Tuesday, March 03, 2015

தமிழகத்தில் சமுதாய வானொலிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் சமுதாய வானொலிகளின் பயன்பாடு எண்ணிக்கை அதிகரிக்கும் என வானொலி ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 36-வது பொதுச் சபை கூட்டத்தில் நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வானொலியை ஒரு ஊடகமாகக் கொண்டு, தகவல் மற்றும் தகவல் சுதந்திரத்தை மேம்படுத்தவும், ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், வானொலி வலையமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் நாளை உலக வானொலி தினமாக அறிவித்தது.
வானொலி என்ற சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனத்தை மார்க்கோனி 20.7.1937-ம் தேதி உலகுக்கு அளித்தார். கடந்த 77 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி கல்வி அளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலி செயல்பட்டு வருகிறது.
வானொலிக்கு தனி இடம்
இன்று தொலைக்காட்சி, இணையம், கைபேசி என பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு என்று கூறுகிறார் இந்திய- இலங்கை வானொலி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன்.
வானொலிகளின் எதிர்காலம் குறித்து `தி இந்து’ செய்தியாளரிடம் ஜெயகாந்தன் கூறியதாவது:
வானொலிகளின் சேவை உச்சக்கட்டத்தில் இருந்த காலங்களில் தனிநபர்கள் வானொலி வைத்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அதை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடங்கிப்போகும் தருணங்களில் வானொலியின் பங்கு அளப்பரியது. இதனால்தான் இன்றும் உலகளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தொலைக்காட்சி, இணையதளம், கைபேசி போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் வானொலியின் பயன்பாடு குறைந்துள்ளது எனக் கூறுவது தவறானது. மாறாக தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதள வானொலிகள் இயங்கி வருகின்றன. மேலும் வானொலி இல்லாத கைபேசிகள் இன்று வருவதும் கிடையாது.
இந்தியாவில் தற்போது 160-க் கும் மேற்பட்ட சமுதாய வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 25 சமுதாய வானொலி நிலையங்கள் சென்னை, கோவை, திருச்சி, நாகை, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படுகின்றன.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் மட்டும் சமுதாய வானொலிகளுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சமுதாய வானொலி சேவை வழங்க, அலைக் கற்றை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது, அரசு அங்கீகாரப் பட்டியலில் இடம்பெறும் சமுதாய வானொலி சேவைகளுக்கு அரசு விளம்பரங்கள் கிடைக்க வழிவகை செய்வது குறித்தும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் சமுதாய வானொலிகளின் எண்ணிக்கையும், பயன்பாடும் தமிழ கத்தில் மேலும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
எஸ்.முஹம்மது ராஃபி
நன்றி தி இந்து 13/2/2015

No comments: