குமா? செய்திக்காக பயன்படுத்தும் சொற்களில் கவனம் செலுத்துவார்களா? சுவை கூட்டுவதற்காக கொச்சையான மொழிநடையைக் கலக்கும் அபாயம் ஏற்படாதா?
இந்தியாவில் 240 தனியார் வானொலிகள் உள்ளன. 3வது திட்ட காலத்தில் இதன் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாகும். இத்தனை பேரும் சரியாக ஒலிபரப்புகிறார்களா என்பதை கண்காணிக்க இயலாது.
தற்போதே தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முழுநேர செய்தி சானல்களில் பல நேரங்களில், தணிக்கையாகாத விபத்து காட்சிகள், தகவல் முழுமை பெறாத செய்திகள் குறித்து மக்கள் கருத்து என்று உடனுக்குடன் போட்டிப்போட்டுக்கொண்டு ஒளிபரப்பும்போது, சமூக வலைதளங்கள் போலவே, கொந்தளிப்புக்கு வழியேற்படுகிறது. இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பிலும் ஒரு சுயகட்டுப்பாட்டுக்கான வழிகாட்டுதல், நிபந்தனை உருவாக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது.
அதிகமான கல்வி அறிவும், குறைந்த மக்கள் தொகையும் உள்ள மேலைநாடுகளைப்போல இங்கேயும் தனியார் வானொலிகளை செய்தி ஒலிபரப்ப அனுமதிப்பதில் நிதானமாக, நிபந்தனைகள் தீர்மானித்து பின்பு செயல்படலாம். இதற்கு இப்போது என்ன அவசியம், அவசரம்?
நன்றி: http://dinamani.com 19 அக்டோபர் 2013

No comments: