Sunday, March 29, 2015

வானொலியின் வடிவம் மாற்றமடைந்துள்ளது

இன்று வானொலியின் வடிவமும் மாற்றமடைந்துள்ளது, 1960களில் நாம் கேட்ட வால்வ் வானொலிப் பெட்டிகள் இன்று இருந்த இடம் காணாமல் சென்றுவிட்டது, 1980களில் கேட்ட டிரான்சிஸ்டர் வானொலிகளும் இன்றில்லை. தற்பொழுது டிஜிட்டல் வானொலிகளின் காலம். வானொலிப் பெட்டிகள் மட்டும் டிஜிட்டல் ஆகவில்லை, இன்று ஒலிபரப்பும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.



டி.ஆர்.எம். எனும் புதிய தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதன் மூலம் நேயர்கள் வானொலியில் ஒலிபரப்பினைக் கேட்கும் போதே அந்த நிகழ்ச்சியின் ஸ்கிரிப்டினை அச்சிட்டுக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் கலையகத்தில் உள்ள அறிவிப்பாளரை உங்களது வானொலிப் பெட்டி மூலமே நயா பைசா செலவில்லாமல் தொடர்பு கொள்ளவும் முடியும். மேலும் அவர் கலையகத்தில் என்ன செய்து கொண்டிறிக்கிறார் எனவும் பார்க்கவும் முடியும். இவையெல்லாம் இன்னும் ஓர், இரு வருடங்களில் டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தால் சாத்தியமாக உள்ளது. உலகிலேயே இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. இதிலும் ஒரு வருத்தம் என்னவெனில், கடந்த ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்டத் திட்டம் என்பதால் இப்பொழுது இதிலும் ஒரு சுனக்கம் ஏற்பட்டுள்ளது. ஆக, ஒன்று மட்டும் புரிகிறது, இந்தியன் எந்த ஒன்றிலும் முதலாவதாக வந்துவிடக்கூடாது என்பதில் கவனத்துடன் உள்ளார்கள்.


இன்றை இளைஞர்களுக்கு வானொலியானது எட்டாக் கனியாக இல்லை. இன்றுள்ள சுமார்ட் போன்களில் வானொலிகளை எளிதாகக் கேட்க பல்வேறு வழிகள் பிறந்துள்ளது. இதனால் ஒரு தனி மனிதனும் வானொலியைத் தனியாகத் தொடங்கி நடத்த முடியும் என்ற அளவிற்கு நம் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘தமிழ்யாழ்‘ (https://soundcloud.com/tamizhyazh) இணைய வானொலியைக் கூறலாம். இதற்கான நிகழ்ச்சிகளை மாணவர்களேத் தயாரித்து சவுண்ட் கிளவுட் எனும் இலவச மென்பொருளின் துணைகொண்டு பதிவேற்றி உலகமெலாம் ஒலிக்கச்செய்கின்றனர். இந்த வானொலிக்கான நிகழ்ச்சிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்களும் அவ்வப்போது தயாரித்து வளங்குகின்றனர்.


பாக்கெட் ஆர்.எக்ஸ் டி.எக்ஸ், எக்கோ லிங்க், ரேடியோ டியுனர்ஸ் மற்றும் ஹாம்ஸ்பியர் போன்ற ஆண்டிராய்ட் செயலிகள் மூலம் ஹாம் வானொலிகளையும் நம் கைப்பேசியிலேயேக் கேட்கவும் ஒலிபரப்பவும் கூடிய வசதி இன்று வந்துள்ளது. மேலும் டியூன் இன் எனும் ஆண்டிராய்ட் செயலி மூலம் இன்று நாம் உலகின் 30,000க்கும் மேற்பட்ட வானொலிகளைக் கேட்கக் கூடிய வசதி கிடைத்துள்ளது. ஆக, இந்த ஆண்டின் உலக வானொலி தினமானது இளைஞர்களை மையப்படத்திக் கொண்டாட யுனஸ்கோ அறிவித்துள்ளது சரியானதே என்று புலனாகிறது. நாமும் யுனஸ்கோவுடன் இணைந்து உலக வானொலி தினத்தினை இளைஞர்களுக்காக கொண்டாடுவோம்.

No comments: