Sunday, March 22, 2015

தமிழக நேயர்களுக்கு இலங்கை வானொலி

இலங்கை வானொலி தமிழக நேயர்களுக்கு சிற்றலை வரிசை 31 மீட்டரில் ஒலிபரப்பி வருகிறது. இதைப் படிக்கின்ற வாசகர்கள் கூட இலங்கை வானொலியைக் கேட்க ஆசைப்பட்டால் அது நிராசையாகக் கூட வாய்ப்புள்ளது. இன்று பண்பலை எனப்படும் எப்.எம் வானொலிப் பெட்டிகள் தான் எங்கும் வியாபித்துள்ளன. ஏன் நம் கைப்பேசியில் கூட எப்.எம் வானொலிகளை மட்டுமே கேட்க முடிகிறது. ஆனால் மத்தியலை மற்றும் சிற்றலையைக் கேட்க முடியாது.


இன்று இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, வத்திகான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய எட்டு நாடுகளில் இருந்து ஒன்பது வானொலிகள் சிற்றலையில் தமிழ் ஒலிபரப்பினைச் செய்து வருகின்றன. இவை மட்டுமல்லாது மலேசியா மற்றும் சிங்கப்பூர் வானொலிகள் இணையத்தில் 24 மணிநேரமும் தனது சேவையைச் செய்து வருகிறது. ஆனால் இது பற்றி இன்றுள்ள இளைஞர்களுக்கு கண்டிப்பாகத் தெரியாது. இவை அனைத்தும் சிற்றலை மட்டுமல்லாது இணையத்திலும் தனது ஒலிபரப்பினைச் செய்து வருகிறது. ஏன் ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளத்திலும் இந்த வானொலிகளைக் கேட்களாம். ஆனால் அப்படியொரு வானொலி ஒலிக்கிறது என்று அறிமுகப்படுத்துவதற்குக் கூட இன்று ஆட்கள் இல்லை.

இப்படியானதொரு தருணத்தில் நாம் உலக வானொலி தினத்தினைக் கொண்டாடுகிறோம். இன்று தமிழகம் முழுவதும் பண்பலை வானொலிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வருத்தமான செய்தி என்னவெனில் அவை அனைத்தும் வானொலிக்கானப் பணியைச் செய்யவில்லை. இன்றுள்ள தனியார் பண்பலை வானொலிகளில் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளைக் களைந்துவிட்டால் அவர்களிடம் ஒலிபரப்ப சரக்கு இல்லை. இதில் ஒரு சில வானொலிகள் விதிவிலக்கு. ஆனால் இதுவே இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானொலியின் வடிவமே முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது.

உதாரணமாக அங்கு 24 மணி நேரமும் இளைஞர்களுக்கான வானொலி உள்ளது. ஏன் குழந்தைகள், முதியவர்களுக்கு மட்டுமல்லாமல் விளையாட்டு, நாடகம், கலந்துரையாடல், இலக்கியம் என அனைத்துக்கும் தனித்தனியான வானொலிகள் உள்ளது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதானால்,  ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைக்கும் ஒரு வானொலி செயல்பட்டு வருகிறது. அந்த சாலைகளில் செல்லும் வாகனங்களில் அந்த வானொலிகள் ஒலித்தாக வேண்டும். 

போக்குவரத்து காவலர்கள் சோதனையின் போது நீங்கள் அந்த வானொலியைக் கேட்காமல் இருந்தீர்கள் எனில், அபராதத் தொகையைக் கட்டவேண்டியிருக்கும். இன்னும் சொல்வதானால், நீங்கள் அந்த வானொலிகளைச் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது கேட்காமல் செல்லும் பட்சத்தில் விபத்தில் சிக்கிக்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. காரணம் அந்த வானொலியில் உடனுக்குடன் அந்த சாலைப் பற்றியத் தகவல்கள் ஒலிபரப்பாகும். ஆக, வெளிநாட்டு வானொலிகளில் திரை இசையை ஒலிபரப்பாமல் நிகழ்ச்சிளை சுவாரஸ்யமாக வழங்க முடியும்போது, அது ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை? யோசிக்க வேண்டிய விடயம். 

No comments: