Showing posts with label உலக வானொலி தினம். Show all posts
Showing posts with label உலக வானொலி தினம். Show all posts

Sunday, February 12, 2017

ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது...

காதோடுதான் நான் பேசுவேன்!

"ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி. அமெரிக்காவில், ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பூரண குணமடைந்து, ஓரிரு நாளில், சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...' இந்த வார்த்தைகளை கேட்டவுடன், மனதுக்குள் வந்து செல்வது, வானொலியும், அந்த கணீர் குரலில் ஒலிக்கும் வசீகரமும் தான்.

வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் என, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், அது காட்டும் மாயஜால காட்சிகளில், எந்தவிதமான ஆச்சரியங்களும் அற்றுப்போன மனிதர்களாக, நாம் மாறி வருகிறோம். 

"அட' என, எதையும் பார்த்து வியக்காத அளவுக்கு, மனித மனங்கள் மரத்து போய்விட்டன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் ஒலிக்கும் வானொலி பாடல்களும், உரையாடல்களும், கேட்க இனிமையானவை. வானொலிக்குள் இருந்து வரும் உரையாடல்களை, பேச்சுகள், "வானொலிக்குள் யாரோ இருந்து கொண்டு பேசுகிறார்கள்,' என, அசட்டுத்தனமாக நினைத்த அப்பாவி மக்கள், நிறைய பேர் உண்டு.
இன்றைக்கு, 40 வயதை தாண்டிய பலருக்கும், வானொலி கேட்ட அனுபவங்கள், எப்போது நினைத்தாலும், பசுமையான நினைவுகளாக நெஞ்சில் நிழலாடி கொண்டிருக்கும். கம்ப்யூட்டர், "டிவி', மொபைல் போன் என, நாள் முழுவதும் ஏராளமான நேரத்தை, நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்று வானொலி கேட்டதால் எந்த வேலையும் கெட்டதில்லை. வீட்டு வேலைகளை பெண்கள் செய்தனர்; உணவு சமைத்தனர்; கால்நடைகளை மேய விட்டனர். பாடல்களை கேட்டபடி, பூக்கடைகளில் பூத்தொடுத்தனர்; ஆண்கள், தங்களது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே, வானொலியை ரசித்து வ(ச)ந்த காலம் அது. கிரிக்கெட் போட்டிகளின் போது, வானொலியில், "ஸ்கோர்' கேட்பது என்பது, அலாதியான சுகம்.

இன்று, பண்பலை எனப்படும் எப்.எம்., வானொலிகள் இருந்தாலும், பெரும்பாலும் பேச்சும், இரைச்சலான பாடல்களும் மட்டுமே கேட்க முடிகிறது. அந்நாளில், காலை, மாலை நேரங்களில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள், செய்திகள், பழைய, புதிய சினிமா பாடல்கள், நாடகம், புதினம் வாசித்தல், ஞாயிறு தினங்களில் திரைப்பட ஒலிச்சித்திரம், சிறுவர் பூங்கா, இசை நிகழ்ச்சிகள், கர்நாடக கச்சேரிகள், கல்வி நிகழ்ச்சி என, வானொலியில் கேட்டவை ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது தவறு என, அந்த காலத்திலேயே அறிவுறுத்திய ஊடகம் வானொலி.தென்கச்சி சுவாமிநாதன் போன்றவர்களின் உரை, நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை. மக்களை சிந்திக்க வைப்பதோடு, கற்பனை வளத்தை அதிகரிக்க செய்ததில், அன்றைய வானொலியின் பங்கு அளப்பரியது. தேவையான தகவல்களை தருவது, தேச பக்தி, விழிப்புணர்வு என்பதே, வானொலியின் தலையாய கடமையாக இருந்தது.

தகவல் தொடர்பு துறையில் தாயாக விளங்கியது, வானொலி என்ற முதல் ஊடகம்தான்; ஆனால், "டிவி', கம்ப்யூட்டர், மொபைல்போன்கள், மக்களை நல்வழிப்படுத்துவதை காட்டிலும், தவறான பாதைக்கே, வழிநடத்துகிறது. வாழ்க்கை சீரழிவுகளை, காதில் கேட்க முடியாத, கண்ணில் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் காட்சிப்படுத்தி, மக்களை ரசிக்க செய்கிற ஒரு அவல நிலையை பார்க்க முடிகிறது.
வரும் 13ல், வானொலி தினம் கொண்டாடுகிறோம். வாரத்தில் ஓரிரு தினங்கள், ஆண்டுக்கு ஓரிரு மாதங்களாவது வானொலியை மட்டுமே கேட்பது, வீட்டில் வானொலியை ஒலிக்க செய்வது என்று, இந்நாளில் நாம் முடிவெடுக்க வேண்டும். பழுதுபட்ட நம் கண்களுக்கும், பாழடைந்த நம் செவிகளுக்கும் அருமருந்தாக, வானொலி அமையும் என்பதில் சந்தேகமில்லை. (நன்றி: தினமலர், 12 பிப். 2017)

உலக வானொலி தினம் 2017

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உலக வானொலி தினம் வெகு சிறப்பாக 8 பிப். 2017 அன்று கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப். 13ஆம் நாளை உலக வானொலி தினமாக ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன் கூட்டியே இந்த ஆண்டுக்கான உலக வானொலி தினம் இதழியல் துறையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிபிசி உலக சேவையின் தயாரிப்பாளர் திரு.எஸ்.சம்பத்குமார், ஐபிசி தமிழின் மூத்த செய்தியாளர் அப்துல் ஜப்பார் மற்றும் 'தமிழ் வானொலி வரலாறு நூலின் ஆசிரியர்' முனைவர்.கு.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'சர்வதேச வானொலி' வெளியீடு

திரு.சம்பத்குமார்

திரு.அப்துல் ஜப்பார்

முனைவர்.கு.பிரகாஷ்

மாணவர்கள் மற்றும் நேயர்களுடன்

Tuesday, March 03, 2015

தமிழகத்தில் சமுதாய வானொலிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் சமுதாய வானொலிகளின் பயன்பாடு எண்ணிக்கை அதிகரிக்கும் என வானொலி ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 36-வது பொதுச் சபை கூட்டத்தில் நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வானொலியை ஒரு ஊடகமாகக் கொண்டு, தகவல் மற்றும் தகவல் சுதந்திரத்தை மேம்படுத்தவும், ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், வானொலி வலையமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் நாளை உலக வானொலி தினமாக அறிவித்தது.
வானொலி என்ற சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனத்தை மார்க்கோனி 20.7.1937-ம் தேதி உலகுக்கு அளித்தார். கடந்த 77 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி கல்வி அளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலி செயல்பட்டு வருகிறது.
வானொலிக்கு தனி இடம்
இன்று தொலைக்காட்சி, இணையம், கைபேசி என பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு என்று கூறுகிறார் இந்திய- இலங்கை வானொலி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன்.
வானொலிகளின் எதிர்காலம் குறித்து `தி இந்து’ செய்தியாளரிடம் ஜெயகாந்தன் கூறியதாவது:
வானொலிகளின் சேவை உச்சக்கட்டத்தில் இருந்த காலங்களில் தனிநபர்கள் வானொலி வைத்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அதை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடங்கிப்போகும் தருணங்களில் வானொலியின் பங்கு அளப்பரியது. இதனால்தான் இன்றும் உலகளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தொலைக்காட்சி, இணையதளம், கைபேசி போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் வானொலியின் பயன்பாடு குறைந்துள்ளது எனக் கூறுவது தவறானது. மாறாக தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதள வானொலிகள் இயங்கி வருகின்றன. மேலும் வானொலி இல்லாத கைபேசிகள் இன்று வருவதும் கிடையாது.
இந்தியாவில் தற்போது 160-க் கும் மேற்பட்ட சமுதாய வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 25 சமுதாய வானொலி நிலையங்கள் சென்னை, கோவை, திருச்சி, நாகை, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படுகின்றன.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் மட்டும் சமுதாய வானொலிகளுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சமுதாய வானொலி சேவை வழங்க, அலைக் கற்றை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது, அரசு அங்கீகாரப் பட்டியலில் இடம்பெறும் சமுதாய வானொலி சேவைகளுக்கு அரசு விளம்பரங்கள் கிடைக்க வழிவகை செய்வது குறித்தும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் சமுதாய வானொலிகளின் எண்ணிக்கையும், பயன்பாடும் தமிழ கத்தில் மேலும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
/ எஸ்.முஹம்மது ராஃபி
நன்றி தி இந்து 13/2/2015