Thursday, May 14, 2015

சன் குழும பண்பலை சேவைக்கு அனுமதி மறுப்பு

சன் குழும நிறுவனங்களின் தலைவர் கலாநிதி மாறனின் நிறுவனம் நடத்தி வரும் சுமார் 50 பண்பலை (எஃப்.எம்) வானொலி சேவைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்க மத்திய உள்துறை மறுத்துள்ளது. 
 ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்புடைய விவகாரத்தில் கலாநிதி மாறன், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், உள்துறையின் இந்நடவடிக்கை, சன் குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
 இது தொடர்பாக மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியதாவது: "கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறியதற்கு கைமாறாக கலாநிதி நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது. 
 இது தொடர்பாக கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி, தயாநிதி மாறன், அவர்களின் குடும்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் சொத்துகளில் வழக்குடன் தொடர்புடைய ரூ.742 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 
 இப்பின்னணியில் சன் குழும நிறுவனங்கள் சார்பில் பண்பலை வானொலி சேவையைப் புதுப்பிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது' என்று அந்த வட்டாரங்கள் கூறின.
 ஜேட்லி தலையீடு: இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி மத்திய நிதியமைச்சரும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லியிடம் சன் குழும நிறுவனங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த மாதம் முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, மத்திய உள்துறையின் நடவடிக்கை பண்பலை வானொலி சேவையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேட்லி கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 இதைத் தொடர்ந்து, "ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கையும், பண்பலை வானொலி சேவை உரிமத்தை புதுப்பிக்கக் கோரி சன் குழும நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்களையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலித்து உரிய பதிலை அனுப்பி வைக்க வேண்டும்' என்று அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்கவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா உறுதிப்படுத்திய போதும், மேற்கொண்டு தகவலைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
 விதிகள் கூறுவது என்ன?: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விதிகளின்படி பண்பலை வானொலி சேவைகளுக்கு உரிமம் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும் முன்பு, அதில் இடம் பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணி குறித்து மத்திய உள்துறை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். இதேபோல, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிதி ஆதாரம், நிதிப் பின்புலம் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படும். இதில் திருப்திகரமான பதிலை உள்துறை அளித்தால் மட்டுமே விண்ணப்பங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும். 
 இந்நிலையில், ஏற்கெனவே பண்பலை வானொலி சேவை வழங்கி வரும் சன் குழும நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது உரிமையாளர்கள் தரப்பில் செய்யப்பட்ட முதலீடு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ மட்டும்தான் உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரும் விண்ணப்பத்தை மத்திய உள்துறை பரிசீலித்து அறிக்கை அளிக்க அதிகாரம் உள்ளது. 
 ஆனால், "சன் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் நிலையில் எத்தகைய மாற்றம் செய்யப்பட்டது? அதன் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளன' என்ற விவரத்தை வெளியிட மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Source: http://www.dinamani.com/ 14-5-2015

No comments: